Published : 16 Mar 2018 09:15 AM
Last Updated : 16 Mar 2018 09:15 AM

பவர்பிளேவில் அசத்துவது அதிர்ஷ்டம்: மனம் திறக்கிறார் இந்திய சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர்

பவர்பிளேவில் விக்கெட்கள் எடுக்கும் திறனை தான் கொண்டிருப்பது அதிர்ஷ்டவசமானது என தெரிவித்துள்ளார் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர்.

இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி 20 தொடரில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தர் பவர் பிளேவில் சிறப்பாக பந்து வீசி வருகிறார். 18 வயதான வாஷிங்டன் சுந்தர், முத்தரப்பு டி 20 தொடரில் இதுவரை 7 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். இதில் வங்கதேச அணிக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் கைப்பற்றிய 3 விக்கெட்களும் அடங்கும். இந்தத் தொடரில் குறைவாக ரன்கள் கொடுத்தவர்களின் பட்டியலிலும் வாஷிங்டன் சுந்தரே முதலிடம் வகிக்கிறார். அவர் வீசியுள்ள 16 ஓவர்களில் 11 ஓவர்கள் பவர் பிளேவில் வீசப்பட்டதாகும். சராசரியாக ஓவருக்கு 5.87 ரன்கள் வழங்கி உள்ளார்.

இந்நிலையில் பவர்பிளேவில் விக்கெட்கள் எடுக்கும் திறனை தான் கொண்டிருப்பது அதிர்ஷ்டவசமானது என தெரிவித்துள்ளார் வாஷிங்டன் சுந்தர். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

பவர் பிளே பகுதியில் வீசுவது சவாலானதுதான். ஆனால் அதுபோன்ற சவால்களை எதிர்கொள்வதற்காகவே கிரிக்கெட் விளையாடுகிறோம். நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பை பெறும்போது இதுபோன்ற சவால்களை எதிர்கொள்ள வேண்டும். இந்த சவால்களை வெல்லும் போது உங்களுக்கு அதிக அளவிலான மனதிருப்தி கிடைக்கும். பவர் பிளேவில் விக்கெட் வீழ்த்தும் திறனை கொண்டிருப்பது எனது அதிர்ஷ்டம் என்பதை நான் ஒப்புக்கொள்ள வேண்டும்.

ஒரு பேட்ஸ்மேன் என்ன நினைக்கிறார் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும், அதிலும் முக்கியமாக பவர் பிளேவில். ஒரு ஓவரின் 6 பந்துகளிலும் பவுண்டரியோ, சிக்ஸரோ அடிக்க பேட்ஸ்மேன் முயற்சி செய்வார். இதனால் பேட்ஸ்மேன் என்ன நினைக்கிறார் என்பதை நான் அறிந்து கொள்வது முக்கியம். நானும் ஒரு பேட்ஸ்மேனாக இருப்பதால் என் பந்து வீச்சை பேட்ஸ்மேன் எப்படி எதிர்கொள்வார், எந்த ஷாட்டை அடிப்பார் என என்னால் யூகிக்க முடியும்.

சொந்த மண்ணில் அதிக அளவிலான லீக் போட்டிகளில் விளையாடுகிறேன். பவர் பிளேவில் இரண்டு ஓவர்களும், ஆட்டத்தின் கடைசி பகுதியில் இரு ஓவர்களும் வீசுவேன். இந்த விஷயங்கள் தான் சிறந்த கிரிக்கெட் வீரராக உதவுகிறது. ஒவ்வொரு நாளும் பந்து வீச்சில் சராசரியாக 6 ரன்களுக்குள் வழங்கினால் சிறப்பான உணர்வாக இருக்கும். இது எனக்கு மிகவும் முக்கியமானது. யுவேந்திரா சாஹல் ஏற்கெனவே சிறப்பாக வீசி வருகிறார். நாங்கள் இருவரும் சேர்ந்து வீசும் 8 ஓவர்களும் மிக முக்கியமானது. இருவருமே தற்போது சிறப்பாக வீசி வருகிறோம்.

பிரேமதாசா ஆடுகளத்தில் எவ்வளவு ரன்கள் குவித்தாலும் அது பாதுகாப்பானது கிடையாது. இலங்கை அணிக்கு எதிராக வங்கதேச அணி 215 ரன்கள் இலக்கை துரத்தியதை பார்த்தாலே இது புரியும். எனவே நாங்கள் சரியாக திட்டமிட்டோம். பல வருடங்களாக நீங்கள் பார்த்தீர்கள் என்றால், ஆஃப் ஸ்பின்னர்கள் எல்லா வடிவிலான கிரிக்கெட்டிலும் திறன் மேம்பட்டவர்களாக உள்ளனர். திறன் தான் முக்கியம். ரிஸ்ட் சுழற்பந்து சிறப்பானதுதான்.

ஆடுகளத்தை அறிந்து கொள்ளும் திறனில்தான் அனைத்தும் உள்ளது. அனைத்து நாட்களிலும் முன்னேற்றம் காண வேண்டும். என்ன திறமையை கொண்டிருக்கிறோம் என்பதை விட கடினமாக உழைக்க வேண்டும். நாங்கள் எங்களது திறனுக்கு தகுந்தபடியும், வலுவாகவும் விளையாடும் பட்சத்திலும், போட்டியின் நாள் எங்களுக்கு சிறப்பாக அமையும் பட்சத்திலும் நிச்சயம் முத்தரப்பு டி 20 தொடரை வெல்வோம்.

இவ்வாறு வாஷிங்டன் சுந்தர் கூறினார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x