

ராய்ப்பூரில் இன்று நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் இலங்கையின் சதர்ன் எக்ஸ்பிரஸ் அணியை நியூசி.யின் நாதர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.
மழை காரணமாக அணிக்கு 10 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கையின் சதர்ன் எக்ஸ்பிரஸ் 10 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து ஆடிய நாதர்ன் அணி 9.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நாதர்ன் அனிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது.
டாஸ் வென்ற நாதர்ன் அணியின் கேப்டன் ஃபிளின் முதலில் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார்.
இலங்கையின் சதர்ன் எக்ஸ்பிரஸ் அணியில் துவக்க வீரர் எம்.டி.பெரேரா 20 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்தார். மற்றொரு தொடக்க வீரர் குணதிலக 26 பந்துகளில் 2 பவுண்டரி 3 சிக்சர்களுடன் அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்தார். அதன் பிறகு சதர்ன் அணியில் ஒருவரும் ஒற்றை இலக்கத்தைத் தாண்டவில்லை. இடது கை வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் 2 ஓவர்கள் 12 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சதர்ன் அணி 92/5 என்று முடிந்து போனது.
இத்தனைக்கும் 6 ஓவர்களில் 5 கேட்ச் வாய்ப்புகளைக் கோட்டை விட்டது நியூசி.யின் நாதர்ன் அணி.
இலங்கை அணி பந்து வீச வந்தபோது குணதிலக ஒரே ஓவரில் 19 ரன்களை கொடுக்க 19 பந்துகளில் நாதர்ன் அணி 41 ரன்கள் என்ற அதிரடி துவக்கம் கண்டது. டெவிச் என்ற வீரர் அப்போது 14 ரன்களில் மஹரூஃப் பந்தில் அவுட் ஆனார்.
ஆனால் தொடர்ந்து நியூசி.யின் சர்வதேச வீரர் கேன் வில்லியம்சன் அபாரமாக பேட்டிங் செய்தார். அவர் 29 பந்துகளில் 7 பவுண்டரி ஒரு சிக்சர் சகிதம் 52 ரன்கள் எடுத்து 9வது ஓவரில் மஹரூஃப் பந்தில் பவுல்டு ஆனார். அதன் பிறகு 96/3 என்று வென்றது நாதர்ன்.
இன்று மற்றொரு போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக லாகூர் லயன்ஸ் டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்ய முடிவெடுத்தது.