Published : 26 Mar 2018 10:02 AM
Last Updated : 26 Mar 2018 10:02 AM

பந்தை சேதப்படுத்திய விவகாரம்: கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார் ஸ்மித் - ஒரு டெஸ்டில் விளையாட தடை, 100 சதவீதம் அபராதம் விதித்தது ஐசிசி

பந்தைசேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித்தும், துணைக் கேப்டன் பதவியில் இருந்து டேவிட் வார்னரும் ராஜினாமா செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் ஸ்மித்துக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது ஐசிசி.

தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, கேப்டவுன் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்றுமுன்தினம் நடைபெற்ற 3-வது நாள் ஆட்டத்தின் போது ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பான்கிராப்ட் தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து மஞ்சள் நிறத்திலான பொருளை பந்தை சேதப்படுத்தினார். இது கேமராவில் தெளிவாகப் பதிவானது.

இதையடுத்து பந்தை சேதப்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு பதிவானது. மேலும், பந்தை சேதப்படுத்தியதாக ஒப்புக்கொண்ட கேப்டன் ஸ்மித், இந்த விவகாரம் தனக்கு தெரிந்தேதான் நடந்தது என்று தெரிவித்தார். இதனால், ஸ்மித்தை உடனடியாக கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது.

ஆஸ்திரேலிய விளையாட்டு ஆணையம் கேப்டன் பதவியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித்தை உடனடியாக நீக்க வேண்டும், ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தது.

மேலும், ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல், பந்தை சேதப்படுத்திய விவகாரம் குறித்து அறிந்துதான் மிகவும் வேதனையும், அதிர்ச்சியும் அடைந்ததாகத் தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டில் சிக்கியவர்களை உடனடியாக விசாரிக்கவும், கேப்டன் பதவியில் இருந்து ஸ்மித்தை நீக்கவும் அவர் உத்தரவிட்டார்.

இதையடுத்து, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித்தும், துணைக் கேப்டன் பதவியில் இருந்து டேவிட் வார்னரும் ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். இது குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேம்ஸ் சதர்லாந்து நிருபர்களிடம் கூறியதாவது:

பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோருடன் விவாதம் செய்தோம். இதைத் தொடர்ந்து இருவமே தங்களது பொறுப்புகளில் இருந்து விலக ஒப்புக் கொண்டனர். 3-வது டெஸ்ட் போட்டியின் எஞ்சியுள்ள பகுதிக்கு விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் கேப்டனாக செயல்படுவார். அவருக்கு கீழ் ஸ்மித், வார்னர் செயல்பட வேண்டும். இது உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. இந்த டெஸ்ட் போட்டி தொடர்ந்து நடைபெற வேண்டும். இடைப்பட்ட காலத்தில், அவசர நிலை கருதி இந்த விவகாரம் நாங்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொள்வோம்.

இதற்காக கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் இயான் ராய், அணியின் திறன்மேம்பாட்டு தலைவர் பாட் ஹோவார்ட் ஆகியோர் உடனடியாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளனர். எங்களைப் போன்றே அனைத்து ஆஸ்திரேலியர்களும் பதிலை எதிர்பார்க்கிறார்கள். இதை முன்னுரிமை விஷயமாக கருதி எங்களுக்கு கிடைக்கும் தகவல்களை மக்களுக்கு தெரிவிப்போம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய ஐசிசி, ஸ்மித்துக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடைவிதித்துள்ளது. மேலும் போட்டியின் ஊதியத்தில் அவருக்கு 100 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் பான்கிராப்டுக்கு போட்டியின் ஊதியத்தில் 75 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன் 3 தகுதியிழப்பு புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளது.

26CHPMU_MALCOLM_TURNBULL.1 மால்கம் டர்ன்புல்

அதிர்ச்சியடைந்த பிரதமர் மால்கம்

கேப்டவுன் டெஸ்ட் விவகாரம் தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் கூறும்போது, காலையில் எழுந்தபோது, தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த செய்தி அனைவரையும் வேதனையில் ஆழ்த்தி இருக்கிறது.

ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்திய செய்தியை அறிந்ததும், நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன், வேதனை அடைந்தேன். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஏமாற்றுத்தனத்தில், மோசடியில் ஈடுபட்டு இருக்கிறது என்ற விஷயம் நம்பிக்கைக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது.

ஆஸ்திரேலியாவின் பிரதிநிகளாக கிரிக்கெட் அணி அங்கு சென்றுள்ளது. அங்கு அவர்கள் செய்யும் எந்த ஒரு ஒழுக்கக்குறைவான செயலும் ஒட்டுமொத்த தேசத்துக்கும் அவமானமாகும். ஆதலால், உடனடியாக விசாரணை செய்து தேவையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளேன். இந்த விவகாரத்தால் நான் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளேன்” என்றார்.

மறக்க முடியாதவை இவை...

# 1994-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து அணியின் கேப்டன் மைக் ஆதர்டன் அழுக்கை கொண்டு பந்தை சேதப்படுத்தியததாக புகார் கூறப்பட்டது. இதில் அவருக்கு 2 ஆயிரம் யூரோ அபராதம் விதிக்கப்பட்டது.

# 2001-ல் தென் ஆப்பிரிக்க சுறுப்பயணத்தில் சச்சின் டெண்டுல்கர் பந்து மீது ஒட்டிக்கொண்டிருந்த புற்களை அகற்றினார். நடுவரின் அனுமதியை அவர் பெறாததால், பந்தை சேதப்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு ஒரு ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்பட்டது.

# 2006-ல் இங்கிலாந்துக்கு எதிரான ஓவல் டெஸ்டின் போது பந்தின் தன்மையை பாகிஸ்தான் அணி மாற்ற முயன்றதாக கூறி நடுவர்கள் இங்கிலாந்து அணிக்கு 5 ரன்கள் கூடுதலாக வழங்கினார்கள். இதனால் கேப்டன் இன்சமாம் தலைமையிலான பாகிஸ்தான் அந்த போட்டியை புறக்கணித்து மைதானத்தில் இருந்து வெளியேறியது.

# இந்தப் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பான விசாரணையில் இன்சமாம் தப்பித்த போதிலும் போட்டியை புறக்கணித்தற்காக 4 ஆட்டங்களில் விளையாட தடை விதிக்கப்பட்டார். சில ஆண்டுகளுக்கு பிறகு சர்ச்சைக்குரிய அந்த ஆட்டம் டிராவில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

# 2016-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஹோபர்ட் டெஸ்டின் போது சூயிங் கம் மென்ற உமிழ்நீரின் உதவியால் பந்தின் பளபளப்பு தன்மையை மாற்றியதாக தென் ஆப்பிரிக்க கேப்டன் டுபிளெஸ்ஸிஸ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் போட்டியின் ஊதியத்தில் 100 சதவீதம் அவருக்கு அபாராதமாக விதிக்கப்பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x