Published : 11 Sep 2014 07:22 PM
Last Updated : 11 Sep 2014 07:22 PM

ஆஸ்கார் பிஸ்டோரியஸ் மீதான கொலைக் குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி ஒலிம்பிக் வீரர் ஆஸ்கார் பிஸ்டோரியஸ் தனது காதலியை திட்டமிட்டுக் கொலை செய்ததாக ஐயமற நிரூபிக்கப் படவில்லை என்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.

இன்று தீர்ப்பு வழங்கிய தென் ஆப்பிரிக்க நீதிபதி தொகோசைல் மாசிபா தனது தீர்ப்பில், “அன்று ஒரு கொலை செய்வோம் என்ற எந்த விதத் திட்டமிடுதலுமின்றியே அவர் செயல்பட்டுள்ளார். மேலும் காதலி படுக்கையறையில் இருந்ததாகவே அவர் கருதியுள்ளார்” என்று கூறினார்.

கொலைக் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்த இந்தத் தீர்ப்பைக் கேட்ட பிஸ்டோரியஸ் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. மெதுவாக அவரது தோள்கள் குலுங்கின.

தனது காதலி ரீவா ஸ்டீன்கேம்ப்பை பிஸ்டோரியஸ் சுட்டுக் கொன்றதாக அவர் மீது வழக்கு நடைபெற்று வந்தது. சுமார் 37 சாட்சிகள் தங்கள் வாக்குமூலங்களை அளித்தனர்.

அவற்றைப் பரிசீலித்த நீதிபதி, முன்கூட்டியே திட்டமிட்டு அவர் கொலை செய்ததற்கான ஆதாரங்கள் இல்லை. மேலும், கொலை நடந்த அன்று இருதரப்பினரும் சத்தம் போட்டதாகவோ, அழுததாகவோ தங்கள் வாக்குமூலத்தில் தெளிவாகக் கூறவில்லை.

ஆனால் டிஃபன்ஸ் தரப்பினர் பிஸ்டோரியஸ் அன்றைய தினம் பயங்கரமாக அலறினார் என்று கூறியதை சவாலான கூற்று என்று வர்ணித்த நீதிபதி, இதற்கு முன்னால் பிஸ்டோரியஸ் அலறியிருந்தால்தான் அந்த அலறலை பிஸ்டோரியஸின் அலறல் என்று அறுதியிடமுடியும். என்வே அது பிஸ்டோரியஸ் அலறல்தான் என்பதற்கு முந்தைய மாடல் இல்லை என்றார்.

மேலும் சாட்சியங்கள் தங்களது கூற்றுக்களில் எங்கு தவறிழைத்தனர் என்பதை நான் மேலும் விளக்குகிறேன் என்றார்.

பிஸ்டோரியஸுக்கும் அவரது காதலிக்கும் இடையே நடந்த மெஸேஜ் பரிமாற்றங்களை அரசு தரப்பு சாட்சியாக முன் வைத்தது, அதாவது இருவருக்கும் இடையே தகராறு இருந்ததற்கான சாட்சியாகவும், அதனால் காதலியைக் கொலை செய்ய பிஸ்டோரியஸுக்கு நோக்கம் இருந்ததாகவும் முன் வைத்தனர். ஆனால் டிபன்ஸ் தரப்பு அளித்த மெசேஜ் பரிமாற்றங்களில் காதலும் அன்புமே இருந்தது என்றார் நீதிபதி,

எப்போதும் இருவருக்கிடையேயான சகஜமான உறவுகள் செயலூக்கம் மிகுந்ததாகவும் கணிக்க முடியாத எதிர்பாராத் தன்மையுடனேயே இருக்கும் என்று கூறிய நீதிபதி அதனை பெரிது படுத்த முடியாது என்றார்.

கடந்த பிப்ரவரி 14, 2013ஆம் ஆண்டு தன் வீட்டு கழிவறையில் அன்னியர் இருப்பதாக நினைத்து துப்பாக்கியால் சுட்டதாக பிஸ்டோரியஸ் தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். தன் காதலி படுக்கையறையில் இருந்ததாகவே தான் கருதியாக அவர் கூறியிருந்தார்.

இதைத்தான் அரசு தரப்பு அண்டை வீட்டார் சாட்சியங்களுடன் பிஸ்டோரியஸுக்கு எதிராக கொண்டு வந்தனர். அதாவது இருவருக்கும் சண்டை நடந்ததாகவும் அதன் முடிவில் பிஸ்டோரியஸ் சுட்டார் என்றும் காதலி அலறினார் என்றும் அரசு தரப்பு சாட்சியங்கள் கூறின.

ஆனால் டிபன்ஸ் தரப்பில் கூறும்போது பிஸ்டோரியஸ் காதலி அலறவில்லை மாறாக தெரியாமல் தன் காதலியையே சுட்டுவிட்ட அதிர்ச்சியில் பிஸ்டோரியஸ்தான் அலறினார் என்று தெரிவித்தனர்.

ஆகவே காதலியை திட்டமிட்டுக் கொல்லவில்லை என்று நீதிபதி உறுதியாகத் தனது தீர்ப்பில் கூறியுள்ளார். ஆனால் ஒரு கொலை நடந்துள்ளது. அதற்கான தண்டனை உண்டா என்பது இனிமேல்தான் தெரியவரும்.

இதற்கிடையே நீதிபதியின் இந்தத் தீர்ப்பு சட்ட நிபுணர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x