Published : 03 Mar 2018 07:27 PM
Last Updated : 03 Mar 2018 07:27 PM

என் மாமியார் கணித்துக் கூறிய புகழ்பெற்ற கொல்கத்தா டெஸ்ட் வெற்றி: கங்குலி ருசிகர பதிவு

 

2001ம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான மறக்க முடியாத, டெஸ்ட் போட்டி வெற்றியை முன்கூட்டியே எனது மாமியார் கணித்துக் கூறினார் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

கடந்த 2001ம் ஆண்டு கொல்கத்தாவின் ஈடன்கார்டன் மைதானத்தில் இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையே நடந்த 2-வது டெஸ்ட் போட்டியை கிரிக்கெட் ரசிகர்கள் யாராலும் மறந்திருக்க முடியாது.

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 445 ரன்கள் ஆட்டமிழந்தது, அடுத்து களமிறங்கிய இந்திய அணி 171 ரன்களில் ஆட்டமிழந்து பாலோ-ஆன் பெற்றது. ஆனால், 2-வது இன்னிங்சில் களத்தில் நங்கூரம் பாய்ச்சிய இந்திய வீரர்கள் வி.வி.எஸ். லட்சுமண் 281 ரன்களும், ராகுல் டிராவிட் 180 ரன்கள் சேர்த்தனர். இதனால் இந்திய அணி 657 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.

அடுத்து 384 ரன்கள் பின்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி ஹர்பஜனின் மாயஜால சுழற்பந்துவீச்சில் சிக்கி 212ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி 171 ரன்களில் அபார வெற்றி பெற்றது.

பாலோ-ஆன் பெற்ற ஒரு அணி வெற்றி பெறுவது கிரிக்கெட் வரலாற்றில் 3-வது முறையாக அமைந்து, இந்திய அணி வரலாற்றில் இடம் பெற்றது.

இந்த கிரிக்கெட் டெஸ்ட் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தனது “ ஏ செஞ்சுரி இஸ் நாட் இனஃப்” நூலில் சுவாரஸ்யமாகத் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

2001ம் ஆண்டு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. ஆனால், ஒரே ஒருவர் மட்டும் நாங்கள் உறுதியாக வெற்றி பெறுவோம் என்று கணித்துக் கூறினார். அது என்னுடைய மாமியார்தான்.

ஆஸ்திரேலிய அணி 445 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்ஸில் நாங்கள் 171 ரன்களில் ஆட்டமிழந்தவுடன், ‘ அய்யோ அனைத்தும் முடிந்துவிட்டது, டெஸ்ட் கையைவிட்டு போய்விட்டது’ என்று சோர்ந்துவிட்டோம். என் கேப்டன் பதவியும் என்னைவிட்டு போகப்போகிறது என்று மனதுக்குள் பயம் வந்துவிட்டது.

3-வது நாளில் ஆஸ்திரேலிய அணி எங்களுக்கு பாலோ-ஆன் கொடுத்தது. நாங்கள் பயத்துடனே ஆட்டத்தை எதிர்கொண்டு முக்கிய விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். களத்தில் விவிஎஸ் லட்சுமணும், ராகுல் டிராவிட்டும் ஆடிக்கொண்டு இருந்தனர்.

மதிய உணவு நேரத்தில் எனது மாமியார் எனக்கு வீட்டில் இருந்து சமைத்து உணவு எடுத்துக்கொண்டு நாங்கள் தங்கி இருக்கும் அறைக்கு வந்தார். அப்போது, அறையில் நானும், சகவீரர்களும் அவர் கொண்டு வந்த உணவை சாப்பிட்டுக்கொண்டே பேசிக்கொண்டு இருந்தோம்.

அப்போது, கிரிக்கெட் பற்றி பேச்சுஎழுந்த போது, எனது மாமியார், ‘ கவலைப்படாதீர்கள், இந்த டெஸ்ட் போட்டியில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் எனக்கு தெரியும்’ என்றார். நான் அவரிடம் சற்று கடிந்து கொண்டேன்.

‘உங்களுக்கு என்னை கிண்டல் செய்யவேண்டுமென்றால் வீட்டில் என்ன வேண்டுமானாலும் பேசுங்கள், இப்படி பொது இடத்தில் அணியை பற்றி கிண்டல் செய்வதா?’என சிரித்துக்கொண்டே கேட்டேன்.

‘தவறான நேரத்தில் தவறாக கேட்பது உங்களுக்கு வழக்கமாகிவிட்டது’ என்றேன். அதன்பின் எனது மாமியார் அங்கிருந்து புறப்பட்டுவிட்டார். இது குறித்து எனது மனைவியை அழைத்து அவரின் தாய் விளையாட்டாக கூறியதை தெரிவித்து சிரித்தேன்.

அவரும் ‘என் தாய்கூறியதை பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள், அமைதியாக இருங்கள்’ என்று ஆறுதல் தெரிவித்தார். அதன்பின் அந்த சம்பவத்தை மறந்துவிட்டேன்.

ஆனால், அடுத்தடுத்த நாளில் ஆட்டத்தின் போக்கு மாறிவிட்டது. ஆட்டம் எங்கள் கைகளுக்கு வந்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வெற்றியைப் பெற்றோம். ஆஸ்திரேலிய அணியை 171 ரன்களில் வீழ்த்தி பெற்ற அந்த வெற்றியை என்னால் மறக்கவே முடியாது.

ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து ஸ்டீவ் வாஹ் தலைமையில் 16 போட்டிகள் வென்ற நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் நாங்கள் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தோம்.

இந்த போட்டி முடிந்தபின் ஒட்டுமொத்த அணியையும் எனது வீட்டுக்கு இரவு விருந்துக்கு அழைத்து இருந்தேன். நான் கொல்கத்தாவில் எனது மாமியார் வீட்டுக்கு, அடுத்த வீட்டில் குடியிருந்தேன். அதாவது 16ம் எண் வீடு என்னுடையது, 17-ம் எண் எனது மாமியார் வீடு.

நாங்கள் வீட்டுக்கு நுழையும், பால்கனியில் அமர்ந்திருந்த எனது மாமியார், என்னைப் பார்த்து சத்தமாகச் சிரித்து, ‘என்ன கங்குலி, நான்தான் 2 நாட்களுக்கு முன்பே கூறினேனே, நீங்கள் தான் வெற்றி பெறுவீர்கள்’ என்று நம்பாமல் கோபப்பட்டீர்கள்?. இப்போது என்ன நடந்தது?’ எனக் கூறிச் சிரித்தார்.

ஆனால், நேர்மையாகக் கூறுகிறேன். அன்று சாப்பாடு கொண்டு வந்திருந்த எனது மாமியார், என்ன நினைத்து அப்படி பேசினார் என எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால், விவிஎஸ். லட்சுமண், ராகுல் டிராவிட்டைத் தவிர்த்து யாரும் வெற்றி பெறுவோம் என்று நினைக்கவே இல்லை.

ராகுல் டிராவிட்டும் 180 ரன்கள் அடித்தது வீணாகிப் போய் விடுமோ என்று கவலையுடன் இருந்தார், லட்சுமணும் 281 ரன் அடித்து வருத்தத்தை வெளியில் காட்டாமல் இருந்தார். இந்த வெற்றி இருவருக்கும் மிகவும் மகிழ்ச்சியை அளித்தது.

அடுத்து நடந்த சென்னை டெஸ்ட் போட்டியில் டிராவிட் 81 ரன்கள் சேர்த்தார். அந்த டெஸ்ட் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி நாங்கள் வெற்றி பெற்றோம். இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றியபின், என் தனிமனித வாழ்க்கையிலும், கேப்டனாகவும் மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்தேன். இந்த புள்ளியில்தான் இந்திய கிரிக்கெட்டும் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைச் சந்தித்தது

இவ்வாறு கங்குலி குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x