ஹரிகேன்ஸ் த்ரில் வெற்றி

ஹரிகேன்ஸ் த்ரில் வெற்றி
Updated on
1 min read

சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கேப் கோப்ராஸை தோற்கடித்தது ஹோபர்ட் ஹரி கேன்ஸ்.

ஹைதராபாதில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கோப்ராஸ் அணியில் ஆம்லா 8 ரன்களில் ஆட்டமிழந்தாலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ரிச்சர்ட் லெவி 30 பந்துகளில் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்வரிசையில் ராபின் பீட்டர்சன் 25 ரன்களும், பிலாண்டர் 32 ரன்களும் சேர்க்க, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது கேப் கோப்ராஸ்.

பின்னர் பேட் செய்த ஹரிகேன்ஸ் அணியில் பென் டங்க் தொடர்ச்சியாக பவுண்டரிகளை பறக்கவிட, 4 ஓவர்களில் 46 ரன்களை எட்டியது. அடுத்த ஓவரில் டிம் பெய்ன் 7 ரன்களில் ஆட்டமிழக்க, பிளிஸ்ஸார்டு களம்புகுந்தார். அவர் ஒருபுறம் நிதானமாக ஆட, பென் டங்க் 35 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் சேர்த்து வீழ்ந்தார்.

பின்னர் வந்த ஷோயிப் மாலிக் 8, டிராவிஸ் பேர்ட் 7 ரன்களில் வெளியேற, ஜொனாதன் வெல்ஸ் களம்புகுந்தார். கடைசி 3 ஓவர்களில் ஹரிகேன்ஸ் வெற்றி பெற 44 ரன்கள் தேவைப்பட்டன. பிலாண்டர் வீசிய 18-வது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் அடித்த பிளிஸ்ஸார்டு 39 பந்துகளில் அரைசதம் கண்டார். ஆனால் அடுத்த பந்தில் அவர் கேட்ச் ஆனார். அதை நோபால் என நடுவர் அறிவிக்க, தப்பிப் பிழைத்த பிளிஸ்ஸார்டு, அதே ஓவரில் மேலும் ஒரு சிக்ஸரையும், பவுண்டரியையும் பறக்கவிட்டார். அடுத்த ஓவரில் பிளிஸ்ஸார்டு இரு சிக்ஸர்களையும், வெல்ஸ் ஒரு சிக்ஸரையும் விரட்ட, ஒரு ஓவர் மீதமிருந்த நிலையில் 4 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது ஹரிகேன்ஸ். பிளிஸ்ஸார்டு 48 பந்துகளில் 5 சிக்ஸர், 4 பவுணடரிகளுடன் 78, வெல்ஸ் 17 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இன்றைய ஆட்டம்: சூப்பர் கிங்ஸ்-டால்பின்ஸ்

இடம்: பெங்களூர், இரவு 8

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in