Published : 27 Mar 2018 07:13 PM
Last Updated : 27 Mar 2018 07:13 PM

வார்னரின் ஆஸி. கிரிக்கெட் வாழ்வு முடிவுக்கு வருகிறது? விட்டு விலகும் சக வீரர்கள்- ஆஸி. ஊடகம் தகவல்

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை அவமதிப்புக்கு ஆளாக்கிய பந்து சேதப்படுத்தல் சர்ச்சையில் வார்னர்தான் இதற்கு மூலக்கர்த்தா என்று செய்திகள் எழுந்துள்ள நிலையில் இனி ஆஸ்திரேலியாவுக்கு வார்னர் ஆடுவது மிகக் கடினம் என்ற ரீதியில் ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று அணியின் உள் வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளன.

விசாரணைக்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைமை அதிகாரி ஜேம்ஸ் சதர்லேண்ட் விசாரணை முடிந்து தன் அறிவிப்புகளை வெளியிடவிருக்கும் நிலையில் ஆஸ்திரேலிய அணியின் சில வீரர்களே வார்னர் மீது கடும் கோபமடைந்துள்ளதாகவும் அவரை விட்டு அவர்கள் விலகியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அதாவது, வார்னருடன் இனி களம் காணப்போவதில்லை எனும் அளவுக்கு சில வீரர்கள் அவர் மீது கடும் கோபத்தில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

வார்னர் அணியின் வாட்ஸ் ஆப் குழுவிலிருந்து தன்னை நீக்கிக் கொண்டு விட்டார். கடுமையான, இறுக்கச் சூழலில் கேப்டவுன் விமான நிலையத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள், பயிற்சியாளர் டேரன் லீ மேன் செல்லும் போது ஊடகவியலாளர்கள் மொய்த்தனர், இந்த வீடியோவே வைரலாகிவிட்டது.

பால் டேம்பரிங் திட்டத்தின் பின்னணியில் வார்னர் இருந்தார் என்பதும் ஒட்டுமொத்த அணிக்குமே அவரது திட்டம் தெரியும் என்றும் ஃபேர்பேக்ஸ் மீடியா செய்தி வெளியிட்டது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் நேர்மைக்குழு தலைவர் இயன் ராயுடன் திங்களன்று வீரர்கள் சந்திப்பு மேற்கொண்டு இந்த விவகாரம் குறித்த உள்விவரங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். அதில் வார்னர்தான் மூலக்காரணம், பேங்கிராப்ட் செயல்படுத்துவதை ஸ்மித் முட்டாள்தனமாக ஏற்றுக் கொண்டார் என்று கூறப்பட்டதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

இதனையடுத்து வார்னருக்கும் மற்ற வீரர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிளவினால் வார்னர் இனி ஆஸ்திரேலியாவுக்கு ஆடுவதே கடினம் என்ற நிலையைத் தோற்றுவித்துள்ளதாகத் தெரிகிறது. வார்னருடன் இனி களமிறங்க மாட்டோம் என்று வீர்ர்கள் கூறிவருவதாகவும் உள்வட்டாரங்கள் தெரிவிப்பதாக ஆஸி. ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x