Published : 06 Mar 2018 09:18 AM
Last Updated : 06 Mar 2018 09:18 AM

மகளிர் ஹாக்கி போட்டியில் தென் கொரியாவை வீழ்த்தியது இந்தியா

தென் கொரியா மகளிர் அணிக்கு எதிரான ஹாக்கித் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்திய மகளிர் ஹாக்கி அணி தென் கொரியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முதல் போட்டி நேற்று சியோல் நகரில் நடைபெற்றது. 5-வது நிமிடத்திலேயே இந்திய அணி தனது முதல் கோலை அடித்தது. இந்த கோலை லால்ரெம்ஷியாமி அடித்தனார். இதனால் தொடக்கத்திலேயே இந்திய அணி 1-0 என முன்னிலை வகித்தது.

2-வது கால் பகுதியில் இந்திய வீராங்கனைகள் மேலும் துடிப்புடன் விளையாடினார்கள். 18-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இதை கோல் விழவிடாமல் தென் கொரியா கோல்கீப்பர் மிஜின் ஹன் அற்புதமாக தடுத்தார். அடுத்த 5 நிமிடங்களில் மீண்டும் ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைத்தது. இம்முறையும் மிஜின் ஹன் முட்டுக்கட்டை போட்டார்.

23-வது நிமிடத்தில் தென் கொரியா அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்திய அணியின் அறிமுக கோல்கீப்பரான சுவாதி அற்புதமாக செயல்பட்டு, தென் கொரிய அணியின் கோல் அடிக்கும் முயற்சியை தடுத்தார். இதைத் தொடர்ந்து 3-வது கால் பகுதியிலும் தென் கொரியா வீராங்கனைகள் பதிலடி கொடுக்க முயற்சித்தனர். ஆனால் இந்திய வீராங்கனைகள் தங்களது தடுப்பாட்டத்தால் அவற்றை முறியடித்தனர்.

4-வது கால் பகுதியின் தொடக்கத்தில் தென் கொரியா அணிக்கு இரு பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் இருமுறையும் கோல்கீப்பர் சுவாதி அருமையாக செயல்பட்டு இந்திய அணியை கோல் வாங்குவதில் இருந்து தப்பிக்க வைத்தார். மேலும் 50-வது நிமிடத்தில் பெனால்டி ஸ்டிரோக்கிலும் தென் கொரிய அணியை கோல் அடிக்க விடாமல் தடுப்பு அரணாக செயல்பட்டார் சுவாதி.

கடைசி கட்டத்தில் இந்திய அணிக்கு இரு பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் இந்திய வீராங்கனைகள் அவற்றை சரியாக பயன்படுத்தத் தவறினர். அதேவேளையில் தடுப்பாட்டத்தில் சிறந்த கவனம் செலுத்தி தென் கொரிய அணியை கோல் அடிக்க விடாமல் செய்தனர். முடிவில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டம் இந்திய அணியின் கேப்டன் ராணி ராம்பாலுக்கு 200-வது போட்டியாகவும், முன்னணி வீராங்கனையான மோனிகாவுக்கு 100-வது போட்டியாகவும் அமைந்தது. இரு அணிகள் இடையிலான 2-வது ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x