Published : 17 Mar 2018 12:42 AM
Last Updated : 17 Mar 2018 12:42 AM

மோதல், வாக்குவாதம், சர்ச்சை: பரபரப்பான போட்டியில் மஹ்முதுல்லா அதிரடியில் வ.தேசம் வெற்றி: இறுதியில் இந்தியாவைச் சந்திக்கிறது

கொழும்புவில் நடைபெறும் நிதாஹஸ் டிராபி டி20 முத்தரப்பு தொடரில் இரு அணி வீரர்களிடையேயான கடைசி நேர மோதல்களை மீறி வங்கதேச வீரர் மஹ்முதுல்லா கடைசி ஓவரில் 4 பந்துகளில் தேவையான 12 ரன்களை விளாசி தன் அணியை இறுதிப்போட்டிக்கு இட்டுச் சென்றார்.

இறுதியில் இந்தியாவும் வங்கதேசமும் மோதுகின்றன.

டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்ய இலங்கை அணி குசல் பெரேரா (61) திசர பெரேரா (58) நிமிரலினால் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்களை எடுக்க முடிந்தது. தொடர்ந்து ஆடிய வங்கதேசம் மோதல்கள், வாக்குவாதங்களுக்கிடையே 19.5 ஒவர்களில் 160/8 என்று பரபரப்பான வெற்றியை ஈட்டியது.

கடைசி ஓவர் நாடகம்: நோ-பால் சர்ச்சை, பாம்பு டான்ஸ், வாக்குவாதம்

வங்கதேச பதிலி வீரருக்கும் இலங்கை வீரருக்கும் மோதல் ஏற்பட்டது, ஷாகிப் அல் ஹசன் வீரர்களை திரும்பி அழைப்பதில் குறியாக இருந்தார். அப்படிச் செய்திருந்தால் அது ஆட்டத்தைக் கைவிட்டதாகக் கருதப்பட்டு இலங்கை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கும். ஆனால் கலீத் மஹ்மூத். மஹ்முதுல்லாவிடம் போட்டியை முடித்து விட்டு வருமாறு செய்கை செய்தார்.

இலங்கை அணி வங்கதேசத் தொடருக்குச் சென்ற போது ஒருவிதமான பாம்பு டான்ஸ் ஆடி இரு அணி வீரர்களும் ஒருவரையொருவர் கேலி, கிண்டல் செய்து வந்ததிலிருந்து இந்தப் பகைமை வளர்ந்து வந்துள்ளது. இதோடு கடைசி ஓவரை உதனா வீச முதல் பவுன்சர் முஸ்தபிசுர் ரஹ்மான் தோள்பட்டைக்கு மேல் சென்றது நோ-பால் கொடுக்கவில்லை, ரன் இல்லை. 2வது பந்தும் அதே மாதிரி செல்ல நடுவர் உயரமாகச் சென்றதற்கான நோ-பால் கொடுக்கவில்லை. உண்மையில் நோ-பால் கொடுத்திருக்க வேண்டும்.

கேப்டன் மஹ்முதுல்லா நடுவர்களிடம் நோ-பால் கொடுக்க வேண்டும் என்று வாதிட்டார். அப்படிக் கொடுத்திருந்தால் 5 பந்துகளில் 11 ரன்கள் தேவை என்று ஆகியிருக்கும் ஆனால் மாறாக 4 பந்துகளில் 12 ரன்கள் என்ற இக்கட்டு ஏற்பட்டது. லெக் அம்பயர் நோ-பால் சிக்னல் செய்ததாக ஆட்டம் முடிந்தவுடன் தமிம் இக்பால் கூறினார். சர்ச்சையான அதே 2ம் பந்தில் முஸ்தபிசுர் ரஹ்மான் ஒரு ‘பை’ ரன் எடுக்கலாம் எனும் முயற்சியில் ரன் அவுட் ஆக 4 பந்துகளில் 12 ரன்கள் தேவை. மஹ்முதுல்லா சாமர்த்தியமாக முஸ்தபிசுர் ரஹ்மானை அழைத்து ஒரு ரன் ஓடியதால் ஸ்ட்ரைக் இவர் கைக்கு வந்தது.

அடுத்த உதனா பந்து வைடாக வீசப்பட்டது, விட்டிருந்தால் அது வைடுதான் ஆனால் மஹ்முதுல்லா அதனை கவர் திசையில் பவுண்டரி விளாசினார். அடுத்த பந்து தாழ்வான புல்டாஸ் 2 ரன்கள். வெற்றிக்குத் தேவை 6 ரன்கள், கைவசம் 2 பந்துகள் மீதமுள்ளன, இப்போது மிடில் அண்ட் லெக்கில் ஒரு ஃபுல் பந்து விழ பேகவர்ட் ஸ்கொயர் லெக் மேல் சிக்ஸ் தூக்கினார் மஹ்முதுல்லா புயலுக்குப் பின்னே அமைதி, இறுதிப் போட்டிக்கு வங்கதேசம் முன்னேறியது.

மஹ்முதுல்லா நடுவர்களிடம் நோ-பாலுக்காக வாதிட்டுக் கொண்டிருந்த போது வங்கதேச பதிலி வீரர் குளிர் பானத்துடன் களத்துக்குள் வந்தார், அவர் சும்மாயில்லாமல் இலங்கை வீரர்களுடன் ஏதொ வாக்குவாதம் புரிந்தார். இதனால் பொறுக்கமாட்டாமல் இலங்கை வீரர் அந்த பதிலி வீரரை தள்ளினார். இது வங்கதேச வீர்ர்களை கொதிப்படையச் செய்ய கேப்டன் ஷாகிப் அல் ஹசன் மாடியிலிருந்து இறங்கி எல்லைக்கோட்டருகே வந்தார். அங்கு ஏதோ வாக்குவாதம் நிகழ களத்திலிருந்த மஹ்முதுல்லாவையும் ரூபல் ஹுசைனையும் மைதானத்தைவிட்டு வெளியேறுமாறு அழைத்தார். அப்போதுதான் கலீத் மஹ்மூத் ஆட்டத்தை முடித்து விட்டு வாருங்கள் என்று மஹ்முதுல்லாவுக்கு அறிவுறுத்தினார். இத்தோடு முடிந்ததா? மஹ்முதுல்லா வென்றவுடன் வங்கதேச வீரர்கள் குழுமி அதே நாகின் டான்ஸை ஆட இம்முறை இலங்கையின் குசல் மெண்டிஸ் வங்கதேச வீரர்களை நோக்கி கோபமாகச் செய்கை செய்ய தமிம் இக்பால் அவரைச் சமாதானப்படுத்தினார், மொத்தத்தில் தெருக்கிரிக்கெட்டில் நடக்கும் சண்டை போல் இருந்தன இந்தக் காட்சிகள்.

இலங்கை மோசமான தொடக்கம்:

பேட் செய்ய அழைக்கப்பட்ட இலங்கை மோசமாகத் தொடங்கியது, ஷாகிப் அல் ஹசன் பந்தை லாங் ஆனில் கேட்ச் கொடுத்து குணதிலக வெளியேறினார். முஸ்தபிசுர் ரஹ்மானின் மிக அருமையான ஓவரில் குசல் மெண்டிஸ் ஷார்ட் பிட்ச் பந்துக்கு டைமிங் கிடைக்காமல் மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்தார். உப்புல்தரங்கா மெஹிதி ஹசன், பவுலர் முஸ்தபிசுர் கூட்டணியில் ரன் அவுட் ஆனார். அதே ஓவரில் ஷனகா எட்ஜ் செய்து டக் அவுட் ஆக 32/4. ஜீவன் மெண்டிஸ், மெஹிதி ஹசன் மிராஸிடம் விழ இலங்கை 9வது ஓவரின் முதல் பந்தில் 41/5 என்று மோசமான நிலையை அடைந்தது.

ஆனால் அதன் பிறகு குசல், திசர பெரேராக்கள் இணைந்தனர் 10 ஓவர்கள் அதிரடி கூட்டணி அமைத்து 97 ரன்களை விளாசினர். குசல் பெரேரா 40 பந்துகளில் 7 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 61 ரன்கள் எடுக்க, திசர பெரேரா 37 பந்துகளில் 3 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 58 ரன்கள் எடுத்தார். இலங்கை அணி கடைசி 6 ஓவர்களில் 69 ரன்கள் எடுத்து ஒரு வழியாக மரியாதைக்குரிய 159/7 என்ற ஸ்கோரை எட்டியது. வங்கதேச அணியில் முஸ்தபிசுர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற மெஹிதி ஹசன் 4 ஒவர்களில் 16 ரன்களையே கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார். சவுமியா சர்க்கார், ரூபல் ஹுசைன் ஷாகிப் ஆகியோரும் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

தமிம் இக்பால் அரைசதம், மஹ்முதுல்லா விளாசல்:

இலங்கைப் பந்து வீச்சில் வங்கதேசம் 33 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, லிட்டன் தாஸ் டக் அவுட் ஆக, சபீர் ரஹ்மான் 3 பவுண்டரிகளுடன் 13 ரன்கள் எடுக்க இருவருமே அகிலா தனஞ்ஜயாவின் அருமையான பவுலிங்குக்கு ஆட்டமிழந்தனர்.

ஆனால் முஷ்பிகுர் ரஹிம் (28), தமிம் இக்பால் இணைந்து 8.4 ஒவர்களில் 64 ரன்கள் எடுத்தனர். தமீம் இக்பால் தனக்கேயுரிய பாணியில் ஆடி 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 42 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். முஷ்பிகுர் ரஹ்மான் இடது கை சுழற்பந்து வீச்சாளர் அபான்சோவிடம் 13வது ஓவரில் வெளியேறினார். தமிம் இக்பாலும் அடுத்த ஓவரில் அவுட ஆக, சவுமியா சர்க்கார் 10 ரன்களில் ஜீவன் மெண்டிஸிடம் வெளியேற 15வது ஓவர் முடியும் தறுவாயில் வங்கதேசம் 109/5 என்று ஆட்டம் பரபரப்பானது. 31 பந்துகளில் 51 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.

மஹ்முதுல்லா முதலில் குணதிலகவை ஒரு பவுண்டரி அடித்தார், பிறகு ஜீவன் மெண்டிஸ் பந்தை மேலேறி வந்து சக்தி வாய்ந்த ஷாட்டில் சிக்ஸ் விளாசினார். உதனா பந்தில் ஷாகிப் உல் ஹசன் 7 ரன்களில் அவுட் ஆக 12 பந்துகளில் 23 ரன்கள் என்று டென்ஷன் ஆனது. 19வது ஓவரில் மஹ்முதுல்லா ஒரு பவுண்டரி அடிக்க, மெஹிதி ஹசன் ரன் அவுட் ஆனார். அப்போதுதான் கடைசி 5 பந்துகளில் 12 ரன்கள் தேவை என்ற நிலையில் கடைசி உதனா ஓவரில் சர்ச்சைகள், தகராறுகள், உணர்ச்சி மோதல்கள், வாக்குவாதங்கள் ஏற்பட்டது, ஆனாலும் மஹ்முதுல்லா குறிக்கோளில் திடமாக இருந்து வெற்றியைச் சாதித்தார். இவர் 18 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்சருடன் 43 நாட் அவுட்.

ஆட்ட நாயகனாக மஹ்முதுல்லா தேர்வு செய்யப்பட்டார், இறுதியில் இந்தியாவுடன் வங்கதேசம் மோதுகிறது, சொந்த மண்ணில் இலங்கைக்கு பெரும் ஏமாற்றத்துடன் வங்கதேச வீர்ர்களின் நாகின் டான்ஸ் வேறு இலங்கை வீரர்களின் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x