

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ‘எப்படியாவது வெல்ல வேண்டும்’ என்ற அணுகுமுறையினால் ஏற்பட்ட முட்டாள்தனம்தான் பந்தைச் சேதப்படுத்தியது வரை கொண்டு விட்டுள்ளது என்று இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி சாடியுள்ளார்.
இந்தியா டுடேவுக்கு கங்குலி கூறும்போது, “ஸ்டீவன் ஸ்மித் இதனைச் செய்திருக்க வேண்டிய தேவையே இல்லை. ஸ்மித் அல்லது பேங்க்ராப்ட் அல்லது வார்னர் செய்தது மிகப்பெரிய முட்டாள்தனம்
உண்மையில் ஸ்மித்துக்கு மூளை மழுங்கிவிட்டது என்றுதான் எண்ணத் தோன்றுகிறது, இந்தியாவில் 3வது நடுவரை கேட்கலாமா வேண்டாமா என்பதற்காக ஓய்வறைக்கு சைகை செய்து அகப்பட்ட போது மூளை மழுங்கிவிட்டது என்றார், ஆனால் அப்போது ஏதோ சொல்ல வேண்டுமே என்பதற்காகக் கூறியதாகவே நினைத்தேன், ஆனால் இந்தச் சம்பவத்துக்குப் பிறகு உண்மையிலேயே ஸ்மித்திற்கு மதி மழுங்கிவிட்டதோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
எது எப்படியாகினும் வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற போக்கு நல்லதல்ல, சரியல்ல. 1981-ல் நியூஸிலாந்துக்கு எதிராக வெற்றி பெறுவதற்காக கடைசி பந்தை உருட்டி விட்டது முதல் இப்படித்தான் ஆஸ்திரேலியா கிரிக்கெட்டை ஆடி வருகிறது.
2008-;ல் ஒரு அணிதான் ஆட்ட உணர்வுடன் ஆடியது, நான் 60 ரன்களில் பேட் செய்து கொண்டிருந்த போது ரிக்கி பாண்டிங் தரையில் பட்டு வந்த பந்தை கேட்ச் பிடித்து அவுட் என்று சாதித்தார், நான் அவுட் ஆன்வுடன் போட்டியின் போக்கே மாறிவிட்டது.
அப்போதும் இப்படித்தான் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் 3 போட்டிகள் தடை விதிக்கப்பட்டது. ஆனால் இப்போது பந்தைச் சேதப்படுத்திய பேங்கிராப்ட் 75% அபராதத்துடன் தப்பியுள்ளார்.
ஸ்மித், பேங்கிராப்டுக்கு இன்னும் கடுமையான தண்டனைகள் கிடைக்க வேண்டும். 6 மாதகாலம் அல்லது ஆயுள் தடை என்றெல்லாம் நான் கூற மாட்டேன், 2-3 போட்டிகள் தடை செய்யப்பட வேண்டும்.”
இவ்வாறு கூறினார் கங்குலி.