Last Updated : 20 Mar, 2018 03:34 PM

 

Published : 20 Mar 2018 03:34 PM
Last Updated : 20 Mar 2018 03:34 PM

ஆஸி. துயரத்தை அதிகரிக்க வருகிறார்: 6 மணிநேர மாரத்தான் விசாரணையில் ரபாடா தடை நீக்கம்

போர்ட் எலிசபத் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை வீழ்த்திவிட்டு அவர் மீது மோதியதாக எழுந்தக்குற்றச் சாட்டில் தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ரபாடாவுக்கு 2 போட்டிகளில் விளையாட விதிக்கப்பட்டிருந்த தடை தற்போது நீங்கியது.

இதனையடுத்து மீண்டும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களின் துயரத்தை அதிகரிக்க அடுத்த கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் ஆடுகிறார் ரபாடா. 2வது டெஸ்ட் போட்டியில் ரபாடா அபாயகரமாக வீசியதில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்கள் அவரிடம் வீழ்ந்தனர், 11 விக்கெட்டுகளைச் சாய்த்து ஆஸி. தோல்வியை வழிநடத்தினார், இவருக்கு உத்வேகம் அளித்தது டிவில்லியர்ஸின் அதிரடி சதம்.

வீடியோ மூலம் நடத்தப்பட்ட விசாரணை 6 மணி நேரம் நடந்தது. இதில் உடல் மோதல் என்ற லெவல் 2 குற்றச்சாட்டு ஆட்ட உணர்வுக்கு எதிரானது என்ற லெவல் 1 குற்றச்சாட்டாகக் குறைக்கப்பட்டது. இதனால் ஆட்டத்தொகையில் 25% அபராதமும் ஒரு தகுதியிழப்புப் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளன.

விசாரணையை நடத்திய ஹெரான் என்ற நீதிபதி, ரபாடாவின் ஸ்மித்துடனான உரசல் ‘முறையற்றது, வேண்டுமென்றே’ செய்யப்பட்டது என்ற ஐசிசி கூற்றில் திருப்தியடையவில்லை. ரபாடா வேண்டுமென்றே செய்ததாகக் கருதவில்லை எனவே லெவல் 2 குற்றச்சாட்டிலிருந்து ரபாடாவை விடுவிக்கிறேன் என்றார்.

இதனையடுத்து லெவல் 1 குற்றச்சாட்டாகக் குறைக்கப்பட்டு அபராதம் மற்றும் 1 தகுதியிழப்புப் புள்ளி என்று தண்டனை குறைக்கப்பட்டுள்ளது. இதனை ஐசிசி ஏற்றுக் கொள்வதாகவும் மேல்முறையீடு இல்லை என்றும் டேவ் ரிச்சர்ட்ஸன் தெரிவித்தார்.

கிரிக்கெட் உலகம் ரபாடாவின் தடை நீக்கத்தை வரவேற்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x