Published : 13 Mar 2018 09:35 AM
Last Updated : 13 Mar 2018 09:35 AM

ஐஎஸ்எல் கால்பந்து தொடர்: இறுதிப் போட்டியில் கால் பதிக்குமா சென்னை?- கோவா அணியுடன் இன்று பலப்பரீட்சை

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 2-வது கட்ட அரை இறுதியில் சென்னையின் எப்சி - எப்சி கோவா அணிகள் இன்று இரவு 8 மணிக்கு சென்னை நேரு விளையாட்டரங்கில் மோதுகின்றன.

முதல் கட்ட அரை இறுதி ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்ததால் சொந்த மண்ணில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி முனைப்புடன் களமிறங்குகிறது சென்னை அணி. முதல் கட்ட அரை இறுதியில் சென்னை அணி கோல் அடித்திருப்பது சாதகமான விஷயமாக கருதப்படுகிறது. அதேவேளையில் லீக் ஆட்டத்தில் சென்னை அணியை அதன் சொந்த மண்ணில் ஏற்கெனவே வீழ்த்தி உள்ளதால் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது கோவா அணி. கோவா அணி இந்த சீசனில் 43 கோல்களும், சென்னை அணி 25 கோல்களும் அடித்துள்ளன.

கோவா வீரர்களின் தாக்குதல் ஆட்டத்தை சமாளிக்கும் வகையில் மீண்டும் ஒருமுறை நடுகளத்தில் கணேஷ் தனபால், பிக்ரம்ஜித் சிங்கை ஆகியோரை சென்னை அணியின் பயிற்சியாளர் ஜான் கிரகோரி பயன்படுத்தக்கூடும். மெயில்சன் ஆல்வஸ், ஹென்றிக் செரேனோ ஆகியோர் தங்களது மேம்பட்ட திறனை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னணி ஸ்டிரைக்கரான ஜே ஜே லால்பெகுலா மீதும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. ரபேல் அகஸ்தோ தனது அனுபவத்தால் எதிரணிக்கு நெருக்கடி கொடுப்பார் என கருதப்படுகிறது.

கோவா அணி பெர்ரான் குரோமினாஸ், ஹியூகோ பொமோமஸ்ஆகியோரை பெரிதும் நம்பி உள்ளது. இதில் தாக்குதல் ஆட்டம் தொடுக்கும் பெர்ரான் குரோமினாஸ் இந்த சீசனில் 18 கோல்கள் அடித்துள்ளார். இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி வரும் 17-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் பெங்களூரு எப்சி அணியுடன் பலப்பரீட்சை நடத்தும். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x