Published : 12 Mar 2018 08:27 PM
Last Updated : 12 Mar 2018 08:27 PM

‘மன்னித்துவிடு மை ஜூனியர்’: அவுட் ஆக்கிய வீரரை ஆவேசமாக ’வழியனுப்பி’யதற்கு இளம் வீரரிடம் அஃப்ரீடி உருக்கம்

கராச்சி நகரில் நடந்த பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் போட்டியில் இளம் வீரரை வெளியேற்றி ஆவேசமாக பேசிவிட்டு, பின் அவரிடம் மனம்திறந்து மூத்த வீரர் ஷாஹித் அப்ரிடி மன்னிப்பு கோரியது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர் ஷாஹித் அப்பிரிடி கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதமே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஆனால், தொடர்ந்து உள்நாட்டு போட்டிகளிலும், கிரிக்கெட் லீக் போட்டிகளிலும் விளையாடி வருகிறார்.

இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் போட்டிகள் அந்தநாட்டில் நடந்து வருகிறது. இதில் கடந்த 10-ம் தேதி கராச்சி நகரில் கராச்சி கிங்க்ஸ் அணிக்கும், முல்தான் சுல்தான்ஸ் அணிக்கும் இடையே போட்டி நடந்தது. இதில் கராச்சி கிங்ஸ் அணிக்காக அப்ரிடி விளையாடி வருகிறார். இந்த போட்டியில் கராச்சி கிங்ஸ் அணி 63 ரன்களில் வெற்றிபெற்றது.

இந்நிலையில் போட்டியின் இடையே முல்தான் சுல்தான் அணி வீரரும் 19வயதான சைப் பாதர் பேட்டிங் செய்தார், அவருக்கு ஷாஹித் அப்ரிடி பந்துவீசினார். அப்ரிடி வீசிய அந்த ஒவரில் தொடர்ந்து 2 பவுண்டரிகள் அடித்தார் சைப் பாதர். இதனால் அப்ரிடி சிறிது பதற்றத்துடன்காணப்பட்டார்.

ஆனால், அப்ரிடி வீசிய 3-வது பந்தில் பாதர் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். அப்போது, ஆத்திரத்துடன் பேட்ஸ்மேன் பாதரை நோக்கி சத்தமிட்ட அப்ரிடி, ஓய்வு அறையை சுட்டிக்காட்டி வெளியேறு என்றவாறு கூறினார். மூத்த வீரர் அப்ரிடியிடம் இருந்து இந்த செயலை எதிர்பாராத பாதர் சில வினாடிகள் களத்திலேயே அப்பிரிடியை பார்த்துவிட்டு சென்றார்.

அதன்பின் போட்டி முடிந்தபின் தனது ட்விட்டர் பக்கத்தில் பாதர் ஒரு கருத்து பதிவிட்டு இருந்தார். அதில், ‘ அப்ரிடி நீங்கள் கோபப்பட்டாலும் இப்போதும் உங்களை விரும்புகறோம். நீங்கள்தான் எங்கள் தலைவர்’ என்று தெரிவித்திருந்தார்.

இதைப் பார்த்த அப்ரிடி பதிலுக்கு ட்விட் செய்திருந்தார். அதில் ‘ என்னை மன்னித்துவிடு என் ஜூனியர். அந்த நேரத்தில் நடந்தவை எல்லாம் விளையாட்டாக நினைத்துக்கொள். நான் எப்போதுமே எனது ஜூனியர் வீரர்களை விரும்புகிறேன். குட்லக்’ எனத் தெரிவித்தார்.

ஷாஹித் அப்ரீடியின் இந்த பதிவு சமூக ஊடகங்களில் பெரும் பாராட்டைப் பெற்று, அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x