Published : 08 Mar 2018 02:19 PM
Last Updated : 08 Mar 2018 02:19 PM

கோலியை தேர்வு செய்ய எதிர்த்த தோனி; பலிகடாவான தமிழக வீரர் பத்ரிநாத்: அம்பலப்படுத்தினார் வெங்சர்க்கர்

 

விராட் கோலி அணியில் இடம்பெற வேண்டும் என்பதற்காக கடந்த 2008-ம் ஆண்டு தமிழக வீரர் பத்ரிநாத் சுப்பிரமணியன் தேர்வு செய்யப்படவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும், கேப்டனுமான திலிப் வெங்சர்க்கர் அம்பலப்படுத்தியுள்ளார்.

அணிக்குள் விராட் கோலியைத் தேர்வு செய்ய அப்போது கேப்டனாக இருந்த எம்.எஸ்.தோனியும், பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் திலிப் வெங்சர்க்கர், கடந்த 2006-ம் ஆண்டில் பிசிசிஐ அமைப்பின் தேர்வுக்குழுவின் தலைவராக சில ஆண்டுகள் பணியாற்றினார். அதன்பின், அவருக்கும் அப்போது பிசிசிஐ அமைப்பின் பொருளாளராக இருந்த என். சீனிவாசனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு அவர் தேர்வுக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், மும்பையில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் கேப்டன் திலிப் வெங்சர்க்கர் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் நிருபர்களிடம் பேசியதாவது:

கடந்த 2008-ம் ஆண்டு ஜூனியர் உலகக் கோப்பையை வென்ற அணிக்கு தலைமை ஏற்று இருந்தவர் இப்போது இருக்கும் கேப்டன் விராட் கோலி என்பது அனைவருக்கும் தெரியும். நான் தேர்வுக்குழுவின் தலைவராக இருக்கும் போது, இலங்கைக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் தொடருக்கான அணியில் விராட் கோலியை தேர்வு செய்ய வலியுறுத்தினேன்.

எனது ஆலோசனையை தேர்வுக் குழுவில் இருந்த 4 தேர்வாளர்களும் ஒப்புக்கொண்டனர். ஏனென்றால், விராட் கோலியின் ஆட்டத்தை நான் ஏற்கெனவே பார்த்து இருக்கிறேன். சிறப்பாக இருந்தது என்று கூறியதால் அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

ஆனால், தேர்வுக் குழுக் கூட்டத்தில் இருந்த அப்போதைய கேப்டன் எம்.எஸ். தோனியும், பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, விராட் கோலியை அணிக்குள் கொண்டுவர கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விராட் கோலி விளையாடியதை நாங்கள் பார்த்ததுகூட இல்லை, எப்படி அவரை அணிக்குள் தேர்வு செய்வது என்று தோனியும், கிறிஸ்டனும் கேள்வி எழுப்பினர்.

ஆனால், அப்போது விராட் கோலி இருந்த பார்ஃம் குறித்து அனைவரிடமும் விளக்கினேன். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பைப் போட்டியில் விராட் கோலி எப்படி செயல்பட்டார், வளர்ந்துவரும் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் பயணம் மேற்கொண்ட போது அவரின் பேட்டிங் திறமை குறித்து விளக்கினேன். இதை மற்ற தேர்வாளர்கள் 4 பேரும் புரிந்துகொண்டு ஏற்றுக்கொண்டனர்.

ஆனால், கடைசிவரை தோனியும், கிறிஸ்டனும் மறுத்துவிட்டனர். கோலியை அணிக்குள் கொண்டுவருகிறேன், அதன்பின் அவரின் பேட்டிங் திறமையைப் பாருங்கள் என்று நான் அவர்களை கட்டாயப்படுத்தினேன்.

ஆனால், அப்போது பிசிசிஐ பொருளாளராக இருந்த ஸ்ரீனிவாசனும், தோனியும் தமிழக வீரர் பத்ரிநாத் சுப்பிரமணியத்தை அணிக்குள் கொண்டுவர தீவிரமாக திட்டமிட்டு இருந்தனர். ஏனென்றால், அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பத்ரிநாத் விளையாடிக்கொண்டு இருந்ததால், அவர்கள் அணியிலும் இடம் பெறவைக்க துடித்தனர்.

ஆனால், விராட்கோலி அணிக்குள் வந்தால், பத்ரிநாத்துக்கு இடம் கிடைக்காது என்பதை அறிந்தேன். அதனால், பத்ரிநாத்தை தேர்வு செய்வதை கைவிட்டு, விராட் கோலியை தேர்வு செய்தேன். ஆனால், பத்ரிநாத்தை நான் தேர்வு செய்யாதது கேட்டு ஸ்ரீனிவாசன் மிகுந்த அதிருப்தி அடைந்து, என்னிடம் கோபப்பட்டார்.

எதற்காக, எந்த அடிப்படையில் பத்ரிநாத்தை தேர்வு செய்யாமல் இருந்தீர்கள் என்று என்னிடம் ஸ்ரீனிவாசன் கேள்வி கேட்டார். ஆஸ்திரேலியாவுக்கு வளர்ந்துவரும் அணி வீரர்களை அனுப்பியபோது, விராட் கோலியையும் அணியில் இடம் பெற்று இருந்தார். அப்போது, அவரின் பேட்டிங்கைப் பார்த்து இருக்கிறேன் சிறப்பாக இருந்தது, அதனால்தான் அணிக்குள் கொண்டு வந்தேன் என்று நான் தெரிவித்தேன்.

ஆனால், ஸ்ரீனிவாசன் என்னிடம் கடுமையாக வாக்குவாதம் செய்தார். தமிழக அணிக்காக 800 ரன்கள்வரை பத்ரிநாத் எடுத்துள்ளார் அவருக்கு வாய்ப்பு வழங்காதது ஏன் என்றார். ஆனால் நான் அடுத்தகட்டமாக வாய்ப்பு அளிக்கப்படும் என்றேன். இப்போதே பத்ரிநாத்துக்கு 29 வயதாகிவிட்டது. பின் எப்போது அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றார்.

ஆனால், பத்ரிநாத்துக்கு வாய்ப்பு கிடைக்கும், ஆனால், எப்போது கிடைக்கும் என்றெல்லாம் என்னால் கற முடியாது என்று ஸ்ரீனிவாசனிடம் கூறினேன். ஆனால், அடுத்த சில நாட்களில் என்னைத் தேர்வுக் குழுத் தலைவர் பதவியில் இருந்து நீக்கவிட்டு, ஸ்ரீகாந்தை தேர்வுக் குழுத் தலைவராக நியமித்தார். இதற்கு அப்போது பிசிசிஐ தலைவராக இருந்த சரத்பவாரும் சம்மதித்தார். அத்துடன் என்னுடைய தேர்வுக்குழுத் தலைவர் பதவி முடிவுக்கு வந்தது.

இவ்வாறு திலிப் வெங்சர்க்கர் தெரிவித்தார்.

2008-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் தேர்வான விராட் கோலி முதல் போட்டியில் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால், 4-வது போட்டியில் அவர் அடித்த அரைசதம் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. இலங்கையில் முதல்முறையாக ஒருநாள் தொடரை இந்தியா வெற்றிகரமாகக் கைப்பற்றி வரலாறு படைத்தது.

இன்று விராட் கோலி உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு கேப்டனாகவும் அணியை வழிநடத்தி வருகிறார்.

இதுவரை 66 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 5,554 ரன்கள் குவித்துள்ளார். இதில் 21 சதங்கள் அடங்கும். 208 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய விராட் கோலி, 9,588 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 35 சதங்கள் அடித்துள்ளார். சதம் அடித்ததில் சச்சினுக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.

டி20 போட்டிகளில் 57 ஆட்டங்களில் பங்கேற்ற விராட்கோலி 1983 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 18 அரைசதங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x