Published : 09 Mar 2018 04:16 PM
Last Updated : 09 Mar 2018 04:16 PM

58/4 சரிவிலிருந்து மீட்டார் ஹோல்டர்; பபுவா நியுகினியாவை போராடி வென்றது மே.இ.தீவுகள்

ஹராரேயில் நடைபெற்ற உலகக்கோப்பைத் தகுதிச் சுற்று குரூப் ஏ ஆட்டத்தில் மே.இ.தீவுகள் அணி பப்புவா நியூகினிய அச்சுறுத்தலை ஹோல்டரின் 99 ரன் இன்னிங்ஸ் மூலம் களைந்து வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த பபுவா நியுகினியா அணி 200 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க, மே.இ.தீவுகள் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஒருகட்டத்தில் 58/4 என்று சரிவு கண்ட நிலையில் கேப்டன் ஹோல்டர் 101 பந்துகளில் 9 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 99 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார் இவருக்கு உறுதுணையாக ஷேய் ஹோப் 115 பந்துகளில் 49 ரன்கள் எடுக்க 143 ரன்களை இருவரும் சேர்க்க மே.இ.தீவுகள் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

201 ரன்கள் இலக்கை விரட்டும் போது கெய்ல் இல்லாத மே.இ.தீவுகள் அணி அதிரடி எவின் லூயிஸை 2வது ஓவரில் இழந்தது. ஹெட்மையர், சாமுவேல்ஸ் (24), ஜேசன் மொகமத் (0) ஆகியோரை அடுத்தடுத்து இழந்து 58/4 என்று 11.4வது ஓவரில் சரிவு கண்டது.

ஷேய் ஹோப் 2வது ஓவரில் இறங்கி டெஸ்ட் மேட்ச் போல் ஆடி 115 பந்துகளைச் சந்தித்து 49 ரன்களை எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். ஹோல்டர் 2 தொடர் பவுண்டரிகளுடன் தொடங்கி 65 பந்துகளில் 50 ரன்களை எட்டினார். பிறகு 70-ல் இருந்த ஹோல்டர் திடீர் தாண்டவத்தில் இறங்க 12 பந்துகள் இடைவெளியில் 93க்கு உயர்ந்தார். வெற்றிக்கு 1 ரன் தேவை என்ற போது 98 ரன்களில் இருந்த ஹோல்டர் ஒரு ரன் போதும் என்று ஆடி 99 ரன்களை எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

இதன் மூலம் பபுவா நியுகினியா தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டது. அந்த அணியின் கேப்டன் அசாத் வலா 89 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். கார்லோஸ் பிராத்வெய்ட் முதன் முதலாக ஒருநாள் சர்வதேசப் போட்டியில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 151/4 என்று நன்றாக ஆடிய பபுவா நியுகினியா பிராத்வெய்ட் பவுலிங்கில் 169/9 என்று சரிவு கண்டது. கடைசியில் வனுவா என்ற வீரர் 22 பந்துகளில் 2 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 35 விளாச 200 ரன்களை பபுவா நியுகினியா எடுத்தது. ஆட்ட நாயகனாக ஜேசன் ஹோல்டர் தேர்வு செய்யப்பட்டார். குரூப் ஏ-வில் அயர்லாந்து, மே.இ.தீவுகள், யு.ஏ.இ அணிகள் 4 புள்ளிகள் பெற்றுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x