

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் சென்னை சார்பில் பங்கேற்கவுள்ள அணிக்கு சென்னை எப்.சி. என பெயரிடப்பட்டுள்ளது. அது விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என அந்த அணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக அந்த அணியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், “அணியின் பெயரில் சென்னை தொடர்பான வாசகமும் இடம்பெற வேண்டும் என அணியின் உரிமையாளர்கள் விரும்புகின்றனர். அணியின் முன்னணி வீரரும், பயிற்சியாளருமான மார்க்கோ மெட்டாரஸியின் வருகைக்காக காத்திருக்கிறோம். அவர் அணியில் இணைந்த பிறகு அணியின் அறிமுக விழா பிரம்மாண்டமான முறையில் நடைபெறும்” என்றார்.
சென்னை அணி பெங்களூரில் நேற்று முன்தினம் பயிற்சியை தொடங்கியுள்ளது. சென்னை அணியின் உரிமையாளர்களில் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டி வரும் அக்டோபர் 12-ம் தேதி தொடங்குகிறது.