Last Updated : 17 Mar, 2018 06:37 PM

 

Published : 17 Mar 2018 06:37 PM
Last Updated : 17 Mar 2018 06:37 PM

மேஇ தீவுகளுடன் சென்னையில் டி20 போட்டி: ஆஸியுடன் 5 ஒருநாள் போட்டி- இடங்கள், தேதியை அறிவித்தது பிசிசிஐ

 

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வரும் ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள் , இந்திய அணியுடன் விளையாட உள்ள டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகள் நடைபெறும் இடங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) இன்று அறிவித்துள்ளது

இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

மேற்கிந்தியத்தீவுகள் அணியுடன் இந்திய அணி நவம்பர் மாதத்தில் 5 ஒருநாள் போட்டிகளிலும், அதன்பின் 3 டி20 போட்டிகளிலும் விளையாடுகிறது. இந்த ஆண்டில் உள்நாட்டில் மொத்தம் 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இந்திய அணி விளையாட உள்ளது. டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஆப்கானிஸ்தான் முதல் முறையாக இந்தியாவுடன் பெங்களூரில் ஜூன் மாதம் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.

அதன்பின் அக்டோபர் மாதம் தீபாவளிப் பண்டிகைக்கு பின், 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. ஹைதராபாத்தில் முதல் டெஸ்ட் போட்டியும், 2-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டிலும் நடக்கிறது. இதில் ஏதாவது ஒரு டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.

அதன்பின் 5 ஒருநாள் போட்டிகள் நடக்க உள்ளன. இதன் தேதிகள் முடிவாகாத நிலையில், இடங்கள் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, மும்பை, கவுகாத்தி, கொச்சி, இந்தூர், புனே ஆகிய நகரங்களில் 5 ஒருநாள் போட்டிகள் நடக்கின்றன.

டி20 போட்டிகளைப் பொறுத்தவரை, கொல்கத்தா, சென்னை, கான்பூரில் 3 போட்டிகள் நடக்கின்றன. ஆனால் இதற்கான தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்தியா அணி இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு 2 மாதப் பயணமாக செல்கிறது. அந்தப் பயணத்தை முடிந்தபின், ஆஸ்திரேலிய அணி 2019-ம் ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் இந்தியாவுக்கு வருகிறது. அப்போது, 5 ஒரு நாள் போட்டிகள், இரு டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

2019-ம் ஆண்டு பிப்ரவரி 24 முதல் ஒருநாள் போட்டி மொகாலியிலும், 2-வது போட்டி 27-ம்தேதி ஹைதராபாத்திலும், 3-வது போட்டி மார்ச் 2-ம் தேதி நாக்பூரிலும், மார்ச் 5-ம்தேதி டெல்லியிலும், இறுதி மற்றும் 5-வது மார்ச் 8-ம் தேதி ராஞ்சியிலும் நடக்கின்றன.

டி20 போட்டிகளைப் பொருத்தவரை மார்ச் 10-ம் தேதி பெங்களூருவிலும், 13-ம் தேதி விசாகப்பட்டிணத்திலும் நடக்க உள்ளது.''

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x