Published : 18 Mar 2018 06:58 AM
Last Updated : 18 Mar 2018 06:58 AM

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வரும் மேற்கிந்தியத் தீவுகள் அணி: 2 டெஸ்ட், 5 ஒரு நாள், 3 டி20 போட்டியில் விளையாடுகிறது

இந்தியாவுக்கு வரும் அக்டோபரில் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக் கெட் அணி சுற்றுப்பயணம் வருகிறது. அந்த அணி இந்தியாவுடன் 2 டெஸ்ட், 5 ஒரு நாள், 3 டி 20 போட்டிகளில் விளையாட வுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி கடைசியாக 2014-ல் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்திருந்தது. தர்மசாலாவில் 4-வது ஒரு நாள் போட்டி நடைபெற்றபோது, மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியத்துக்கும், வீரர்களுக்கும் இடையேயான ஊதிய ஒப்பந்தத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து சுற்றுப்பயணம் பாதியிலேயே முடிவடைந்து, அவர்கள் நாடு திரும்பினர்.

அதன் பிறகு இந்தியாவுக்கு மேற்கிந்தியத் தீவுகள் அணி 2016-ல் வந்தது. அப்போது நடைபெற்ற உலக டி20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றது அந்த அணி. அதன்பிறகு இந்திய அணி 2 முறை மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சென்றது. டெஸ்ட் போட்டிகளுக்காக ஒருமுறையும், 5 ஒரு நாள் போட்டிகள், 3 டி20 போட்டிகளுக்காக 2-வது முறையும் இந்தியா பங்கேற்று 2 தொடரையும் கைப்பற்றி யது.

ஐபிஎல் போட்டியை அடுத்து இந்தியா பங்கேற்கவுள்ள கிரிக்கெட் போட்டிகள் குறித்து விவாதிக்க மும்பையில் நேற்று பிசிசிஐ சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் பிசிசிஐ பொறுப்பு தலைவர் சி.கே. கன்னா, தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவர் சவுரவ் கங்குலி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் இந்திய அணியின் சுற்றுப்பயண விவரம் குறித்து சி.கே. கன்னா கூறியதாவது: வரும் ஜூனில் இந்தியா, ஆப்கானிஸ்தான் மோதும் பகல்-இரவு டெஸ்ட் போட்டி நடைபெறும். இது ராஜ்கோட் அல்லது ஹைதராபாதில் நடைபெறும்.

அதைத் தொடர்ந்து அக்டோபரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியா வருகிறது. முதலில் 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெறும். அதைத் தொடர்ந்து 5 ஒரு நாள் போட்டிகள் மும்பை, கவுகாத்தி, கொச்சி, இந்தூர், புனே நகரங்களில் நடைபெறும். இதன் பின்னர் கொல்கத்தா, சென்னை, கான்பூரில் 3 டி20 போட்டிகள் நடைபெறும்.

ஆஸ்திரேலியா

இதைத் தொடர்ந்து இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குச் செல்கிறது. அங்கு டி20 தொடரில் இந்தியா விளையாடும்.இதையடுத்து அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ஆஸ்திரேலிய அணி இந்தியா வருகிறது. அப்போது இந்தியாவுடன் 5 ஒரு நாள் போட்டிகள், 2 டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியா விளையாடும்.

ஒரு நாள் போட்டிகள் மொஹாலி (பிப்ரவரி 24), ஹைதராபாத் (பிப்ரவரி 27), நாக்பூர் (மார்ச் 2), டெல்லி (மார்ச் 5), ராஞ்சியில் (மார்ச் 8) நடைபெறும், மார்ச் 10-ல் முதல் டி20 போட்டி பெங்களூரிலும், 2-வது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் மார்ச் 13-லும் நடைபெறும் என்றார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x