Last Updated : 18 Mar, 2018 02:24 PM

 

Published : 18 Mar 2018 02:24 PM
Last Updated : 18 Mar 2018 02:24 PM

சிந்து போராடி தோல்வி: ‘த்ரில்’ அரையிறுதியில் ஜப்பான் வீராங்கனையுடன் நீயா? நானா? போட்டி

இந்திய நட்சத்திர பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கும் ஜப்பான் வீராங்கனை அகானே யாமகுச்சிக்கும் இடையே நடைபெற்ற அனைத்து இங்கிலாந்து பாட்மிண்டன் அரையிறுதிப் போட்டி ஒரு உயர்தரமான ஆட்டத்தை வழங்கியது, கடைசி செட்டில் முன்னிலையில் இருந்த சிந்து கடைசியில் 21-19, 19-21, 18-21 என்ற செட்களில் போராடி தோல்வி தழுவினார்.

இந்தத் தோல்வியினால் வரலாற்றுச் சாதனையை நழுவ விட்டார் சிந்து. 20 வயது ஜப்பான் வீராங்கனைக்கு இது தொடர்ச்சியான 9வது வெற்றியாகும்.

கடந்த ஆண்டு துபாய் சூப்பர் சீரிஸ் இறுதிப் போட்டி போலவே ரசிகர்களை இருக்கையின் முனைக்கு நகரவைத்து விரல் நகங்களைக் காலி செய்த அரையிறுதியாக இது அமைந்தது. பந்தை இருவரும் மாறி மாறி எடுத்தும், அடித்தும் பரஸ்பர சவாலாகத் திகழ்ந்தது ரசிகர்களுக்கு ஒரு த்ரில் போட்டியைக் கண்ட அனுபவத்தை ஏற்படுத்தியிருக்கும்.

கடைசியில் உறுதியை விடாமல் இருந்த ஜப்பான் வீராங்கனை யாமகுச்சி வெற்றி பெற்று இறுதியில் முதலாம் இடத்தில் உள்ள தய்வான் வீராங்கனை தய் சூ இங் என்பவரைச் சந்திக்கிறார்.

இதற்கு முந்தைய போட்டிகளுக்காக கடினமான ஆட்டத்தில் சுமார் 3 மணிநேரங்களுக்கும் மேல் களத்திலிருந்தாலும் கடினமான யாமகுச்சிக்கு எதிராக களைப்பின் சுவடு தெரியாமல் ஆடினார் சிந்து. முதல் செட்டில் ஸ்மாஷ்கள் மற்றும் யாமகுச்சியின் தவறுகளினால் சரேலென 5-0 என்று முன்னேறினார். ஆனால் சிந்துவின் இரண்டு ஷாட்கள் அவுட்டில் செல்ல யாமகுச்சி 3-8 என்று நெருங்கினார். பிறகு 2 அருமையான டவுன் த லைன் ஸ்மாஷ் ஆடினார் சிந்து ஆனால் மீண்டும் சிந்து தவறிழைக்க 5-9 என்று முன்னேறிவந்தார் யாமகுச்சி. ஜப்பான் வீராங்கனையின் ஒவ்வொரு ஷாட்டுக்கும் பதிலடி கொடுத்த சிந்து யாமகுச்சி இருமுறை வலையில் அடிக்க, 14-7 என்று முன்னேறினார் சிந்து. யாமகுச்சி தொடர்ந்து பிழைகளைச் செய்ய சிந்து 16-8 என்று முன்னேறினார்.

ஆனால் யாமகுச்சி விடாமல் பின் தொடர்ந்தார் சிந்துவை தவறுகளிழைக்கச் செய்து 15-17 என்று நெருங்கினார். பிறகு ஒரு த்ரில்லான லாங் ரேலியில் சிந்து ஒரு ஷாட்டைக் கோட்டை விட, மற்றொன்று தவறான கணிப்பாக 17-17 என்று இருவரும் சமநிலை எய்தினர். ஆனால் அன் ஃபோர்ஸ்டு எரர்களால் பாதிப்படைந்த ஜப்பான் வீராங்கனையினால் சிந்து 19-18 என்று முன்னிலை பெற்று பிறகு ஒரு ஸ்மாஷ் மூலம் முதல் செட்டைக் கைப்பற்றினார்.

2வது செட்டிலும் கடும் போராட்டம் தொடர இருவரும் 7-7 என்று சமன் எய்தினர். ஜப்பான் வீராங்கனை களத்தில் படுவேகமாக இயங்கினார், கிராஸாக சிந்து அடித்த அத்தனை ஷாட்களையும் அவர் வெகுவிரைவில் சென்று எடுத்து விடுகிறார். பிறகு ஒரு எம்பு எம்பி கிராஸ் கோர்ட் ஸ்மாஷ் அடித்தார் யாமகுச்சி 11-9 என்று முன்னிலை பெற்றார்.

இடைவேளை முடிந்து திரும்பியதும் சிந்து வலையருகே அருமையாக ஆடினார், பிறகு ஒரு ஸ்மாஷ், யாமகுச்சி தவறு என்று சிந்துவுக்கு புள்ளிகள் கிடைக்க 12-12 என்று சமன ஆனது. ஆனால் அதன் பிறகு யாமகுச்சி கடுமையாக ஆடினார், இதனால் 18-14 என்று முன்னிலை பெற்றார். இந்த நிலையில் சிந்து ஒரு அருமையான பிளிகில் புள்ளியை பெற்றதோடு, யாமகுச்சி 2 தவறுகளை இழைக்க 18-19 என்று சிந்து நெருக்கினார். அதன் பிறகு ஒரு நீண்ட ரேலி, இதன் முடிவில் சிந்து தவறு செய்ய யாமகுச்சிக்கு 2 கேம் பாயிண்ட்கள் தேவை. இதில் ஒன்றை யாமகுச்சி வெளியே அடித்தார், ஒன்றில் வென்று 2வது செட்டைக் கைப்பற்றி 1-1 என்று சமன் செய்தார்.

யார் ஆட்டம் சிறந்தது என்ற போராட்டம் 3வது செட்டிலும் தொடர சிந்து இருபுறமும் மிக அருமையாக டவுன் த லைன் ஸ்மாஷ் இரண்டு அடித்தார் 6-3 என்று பிறகு 8-5 என்று சிந்து முன்னிலை வகித்தார். பிறகு மீண்டும் ஒரு 44 ஷாட் மாரத்தான் ரேலி, இதில் யாமகுச்சி வென்றார், சிந்து ஒரு ஷாட்டை வலையில் அடிக்க 7-8 என்று இடைவெளி குறைந்தது.

இந்த செட்டில் மீண்டும் ஒரு 51 ஷாட் ரேலி இருவருக்குமிடையே நடந்தது. இதிலும் ஜப்பான் வீராங்கனையே வென்றார் 14-14 என்று சமநிலை எய்தப்பட்டது. இருவரும் அருமையான ரேலிகளைத் தொடர்ந்து ஆட இருவரும் மீண்டும் 18-18 என்று சமநிலை எய்தினர். பிறகு சிந்து ஒரு வீடியோ சாலஞ்ச் செய்தார், ஆனால் அது இவருக்குச் சாதகமாக அமையவில்லை, ஜப்பான் வீராங்கனை ஒரு ஸ்மாஷ் செய்ய 2 மேட்ச் பாயிண்ட்கள் கிடைத்தன, அதனை ஸ்மாஷ் மூலம் சாதித்தார் யாமகுச்சி.

ஆனாலும் நீயா? நானா? என்ற ரீதியில் இருவரும் ஆடிய ஆட்டம் ரசிகர்களை இருக்கை முனைக்கு நகர்த்தியிருக்கும், உண்மையில் ஒரு உயர்தரமான பாட்மிண்டன் ஆட்டத்தை ஆடிய பிறகே தோல்வியை நினைத்து துவள வேண்டியதில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x