கொழும்பு வீரர்கள் ஓய்வறை கண்ணாடிக் கதவை உடைத்து நொறுக்கியது வங்கதேச வீரரா? கிளம்பியது புதிய சர்ச்சை

கொழும்பு வீரர்கள் ஓய்வறை கண்ணாடிக் கதவை உடைத்து நொறுக்கியது வங்கதேச வீரரா? கிளம்பியது புதிய சர்ச்சை
Updated on
2 min read

நேற்று கொழும்புவில் இலங்கைக்கும் வங்கதேசத்துக்கும் இடையே நடைபெற்ற முத்தரப்பு போட்டி அசிங்கமான நிகழ்வுகளைக் கொண்டதானது, தெரு கிரிக்கெட் போன்ற காட்சிகள் சர்வ சகஜமாக நடந்தேறியது, இதோடு நில்லாமல் கொழும்பு மைதானத்தில் உள்ள வங்கதேச வீரர்கள் ஓய்வறைக் கண்ணாடிக் கதவு உடைந்து நொறுங்கிய நிலையிலான புகைப்படமும் தற்போது விவகாரத்தை ஊதிப்பெருக்கியுள்ளது.

நோ-பால் சர்ச்சைப் பெரிதாகி வீரர்களுக்குள் மோதலாகி பிறகு வெற்றி பெற்றவுடன் அசிங்கமான வங்கதேச பாம்பு டான்ஸாகி, குசல் மெண்டிஸ் அதனைக் கண்டு கொதிப்பாகியது போக தற்போது வங்கதேச வீரர்கள் அல்லது வீரர்தான் கொழும்பு வீரர்கள் ஓய்வறைக் கண்ணாடிக் கதவை உடைத்தனர் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆட்ட நடுவரான கிறிஸ் பிராட் துப்பறியும் நிபுணராகி சிசிடிவி பதிவை பார்வையிட்டுள்ளார். கேண்டீன் பணியாளர் ஒருவர் இதற்குக் காரணமான வீரர் பெயரை கிறிஸ் பிராடிடம் தெரிவித்துள்ளார். ஆனால் வங்கதேச நிர்வாகம் இழப்பீடு கொடுக்க ஒப்புக் கொண்டதாகத் தெரிகிறது.

ஆட்டத்தின் போது கடைசி ஓவரில் நடந்த அசிங்கமான சம்பவத்தில் நோ-பால் கொடுக்கவில்லை என்பதற்காக மஹ்முதுல்லா நடுவரிடம் வாக்குவாதம் புரிய குளிர்பானம் எடுத்து வந்த வங்கதேச பதிலி வீரர் இலங்கை வீரர்களிடம் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனையடுத்து இலங்கை வீரர் அவரைத் தள்ளினார். மேலும் அவருடன் எல்லைக்கோடு வரை சில இலங்கை வீரர்கள் சென்றனர். இதனால் கொதிப்படைந்த கேப்டன் ஷாகிப் அல் ஹசன் நிலைமையை கேப்டனாகச் சமாதானம் செய்யாமல் எரியும் நெருப்பில் எண்ணெயை விடுவது போல் ரிசர்வ் அம்பயருடன் வாக்குவாதம் புரிந்தார். பிறக் ஆட வேண்டாம் வந்துவிடுங்கள் என்பது போல் மஹ்முதுல்லா, ரூபல் ஹுசைனை நோக்கிச் செய்கை செய்தார்.

ஆனால் கலீத் மஹ்மூத் ஆட்டம் தொடர வேண்டும் என்று கூற மஹ்முதுல்லா சிக்ஸருடன் வெற்றி பெற்றா, அத்தோடு முடித்தால் பரவாயில்லை எனலாம், ஆனால் அனைத்து வங்கதேச வீரர்களும் ஒன்று கூடி பாம்பு டான்ஸ் என்று கும்மியடித்தனர், இது குசால் மெண்டிஸின் கோபத்தை கிளற அவர் ஏதோ கத்தியபடியே கையைக் காண்பித்து பேசினார், அவரை தமிம் இக்பால் சமாதானப்படுத்தினார், போதாதென்று வங்கதேச பெஞ்ச் வீரர் நுருல் ஹசன் தன்பங்குக்கு ஏதோ கோபமடைய கடுப்பான மஹ்முதுல்லா அவரை அழைத்துச் சென்று அறிவுரை வழங்கினார்.

ஸ்கொயர் லெக் அம்பயர் நோ-பால் என்று செய்கை செய்து பிறகு ஆலோசனை செய்து நோ-பால் முடிவு விலக்கிக் கொள்ளப்பட்டதுதான் இந்த அனைத்து அசிங்கங்களுக்கும் மூலக் காரணமாக அமைந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in