Published : 19 Mar 2018 07:04 AM
Last Updated : 19 Mar 2018 07:04 AM

தினேஷ் கார்த்திக் நாள்; 8 பந்துகளில் 29; கடைசி பந்து சிக்ஸ்: டி20 கோப்பையை வென்றது இந்தியா

கொழும்புவில் நடைபெற்ற நிதஹாஸ் கோப்பைக்கான முத்தரப்பு டி20 இறுதிப் போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் நம்ப முடியாத அதிரடியினால் வங்கதேசத்தை வீழ்த்தி கோப்பையை வென்றது இந்திய அணி. தோல்வியின் விளிம்பிலிருந்த இந்திய அணியை தனது அனாயாச அதிரடி மூலம் வெற்றி பெறச் செய்து தன் அனுபவத்தை வெளிப்படுத்தினார்.

டாஸ் வென்ற ரோஹித் சர்மா முதலில் வங்கதேசத்தைப் பேட் செய்ய அழைத்தார், கடைசி ஓவர்களின் சொத்தைப் பந்து வீச்சினால் வங்கதேசம் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ரன்கள் என்ற சவால் கொடுக்கக் கூடிய இலக்கை நிர்ணயித்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி தினேஷ் கார்த்திக் இறங்கும் போது 2 ஓவர்களில் 34 ரன்கள் தேவை என்ற கடினமான நிலையில் இருந்தது, தினேஷ் கார்த்திக்குக்கு முன்னால் என்ன ‘மதிநுட்பத்தில்’ விஜய் சங்கரை இறக்கினார்களோ தெரியவில்லை போட்டியை நமக்கு தோற்கடித்துக் கொடுத்திருப்பார், ஏற்கெனவே பவுலிங்கில் சொதப்பினார், இவர் கொடுத்த நெருக்கடியில் மணீஷ் பாண்டே அவுட் ஆக, தினேஷ் கார்த்திக் இறங்கினார், 2 ஓவர்களில் 34 ரன்கள் தேவை.

8 பந்துகளில் 29, கடைசி பந்தில் சிக்ஸ்: தினேஷ் கார்த்திகின் நம்ப முடியாத இன்னிங்ஸ்!

ரூபல் ஹுசைன் 19-வது ஓவரை வீசினார். முதல் பந்து தாழ்வான புல்டாஸ், மட்டையை பந்துக்கு அடியில் கொடுத்து நேராக ஒரே தூக்கு பந்து சைட் ஸ்க்ரீனுக்கு மேல் சிக்ஸ்.

அடுத்த பந்தும் யார்க்கர் சரியாக விழாமல் போக பின்னங்காலை ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே நகர்த்தி ஆஃப் வாலி பந்தை மிட்விக்கெட்டில் பவுண்டரி அடித்தார் தினேஷ் கார்த்திக். அடுத்த பந்தும் ஃபுல் பந்து, ஸ்கொயர் லெக் திசையில் சிக்ஸ்.

அடுத்த பந்து ரன் இல்லை, அதற்கு அடுத்த பந்தில் மேலேறி வந்து நேராக அடித்து 2 ரன்கள் எடுத்தார்.

கடைசி பந்து வீசும் முன் லெக் ஸ்டம்புக்கு வெளியே ஒதுங்குமாறு போக்குக் காட்டி ஆஃப் ஸ்டம்புக்கு நகர்ந்து வந்து மண்டி போட்டு பந்தை லாங் லெக் பவுண்டரிக்கு விரட்டினார். டிவில்லியர்ஸ் அந்த ஷாட்டில் பெருமையடைந்திருப்பார்.

19வது ஓவரில் ரூபல் ஹுசைனை புரட்டி எடுத்த தினேஷ் கார்த்திக் 22 ரன்களை 6 பந்துகளில் எடுத்தார். அத்தனை ஷாட்களும் அவரது மட்டையில் நன்றாகப் பட்டது, ஃபார்மில் உள்ள பேட்ஸ்மென் என்பதற்கு இதைவிட சிறந்த அடையாளம் என்னவாக இருக்க முடியும்?

கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவை. சவுமியா சர்க்கார் வீச லெக் திசையில் வந்த சுலபமான புல் டாஸ் பந்தை தொட்டிருந்தால் பவுண்டரிக்குப் போயிருக்கும், ஆனால் விஜய் சங்கர் மட்டையிலிருந்து காத்துதான் வந்தது. இதற்கு முன்னர் பந்தை அது வரும் திசையில் ஆடப்பார்க்கமால் கிராஸ் பேட் வராக்குப் போட்டு அவருக்கு மாட்டவேயில்லை. வைடு ஒரு ரன் வந்தது. அடுத்த பந்தையும் விஜய் சங்கர் அடித்து நொறுக்கியிருக்கலாம் ஆனால் அவருக்கு மாட்ட மாட்டேன் என்று படுத்தியது பந்து. டென்ஷன் ஏற ஒருவழியாக ஒரு சிங்கிள் எடுத்து தினேஷ் கார்த்திக்கிடம் ஸ்ட்ரைக்கக் கொடுத்தார். அடுத்த பந்தில் கார்த்திக் 1 ரன் எடுத்தார் மீண்டும் விஜய் சங்கர். ஆனால் இம்முறை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வந்த ஃபுல் பந்தை தேர்ட்மேனில் பவுண்டரி அடித்தார்.

அடுத்த பந்து விஜய் சங்கர் மீண்டும் சிங்கிள் எடுத்து கார்த்திக்கிடம் கொடுக்காமல் தூக்கி அடித்து கேட்ச் ஆனார். ஒரு பந்தில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி, 4 ரன்கள் எடுத்தால் சூப்பர் ஓவர். எனவே 6தான் அடிக்க வேண்டும். சவுமியா சர்க்கார் பந்தை வைடாக புல் லெந்தில் வீச பதற்றமேயில்லாத தினேஷ் காலைப் போட்டு எக்ஸ்ட்ரா கவரில் சக்திவாய்ந்த ஷாட்டை ஆட பந்து மட்டையில் சரியான இடத்தில் பட எக்ஸ்ட்ரா கவரில் பந்து சிக்ஸ் ஆனது. இந்திய அணியினர் தினேஷ் கார்த்திக் மீது கவிய, சவுமியா சர்க்கார் தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார, வங்கதேச குழாமில் தஸ்கின் அகமட் அழுகையை அடக்கிக் கொண்டார். தினேஷ் கார்த்திக் ஹீரோ, ஆட்ட நாயகன். விஜய் சங்கர் 19 பந்துகளில் 17 ரன்கள். உண்மையில் விஜய் சங்கரை தினேஷ் கார்த்திக்தான் காப்பாற்றினார் என்று கூற வேண்டும்.

166/8 என்ற இலக்கைக் கொண்டு அவர்கள் நன்றாகப் பந்து வீசினர். நடுவில் தொடர்ச்சியாக பவுண்டரிகளே கொடுக்காமல் 4 ஓவர்களை வீசினர். 9-13 ஓவர்களில் வங்கதேசம் இறுக்கியது இதனால் வெற்றிக்கான ரன் விகிதம் ஓவருக்கு 10 ஆனது. ரோஹித் சர்மா 42 பந்துகளில் 4 பவுண்டரிகள் 3 அழகான சிக்ஸர்களுடன் 56 ரன்கள் எடுத்து 14வது ஓவரில் ஆட்டமிழந்தார். ஸ்கோர் 98/4 என்றானது, அதன் பிறகு ஏகப்பட்ட ரன் இல்லாத பந்துகளை பாண்டேவுக்கும், விஜய் சங்கருக்க்கும் வீசினர், முஸ்தபிசுர் ரஹ்மான் விஜய் சங்கரின் வராக்கு பேட்டிங்கை எளிதில் ஏமாற்றினார். ஏற்கெனவே விக்கெட் மெய்டனையும் வீசிய பவுலரை இப்படியா ஆடுவது? இந்தியா வெற்றி பெறுவது கேள்விக்குறியானது. தினேஷ் வந்தார் வென்றார் அவ்வளவுதான்.

முன்னதாக ஷிகர் தவண் ஒரு சிக்சருடன் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஷாகிப் பந்தை இறங்கி வந்து ஆன் திசையில் அடிக்கப் பார்த்தார் பந்து நின்று வந்தது முன் விளிம்பில் பட வங்கதேச பதிலி வீரர் ஆரிஃபுல் அருமையான கேட்சை எடுத்தார். சுரேஷ் ரெய்னா ஒன்று பந்தை விட்டிருக்க வேண்டும் ஏனெனில் லெக் திசைக்கு வெளியே சென்ற பந்து நிச்சயம் வைடுதான். ஆனால் அடித்தால் ஒழுங்காக அடிக்க வேண்டும், ஆனால் ஒழுங்காக ஆடாததால் மட்டையில் பட்டு விக்கெட் கீப்பரிடம் லெக் திசையில் கேட்ச் ஆனது. ரெய்னா ரன் எடுக்கவில்லை. ரூபல் ஹுசைன் தான் இவர் விக்கெட்டைக் கைப்பற்றினார்.

ராகுல் இறங்கி 14 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சர் என்று அவசரம் காட்டினார், ஆனால் ரூபல் ஹுசைன் பந்து ஒன்று ஆஃப்ஸ்டம்புகு வெளியே கொஞ்சம் கூடுதாலாக எகிற புல் ஷாட் சரியாக சிக்கவில்லை. கேட்ச் ஆகி வெளியேறினார், தவறான நேரத்தில் தவறான ஷாட் தேர்வுதான் அது. ரோஹித் சர்மாவும் ஸ்லாக் ஸ்வீப் சரியாகச் சிக்காமல் நஜ்முல் பந்தில் வெளியேறினார். மணீஷ் பாண்டேவுக்கு மாட்டவில்லை, தென் ஆப்பிரிக்கா தொடரில் 6 ஒருநாள் போட்டிகளில் ஒரு போட்டியில் கூட வாய்ப்பளிக்கப் படாததால் அவரால் டச்சுக்கு வர முடியவில்லை, 27 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 28 ரன்களைத்தான் அவர் எடுக்க முடிந்தது. விஜய் சங்கருக்கும் பந்து மாட்டவேயில்லை, காரணம் அத்தனையும் தமிழ்நாடு பிரீமியர் லீக் ஷாட்கள், மாட்டவில்லை, இதனால் எதிர்முனையில் நெருக்கடியான மணீஷ் பாண்டே முஸ்தபிசுர் ரஹ்மானை தூக்கி அடித்து கேட்ச் கொடுத்தார். கடைசியாக விஜய் சங்கர் முக்கியக் கட்டத்தில் ஆட்டமிழந்தார், அதன் பிறகுதான் தினேஷ் கார்த்தி கடைசி பந்தை எக்ஸ்ட்ராகவரில் மெஜஸ்டிக்காக சிக்சருக்குத் தூக்கி வெற்றி பெற்றுத் தந்தார்.

மெஹிதி ஹசன் மிராஸ் பவர் பிளேயில் 1 ஓவரில் 17 ரன்கள் கொடுத்தார் என்பதற்காக அவரைப் பயன்படுத்தாமலேயே தவறு செய்தார் ஷாகிப் அல் ஹசன்.

இந்திய வேகப்பந்து வீச்சு சொதப்பல், வாஷிங்டன் சுந்தர், சாஹல் அபாரம்! சபீர் ரஹ்மான் விளாசல்!

முதலில் இந்திய அணியினால் பேட் செய்ய அழைக்கப்பட்ட வங்கதேசம் பவர் பிளேவுக்குள் தமிம் இக்பால் (15), லிட்டன் தாஸ் (11), சவுமியா சர்க்கார் (1) ஆகியோரை சாஹல், வாஷிங்டன் சுந்தரிடம் இழந்தது. இதில் தமிம் இக்பாலுக்கு ஷர்துல் தாக்கூர் பிடித்த லாங் ஆன் கேட்ச் அபாரமானது, அருமையான பேலன்ஸ், இல்லையென்றால் அது சிக்ஸ். லிட்டன் தாஸ் ஸ்லாக் ஸ்வீப் முயற்சியில் வாஷிங்டன் சுந்தரிடம் வெளியேறினார். சவுமியா சர்க்கார் சாஹல் பந்தை ஸ்வீப் செய்து நேராக ஸ்கொயர்லெக்கில் கேட்ச் கொடுத்தார்.

சபீர் ரஹ்மான் முதலில் முஷ்பிக்குருடன் இணைந்து 35 ரன்கள் சேர்த்தார். மஹமுதுல்லாவுடன் இணைந்து 36 ரன்கள் இந்த இரண்டு கூட்டணிகளும் மிக முக்கியமாக அமைந்தன. மஹ்முதுல்லா அபாரமான 21 ரன்களுக்குப் பிறகு ரன் அவுட் ஆனார், மிகவும் தமாஷான் ரன் அவுட், அதன் பிறகு கடுப்பான சபீர் லெக் திசையில் சில பவுண்டரிகளை அடித்தார். கடைசியில் 50 பந்துகளில் 7 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 77 ரன்கள் எடுத்து உனாட்கட்டின் ஸ்லோ பந்தில் பவுல்டு ஆனார். தாக்கூர் கடைசி ஓவரை சரியாக வீசாததால் மெஹிதி ஹசன் 18 ரன்களை அடிக்க வங்கதேசம் 166 என்ற ஒரு நல்ல இலக்க்கை எட்டினர்.

இந்தியப் பந்து வீச்சில் உனாட்கட், தாக்கூர், விஜய் சங்கர் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் சேர்ந்து 12 ஓவர்களில் 126 ரன்களை வாரி வழங்கினர், வாஷிங்டன் சுந்தர், சாஹல் 8 ஓவர்களில் 38 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விகெட்டுகளைக் கைப்பற்றினர்.

விஜய் சங்கருக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக்கை முன்னமேயே இறக்கியிருந்தால் வெற்றி இன்னும் கூட இலகுவாகியிருக்கும்.

ஆட்ட நாயகனாக கார்த்திக்கும் தொடர் நாயகனாக வாஷிங்டன் சுந்தரும் தேர்வு செய்யப்பட்டனர். இருவரும் தமிழ்நாட்டுக்குப் பெருமை  சேர்த்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x