Published : 21 Mar 2018 09:28 PM
Last Updated : 21 Mar 2018 09:28 PM

2019 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதிபெற்றது மே.இ.தீவுகள் அணி

 

2019-ம் ஆண்டு லண்டனில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு மேற்கிந்தியத்தீவுகள் அணி தகுதி பெற்றது.

ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் இன்று நடந்த பரபரப்பான ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியை டக்வொர்த் லீவிஸ் முறையில் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து மேற்கிந்தியத்தீவுகள் அணி தகுதி பெற்றது.

2019-ம் ஆண்டு லண்டனில் மே 30-ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதிவரை உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்கிறது. வழக்கமாக 14 அணிகள் பங்கேற்கும் நிலையில், இந்த முறை 10 அணிகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதில் ஒருநாள் தரவரிசையில் முதல் 8 இடங்களில் இருக்கும் அணிகள் நேரடியாகத் தகுதிபெற்றுவிட்டன. இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் நேரடியாக தகுதி பெற்றுவிட்டன. மீதமுள்ள 2 அணிகள் தகுதிச்சுற்று மூலம் தேர்வு செய்யப்படும்.

இந்நிலையில், தகுதிச்சுற்றுபோட்டிகள் ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் கடந்த 3-ம் தேதி தொடங்கியது. இதில் ஏ பிரிவில் அயர்லாந்து, நெதர்லாந்து, பப்புவா நியூ கினியா, ஐக்கிய அரபு அமீரகம், மே.இ.தீவுகள், பி பிரிவில் ஆப்கானிஸ்தான், நேபாளம்,ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே அணிகளும் இடம் பெற்று இருந்தன.

இதில் சூப்பர் சிக்ஸ்பிரிவுக்கு மே.இ.தீவுகள், ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் தகுதியாகின.

இந்நிலையில் ஹராரே நகரில் மே.இ.தீவுகள் அணிக்கும் ஸ்காட்லாந்து அணிக்கும் போட்டி நடந்தது. இதில் 4 போட்டிகளில் விளையாடி 6 புள்ளிகளுடன் மே.இ.தீவுகள் இருந்ததால், இந்த போட்டியில்வெற்றி பெற்றால் எளிதாக உலகக்கோப்பைக்கு தகுதியாகும் என்ற நிலை இருந்தது.

அதேசமயம், ஸ்காட்லாந்து வென்றாலும் மே.இ.தீவுகளுக்கு சிக்கல் ஏற்படும் நிலை இருந்தது.

இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த மே.இ.தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 48.4 ஓவர்களுக்கு 198 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அணியில் லீவிஸ் (66), சாமுவேல்ஸ் (51) ஆகியோர் மட்டுமே அரைசதம் அடித்தனர். கிறிஸ் கெயில், பாவெல், ஹோப், பிராத்வெய்ட் உள்ளிட்ட வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். ஸ்காட்லாந்து தரப்பில் வீல், ஷெரீப் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

199 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ஸ்காட்லாந்து அணி களமிறங்கியது. மே.இ.தீவுகள் வீரர் கீமர் ரோச் பந்துவீச்சில் முதல் 10 ஓவர்களுக்குள்ளேயே 3 விக்கெட்டுகளை இழந்து ஸ்காட்லாந்து அணி தடுமாறியது. ஆனாலும், நிதானமாக பேட் செய்த அந்த அணி வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தனர்.

சுழற்பந்து வீச்சாளர் நர்ஸ் தனது பங்குக்கு 2 விக்கெட்டுகளை சாய்த்து ஸ்காட்லாந்து அணிக்கு நெருக்கடி அளித்தார். இதனால், அந்த அணி 105 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

35.2 ஓவர்களுக்கு 125 ரன்கள் சேர்த்திருந்த போது, மழை குறுக்கிட்டது. மன்சே 32 ரன்களுடனும், லீஸ்க் 14 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

ஆனால், நீண்டநேரமாக மழை தொடர்ந்து பெய்ததையடுத்து, டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் மே.இ.தீவுகள் வென்றதாக நடுவர்கள் அறிவித்தனர். இதையடுத்து, உலகக் கோப்பைப் போட்டிக்கு மே.இ.தீவுகள் அணி 9-வது அணியாகத் தகுதி பெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x