Published : 13 Mar 2018 09:35 AM
Last Updated : 13 Mar 2018 09:35 AM

இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: லூகாஸ் பவுலியை வீழ்த்தினார் பாம்ப்ரி- 109-ம் நிலை வீரரிடம் வீழ்ந்தார் ஜோகோவிச்

இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி 2-வது சுற்றில் உலகின் 12-ம் நிலை வீரரான பிரான்சின் லூகாஸ் பவுலியை வீழ்த்தினார்.

அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 110-ம் நிலை வீரரான இந்தியாவின் யுகி பாம்ப்ரி, 12-ம் நிலை வீரரான பிரான்சின் லூகாஸ் பவுலியை எதிர்த்து விளையாடினார். ஒரு மணி நேரம் 19 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் யுகி பாம்ப்ரி 6-4 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

25 வயதான யுகி பாம்ப்ரி தனது டென்னிஸ் வாழ்க்கையில், தரவரிசையில் முன்னணியில் உள்ள வீரரை வீழ்த்துவது இதுவே முதன்முறை. இதற்கு முன்னர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சிட்டி ஓபன் தொடரில் 22-ம் நிலை வீரரான பிரான்சின் மோன்பில்சை வீழ்த்தியிருந்தார். மேலும் 2014-ம் ஆண்டு சென்னை ஓபன் தொடரில் 16-ம் நிலை வீரரான இத்தாலியின் பேபியோ போக்னியை தோற்கடித்திருந்தார். ஆனால் அந்த ஆட்டத்தில் போக்னி காயம் காரணமாக வெளியிருந்தார்.

தற்போது லூகாஸ் பவுலியை வீழ்த்தி உள்ளதன் மூலம் 45 புள்ளிகளையும், பரிசுத் தொகையாக சுமார் ரூ.30.67 லட்சம் பெறுவதையும் உறுதி செய்துள்ளார் யுகி பாம்ப்ரி. 3-வது சுற்றில் யுகி பாம்ப்ரி, 21-ம் நிலை வீரரான அமெரிக்காவின் சேம் குயரேவை எதிர்கொள்கிறார். சேம் குயரே தனது 2-வது சுற்றில் 6-4, 7-5 என்ற நேர் செட்டில் ஜெர்மனியின் மிச்சா ஜிவெரேவை வீழ்த்தினார்.

ஜோகோவிச் தோல்வி

சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6-3, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் அர்ஜென்டினாவின் பெட்ரிகோவையும், பிரான்சின் மோன்பில்ஸ் 6-7 (5-7), 7-6 (7-3), 7-5 என்ற செட் கணக்கில் போராடி அமெரிக்காவின் ஜான் இஷ்நெரையும், குரோஷியாவின் மரின் சிலிச் 7-5, 6-3 என்ற நேர் செட்டில் ஹங்கேரியின் மார்டன் புசோவிக்ஸையும் வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினர். 10-ம் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச் 6-7, 6-4, 1-6 என்ற செட் கணக்கில் 109-ம் நிலைவீரரான ஜப்பானின் தரோ டேனியலிடம் தோல்வியடைந்தார்.

மகளிர் பிரிவு 3-வது சுற்று ஆட்டத்தில் முதல் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலப், அமெரிக்காவின் கரோலின் டோல்ஹைடை எதிர்த்து விளையாடினார். முதல் செட்டை 1-6 என இழந்த ஹாலப், அதன் பின்னர் கடைசி இரு செட்களையும் 7-6 (7-3), 6-2 என போராடி வென்றார். முடிவில் சிமோனா ஹாலப் 1-6, 7-6 (7-3), 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x