Published : 01 Mar 2018 09:52 PM
Last Updated : 01 Mar 2018 09:52 PM

தொடக்கத்திலேயே ரிவியூக்களை இழந்த தெ.ஆ; ஸ்மித், வார்னர் அரைசதங்களுடன் ஆஸி. 225/5

டர்பனில் இன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கைத் தேர்வு செய்ய முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா அணி தன் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்துள்ளது.

வெளிச்சம் போதாமை காரணமாக 14 ஓவர்கள் மீதமிருக்கையில் முதல் நாள் ஆட்டம் முடிக்கப்பட்டது, இதனால் 177/5 என்ற இக்கட்டிலிருந்து ஆஸ்திரேலியாவை மேலும் சேதமடையவிடாமல் தடுத்து ஆடிவரும் மிட்செல் மார்ஷ் (32), டிம் பெய்ன் (21) ஆகியோர் 2வது புதிய பந்தில் பிலாண்டர், மோர்கெல், ரபாடாவை எதிர்கொள்வதிலிருந்து தப்பித்தனர்.

ஆனால் முதல் நாள் ஆட்டம் எதிர்பார்த்த அளவில் இல்லை. மைதானத்தில் ரசிகர்களின் எண்ணிக்கை சுமார் 120 பேர்.

ஸ்லிப் மற்றும் விக்கெட் கீப்பிங் என்று முதல் நாள் ஆட்டம் களத்தின் இப்பகுதியில் சுறுசுறுப்பாக அமைந்தது. ஏனெனில் 5 ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்கள் இந்தப் பகுதியில்தான் ஆட்டமிழந்தனர்.

ஷான் மார்ஷ் 40 ரன்கள் (இந்த ரன்களே அவரது அதிர்ஷ்டம்) எடுத்திருந்த போது தேநீர் இடைவேளைக்குப் பிறகு கேசவ் மஹாராஜிடம் ஆட்டமிழந்தது ஸ்லிப்பில் இருந்த டிவில்லியர்ஸ் கேட்சில்தான்.

தொடர்ச்சியாக தன் 5-வது அரைசதத்தை எடுத்த ஸ்டீவ் ஸ்மித் தனது வழக்காமான அனாயசத்துடன் ஆடவில்லை. 46 ரன்களிலிருந்து 50 ரன்கள் செல்ல 34 பந்துகள் எடுத்துக் கொண்டார்.

ஆட்டம் தொடங்கி முதல் 1 மணி நேரத்துக்குள்ளாகவே தனது இரண்டு ரிவியூக்களையும் தென் ஆப்பிரிக்கா விரயம் செய்தது. முதல் ஓவரின் 3வது பந்திலேயே மோர்னி மோர்கெல் பந்து பேங்கிராப்ட் பேடைத் தாக்க, களநடுவர் மறுக்க, 3ம் நடுவரிடம் சென்றனர், ஆனால் அது உயரம் மற்றும் வைடாகவும் சென்ற பந்து, முதல் ரிவியூ காலி. அதே போல் மஹராஜ் பந்து ஒன்று அதிகமாகத் திரும்பி வார்னர் பேடைத் தாக்கியது, அதிகமாகத் திரும்பியதால்தான் அது நாட் அவுட், மீண்டும் ரிவியூ சொதப்பல் இரண்டையும் இழந்தது தென் ஆப்பிரிக்கா.

இதனால் 19 ரன்களில் ஷான் மார்ஷ், ரபாடா பந்தில் வாங்கிய பிளம்ப் எல்.பி, ரிவியூ செய்யப்பட முடியாமல் போனது. ஆனால் அது காஸ்ட்லியாக ஆகவில்லை காரணம் மஹராஜ் அவரை 40 ரன்களில் வீழ்த்தினார்.

தொடக்க வீரர் பேங்கிராப்ட்டின் டெஸ்ட் இடம் கவலைக்குரியதாகியுள்ளது, இன்று அவர் 5 ரன்களில் பிலாண்டர் வீசிய அவுட் ஸ்விங்கரை ஆஃப் திசையில் நகர்ந்து வந்து, 3 ஸ்டம்புகளும் தெரிய, போய் இடிக்க வேண்டிய அவசியம்தான் என்னவென்று தெரியவில்லை. நகர்ந்து போய் இந்தா கேட்ச் பிடித்துக் கொள் என்று டிகாக்கிடம் கொடுத்தார் வெளியேறினார்.

டேவிட் வார்னர் தன் 51 ரன்களுக்கு 6 பவுண்டரிகளுடன் ‘உலக’ எச்சரிக்கையுடன் ஆடினார். கடைசியில் வெர்னன் பிலாண்டர் பந்து ஒன்று கூடுதலாக எழும்ப எட்ஜ் ஆகி டிவில்லியர்ஸின் அபாரமான கேட்ச் ஆக மாறியது.

இந்த விக்கெட் 55 ரன்கள் 3வது விக்கெட் கூட்டணியை முடிவுக்குக் கொண்டு வந்தது. முன்னதாக உஸ்மான் கவாஜா, ரபாடா பந்தை எட்ஜ் செய்து 14 ரன்களில் வெளியேற ஆஸ்திரேலியா 39/2 என்று தடுமாறியது.

ஸ்மித் 11 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்து இன்னொரு சதம் என்று தென் ஆப்பிரிக்காவை அச்சுறுத்திய போதுதான் மஹராஜ் பந்தை கட் செய்ய முயன்று எட்ஜ் ஆகி டிவில்லியர்ஸ் கேட்சுக்கு வெளியேறினார். டிகாக் கிளவ்வில் பட்டு தெறித்த பந்தை டிவில்லியர்ஸ் பிடித்தார்.

ஷான் மார்ஷ் 19-ல் தப்பித்த பிறகு 40 ரன்களில் மஹராஜ் பந்து ஒன்று பவுன்ஸ் ஆக எட்ஜைத் தொட்டு டிவில்லியர்ஸிடம் கேட்ச் ஆனது. டிவில்லியர்ஸ் மொத்தம் 3 கேட்ச்கள் என்று இந்தியா தொடரிலிருந்தே பீல்டிங்கில் அசத்தி வருகிறார்.

177/5 என்ற நிலையிலிருந்து மேலும் சேதமடையாமல் மிட்செல் மார்ஷ் (32), டிம் பெய்ன் (21) ஸ்கோரை 225 ரன்களுக்குக் கொண்டு சென்றபோது ஆஸி. அதிர்ஷ்டத்தில் ஆட்டம் வெளிச்சமின்மை காரணமாக முடித்துக் கொள்ளப்பட்டது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் பிலாண்டர், மஹாராஜ் தலா 2 விக்கெட்டுகளையும் ரபாடா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x