Last Updated : 24 Jun, 2019 05:11 PM

 

Published : 24 Jun 2019 05:11 PM
Last Updated : 24 Jun 2019 05:11 PM

27 ஆண்டுகள் வரலாற்றை மாற்றுமா இங்கிலாந்து?- ஆஸ்திரலியாவுடன் நாளை மோதல்

கிரிக்கெட்டில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதினால் இருக்கும் பரபரப்பு, நாளை நடக்கும் போட்டியில் இருக்கப் போகிறது.

உலகக் கோப்பைப் போட்டியில் 27ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த முடியாமல் போராடிவரும் இங்கிலாந்து அணி நாளை லண்டனில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றால், கடந்த 1992-ம் ஆண்டில் இருந்து ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த முடியவில்லை என்ற வேதனையை ஆற்றிக்கொள்ளும்.

இந்த போட்டி லண்டன் லாட்ஸ் மைதானத்தில்  இந்திய நேரப்படி மாலை 3. மணிக்கு நடக்கிறது.

இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை இதுவரை 6 போட்டிகளில் மோதி 4 வெற்றிகள், 2 தோல்விகள் என மொத்தம் 8 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருக்கிறது.

அரையிறுதிக்குள் செல்வதற்கு இங்கிலாந்து அணிக்கு மீதமிருக்கும் 3 ஆட்டங்களையும் வெல்வது கட்டயமாகும்.

ஆனால், இந்தியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய 3 அணிகளையும் இங்கிலாந்து அணி வெல்வது சாதாரண  விஷயமல்ல. இந்த 3 அணிகளையும் இங்கிலாந்து அணி உலகக் கோப்பைப் போட்டியில் வீழ்த்தி 27 ஆண்டுகள் ஆகிறது என்பதால், கால்நாற்றாண்டு வரலாற்றை மாற்றி எழுத வேண்டிய நிர்பந்தத்தில் இங்கிலாந்து இருக்கிறது.

இங்கிலாந்து அணிக்கு இது கரணம் தப்பினால் மரணம் என்ற கதைதான். ஒரு போட்டியில் தோற்றால்கூட, அடுத்துள்ளஅணிகளின் தோல்விகளை எதிர்பார்த்து இருக்க வேண்டி வரும். இந்த 3 அணிகளுமே உலகக் கோப்பைப் போட்டியில் சூப்பர்ஃபார்மில் இருப்பதால், வீழ்த்துவது எளிதாகன காரியமில்லை என்றால், வீழ்த்தித்தான் ஆக வேண்டிய நிலையில் இங்கிலாந்து இருக்கிறது.

இங்கிலாந்து அணி 4 போட்டிகளில் வென்றாலும், பாகிஸ்தானிடம் 14 ரன்களில் தோற்றதும், இலங்கையிடம் 212 ரன்களில் ஆட்டமிழந்து தோல்வி அடைந்ததையும் நம்பர்ஒன் அணியின் கேப்டன் மோர்கனால் ஜீரனித்துக்கொள்ள முடியாது. மிகக் கடுமையான அழுத்தத்தோடுதான் இங்கிலாந்து நாளை களமிறங்கும்.

இங்கிலாந்து அணியின் பேர்ஸ்டோ, ரூட், மோர்கன், பட்லர், பென் ஸ்டோக்ஸ் என 4 வீரர்களும் அருமையாக பேட் செய்து வருகிறார்கள். உலகக் கோப்பை ரன் குவிப்பில் இந்த பட்லரைத் தவிர்த்து 3 பேரும் டாப் 10 வரிசையில் இருக்கின்றனர்.

ஜேஸன் ராய் காயத்தால் இந்த ஆட்டத்தில் விளையாடதது பின்னடைவுதான். ஜேம்ஸ் வின்ஸ் வந்தாலும், ராய் இடத்தை நிரப்பவில்லை.

மேலும், நடுவரிசையில் வோக்ஸ், மொயின் அலி, ஆர்ச்சர் ஆகியோர் கடந்த போட்டிகளில் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. நாளை பேட்டிங்கில் ஜொலிக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர்.

பந்துவீச்சிலும் மார்க் உட், ஆர்ச்சர், வோக்ஸ், ஸ்டோக்ஸ், பிளங்கெட் என துல்லியமாக வீசக்கூடிய வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். சுழற்பந்துவீச்சுக்கு அதில் ரஷித், மொயின் அலியைத் தவிர யாருமில்லை. ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு சவால் விடுக்கும் அளவுக்கு இங்கிலாந்து பந்துவீச்சாளர்களும் இருப்பதால், போட்டி சுவாரஸ்யமாக இருக்கும்.

கடந்த காலத்தைப் பார்ததால், கடைசியாக ஆஸ்திரேலியாவுடன் விளையாடிய 10 போட்டிகளில் 9 போட்டிகளில் இங்கிலாந்து வென்றுள்ளது. கடந்த 12 மாதங்களுக்கு முன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டிரன்ட் பிரிட்ஜ் ஆடுகளத்தில் 6 விக்கெட் இழப்புக்கு 481 ரன்களை இங்கிலாந்து குவித்தது. இதுபோன்ற சாதகமான விஷயங்களை வைத்துத்தான் இங்கிலாந்து தன்னம்பிக்கையுடன் களமிறங்க வேண்டும்.

தென் ஆப்பிரிக்க அணியும், இங்கிலாந்து அணியும் ஏறக்குறைய ஒரேமாதிரி குணாதிசயங்கள் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். ஏனென்றால், அணியில் நெருக்கடி என வரும்போது, பதற்றம் அடைந்து வெற்றியின் அருகே இருந்தாலும் அதை தவறவிடுகிறார்கள். ஆதலால், நாளை  போட்டியில் இங்கிலாந்து அணி தங்களை சோக்கர்ஸ் என்று அழைக்கவிடாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.

ஆஸ்திரேலிய அணியைப் பொருத்தவரை கடந்த 1992-ம் ஆண்டில் இருந்து இங்கிலாந்து அணியை உலகக் கோப்பைப் போட்டியில் வீழ்த்தி வருவதே மிகப்பெரிய ஊக்கமாக அமையும்.

உலகக் கோப்பைப் போட்டியில் அனைத்து அணிகளுக்கும் சவால் விடும் வகையில் பந்துவீச்சு, பேட்டிங்கிலும்சிறப்பாக இருந்து வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரோன் பிஞ்ச், வார்னர் மிரட்டலான ஃபார்மில் இருந்துவருகிறார்கள். அதன்பின் ஸ்மித், மேக்ஸ்வெல், கேரி என பேட்டிங் வரிசை வலுவாக இருக்கிறது. காயத்தில் இருந்து மார்க் ஸ்டோய்னிஸ் ஆஸ்திரேலிய அணிக்குள் வந்திருப்பது மேலும் வலுசேர்க்கும்.

பந்துவீச்சில் மிட்ஷெல் ஸ்டார்க் உலகக் கோப்பைப் போட்டியில் அதிகமான விக்கெட்டுகளை எடுத்த வரிசையில் இருந்துவருகிறார். இங்கிலாந்து என்றாலே ஆஸ்திரேலயி பந்துவீச்சாளர்களுக்கு இயல்பாக உற்சாகம் தொற்றிக்கொள்ளும். ஆதலால், நாளை ஸ்டார்க்கின் பந்துவீச்சில் அனல் பறக்கும்.

இங்கிலாந்தின் ஆர்ச்சர், ஸ்டார்க் இடையே கடும்போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிகவும் இக்கட்டான தருணத்தில் ஸ்டார்க்கின் விக்கெட் வீழத்தும் திறன் முத்தாய்ப்பாகும்.

இந்தியா, பாகிஸ்தான் போட்டியைப் போல், இந்த ஆட்டத்திலும் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்பது உறுதி.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x