

சீனாவின் முன்னணி வீராங்கனையும், கிராண்ட்ஸ்லாம் போட்டியின் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்ற ஒரே ஆசியருமான லீ நா(32), சர்வதேச டென்னிஸிலிருந்து ஓய்வு பெற்றார். கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பட்டம் வென்றதன் மூலம் சர்வதேச டென்னிஸில் ஆசியாவின் புகழை நிலை நாட்டிய லீ நா, முழங்காலில் தொடர்ச்சியாக காயம் ஏற்பட்டதன் விளைவாக ஓய்வு முடிவை எடுத்துள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் கூறியிருப்பதாவது: எனது வலது முழங்காலில் பிரச்சினை ஏற்பட்டது டென்னிஸ் உலகில் உள்ள அனைவரும் அறிந்ததே. எனது முழங்கால் காயத்துக்காக 4 முறை அறுவை சிகிச்சை செய்துவிட்டேன். காலில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியை தணிப்பதற்காக வாரத்துக்கு 100-க்கும் மேற்பட்ட ஊசிகள் போட்டுக் கொண்டேன். ஆனாலும் முடிய வில்லை. எனது உடல் ஒத்துழைக்காததால் ஓய்வை முடிவை எடுத்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.
2011-ல் ஆஸ்திரேலிய ஓபனில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியதன் மூலம் ஒற்றையர் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் ஆசியர் என்ற பெருமையைப் பெற்ற லீ நா, அதே ஆண்டில் நடைபெற்ற பிரெஞ்சு ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றார். அதன்பிறகு கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபனில் வென்றதன் மூலம் 2-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார்.