Last Updated : 16 Jun, 2019 05:12 PM

 

Published : 16 Jun 2019 05:12 PM
Last Updated : 16 Jun 2019 05:12 PM

ரோஹித் சர்மா அபார சதம் : சச்சின், தோனி சாதனை முறியடிப்பு

மான்செஸ்டரில் நடந்து வரும் பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பைப் போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா அபாரமாக சதம் அடித்து அசத்தினார். அதுமட்டுமல்லாமல்  சச்சின், தோனியின் சாதனையையும் முறியடித்துள்ளார்.

உலகக் கோப்பைப் போட்டியின் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் மான்செஸ்டர் ஓல்டுடிராபோர்ட் நகரில் நடந்து வருகிறது.

டாஸ்வென்ற பாகிஸ்தான் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணிக்கு ரோஹித் சர்மா, ராகுல் இருவரும் நல்ல தொடக்கத்தை அளித்தார்கள். தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா பவுண்டரிகளாக விளாசி 34 பந்துகளில் அரைசதம் அடித்தார். மெல்ல அதிரடிக்கு திரும்பிய ராகுலும் 61 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

முதல் விக்கெட்டுக்கு இருவரும் 136 ரன்கள் சேர்த்தனர். ராகுல் 57 ரன்களில் ஆட்டமிழந்தார்.  அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா 85 பந்துகளில் சதம் அடித்து ஒருநாள் அரங்கில் தனது 24-வது சதத்தை பதிவு செய்தார். உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் அடிக்கும் முதல் சதம் இதுவாகும்.

உலகக் கோப்பைப் போட்டியில் தனது 2-வது சதத்தை ரோஹித் சர்மா பதிவு செய்தார். ஏற்கனவே தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ரோஹித் சர்மா சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் ராகுல், ரோஹித் சர்மா முதல் விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 136 ரன்கள் சேர்த்ததே உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக தொடக்க விக்கெட் சேர்த்தே அதிகபட்சமாகும்.

இதற்கு முன் 1996-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் சித்து, சச்சின் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்ததே முதல் விக்கெட்டுக்கு சாதனையாக இருந்தது. அதை ராகுலும், ரோஹித் சர்மாவும் இன்று முறியடித்து சாதனை செய்தனர்.

அதுமட்டுமல்லாமல் ரோஹித் சர்மா 2 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் தோனியின் சாதனையையும் அவர் முறியடித்தார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்திய வீரர்களில் தோனி 355 சிக்ஸர்கள் அடித்து முதலிடத்தில் இருந்தார். அந்த சாதனையை ரோஹித் சர்மா 356 சிக்ஸர்கள் அடித்து முறியடித்தார்.

சச்சின் 254 சிக்ஸர்களுடன் மூன்றாவது இடத்திலும், யுவராஜ் சிங் 251 சிக்ஸர்களும், கங்குலி 247, சேவாக்243 சிக்ஸர்களும் அடித்தனர் .

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x