Last Updated : 25 Mar, 2018 11:58 AM

 

Published : 25 Mar 2018 11:58 AM
Last Updated : 25 Mar 2018 11:58 AM

கிரிக்கெட் வீரர் முகமது ஷமி சென்ற கார் மீது லாரி மோதியது

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி சென்ற கார் விபத்தில் சிக்கியது. இந்தவிபத்தில் முகமது ஷமிக்கு தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கு கடந்த ஒரு மாதமாகவே பிரச்சினைக்கு மேல் பிரச்சினை வந்து கொண்டே இருந்தது.

வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பாகிஸ்தான் நாட்டுப் பெண்ணுடன் தவறான தொடர்பு வைத்துள்ளார், தன்னைக் கொலை செய்ய முயற்சித்தார் என்று அவரின் மனைவி ஜகான் அடுக்கடுக்கான புகார்களை சமீபத்தில் தெரிவித்தார். இது தொடர்பாக கொல்கத்தா போலீஸாரும் ஷமி மீது வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும், பாகிஸ்தானிய பெண் அலிஷ்பா என்பவர் மூலம், முகமது பாய் என்பவரை துபாயில் சந்தித்து மேட்ச் பிக்சிங் செய்ய முகமது ஷமி பணம் பெற்றார் என்றும் அவரின் மனைவி ஜகான் தெரிவித்தார்.

மேலும், பிப்ரவரி மாதம் முகமது ஷமி துபாய் சென்றார் என்று கொல்கத்தா போலீஸார் தெரிவித்தனர். இதனால், பிசிசிஐ அமைப்புக்குச் சந்தேகம் வலுத்தது. இதன் காரணமாக, முகமது ஷமிக்கு வழங்கப்பட இருந்த ஊதிய ஒப்பந்தம், ஐபிஎல் வாய்ப்பு ஆகியவற்றை பிசிசிஐ தற்காலிகமாக நிறுத்திவைத்தது.

இந்நிலையில், முகமது ஷமியிடம் பிசிசிஐ அமைப்பின் ஊழல் ஒழிப்பு அமைப்பு இன்று விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் முடிவில் முகமது ஷமி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறானவை எனத் தெரியவந்தது.

இதையடுத்து, முகமது ஷிமிக்கு நிறுத்திவைக்கப்பட்டு இருந்த ஊதிய ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வந்தது, அவர் பி பிரிவில் ஆண்டுக்கு ரூ.3 கோடி ஊதியத்தில் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டார். மேலும், ஐபில் போட்டியில் அனுமதிக்கப்பட்டதால், கொல்கத்தா அணிக்கு விளையாட உள்ளார்.

இந்நிலையில் டேராடூன் நகரில் இருந்து டெல்லிக்கு முகமது ஷமி இன்று காரில் சென்ற போது, ஷமியின் கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் முகமது ஷமிக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தலையில் சிறிய அளவில் தையல்கள் போடப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து வேறுஒருகார் மூலம் மீண்டும டேராடூன் நகருக்கு திரும்பினார்.

டேராடூனில் உள்ள அபிமன்யு கிரிக்கெட் அகாடெமியில் கடந்த 2 நாட்களாக உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் முகமது ஷமி தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். சமீபத்தில் அவரின் மனைவி அளித்த சில பிரச்சினைகளில் தீவிர மனஉளைச்சலுக்கு இருந்ததால், இங்கு வந்திருந்து உளவியல் ரீதியான சிகிச்சைகளும், பயிற்சியும் பெற்றார். இந்த பயிற்சி முடிந்து டெல்லிக்கு சென்றபோது இந்த விபத்து நேர்ந்தது.

இது குறித்து அபிமன்யு அகாடெமியின் தலைவர் ஈஸ்வரன் கூறுகையில், ‘ முகமது ஷமி டேராடூனில் இருந்து டெல்லிக்கு காரில் சென்றபோது அதன்மீது லாரி மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் ஷமியின் தலையில் காயம் ஏற்பட்டது. அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தலையில் சில தையல்கள் போடப்பட்டு மீண்டும் டேராடூனுக்கு அழைத்து வரப்பட்டார். ஓய்வுக்கு பின் தற்போது ஷமி நலமாக இருக்கிறார். டேராடூனில் இருந்து நாளை டெல்லிக்கு புறப்படுவார். பெரிய அளவிலான காயம் ஏற்படாதகாரணத்தால், அவர் ஐபில் போட்டியில் விளையாடுவதில் பிரச்சினை இல்லை’ எனத் தெரிவித்தார்..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x