Published : 02 Mar 2018 09:06 AM
Last Updated : 02 Mar 2018 09:06 AM

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக தயாராகும் விதமாக மாற்று வேகப்பந்து வீச்சாளர்கள்: இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் பேட்டி

2019-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக மாற்று வேகப்பந்து வீச்சாளர்களைப் தயார் செய்வதில் கவனம் செலுத்தி வருகிறோம் என்று இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண் தெரிவித்தார்.

2019-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. இதற்காக இந்திய அணி தயாராகி வருகிறது. இதுகுறித்து இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருள் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த சிறப்புப் பேட்டி:

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது. இந்திய அணி பந்துவீச்சாளர்கள் தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். நம்மிடம் புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரீத் பும்ரா உலகத் தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் உள்ளனர்.

மேலும் முகமது சிராஜ், ஷர்துல் தாக்குர், ஜெய்தேவ் உனத்கட் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர்.

உலகக் கோப்பை போட்டிக்குத் தயாராவதற்கு முன்பாக மாற்று வேகப்பந்து வீச்சாளர்களையும் தயார் செய்து வருகிறோம். இதுதொடர்பாக தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் விராட் கோலி ஆகியோரிடம் கலந்தாலோசனை நடத்தியுள்ளேன்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ள நேரத்தில் பந்துவீச்சாளர்கள் யாராவது காயம் அடைந்தாலோ அல்லது உடற்தகுதி இல்லாமல் போனாலோ, நமக்கு மாற்று வேகப்பந்து வீச்சாளர்கள் தேவை. எனவே அவர்களைத் தயார்படுத்துவது குறித்து விராட் கோலி, ரவி சாஸ்திரி ஆகியோரிடம் பேசியுள்ளேன்.

தற்போது இலங்கையில் நடைபெறவுள்ள 3 நாடுகள் டி20 கிரிக்கெட் தொடர் பந்துவீச்சாளர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்தப் போட்டியின்போது சிராஜ், ஷர்துல், ஜெய்தேவ் உனத்கட் ஆகிய 3 பேரும் சிறப்பாக பந்துவீசக் காத்திருக்கின்றனர். இதன்மூலம் உலகக் கோப்பை அணியில் இடம்பெற அவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும்.

தென் ஆப்பிரிக்கத் தொடரில் ஷர்துல் தாக்குர் சிறப்பாக பந்துவீசினர். இதேபோல முகமது ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோருக்கும் நல்ல வாய்ப்பு உள்ளது. அவர்கள் விரைவில் தியோதர் கோப்பை போட்டிக்காக விளையாடவுள்ளனர்.

தற்போது அனைத்து பந்துவீச்சாளர்களும், தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வருகின்றனர். ஜெய்தேவ் உனத்கட் டி20 போட்டியில் சிறப்பாக பந்துவீசுகிறார். அவரை ஒருநாள் போட்டிக்கான அணியில் சேர்க்க வேண்டும் என்று நான் கூற முடியாது. நான் அணித் தேர்வாளர் இல்லை. அனைத்து பந்துவீச்சாளர்களுமே தங்கள் மீது நம்பிக்கை வைத்து சிறப்பாக பந்துவீசும்போது அவர்களுக்கான வாய்ப்பு உருவாகும்.

சூழ்நிலைக்குத் தகுந்தவாறு தங்களை மாற்றிக் கொள்ளுதல் என்பது வீரருக்கு வீரர் மாறுபடும். அதுபோல ஜெய்தேவும் தன்னைச் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு மாற்றிக்கொள்ள வேண்டும். அப்படி இருக்கும்போது அவர் ஒருநாள் போட்டிக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கும்.

டி20 கிரிக்கெட் போட்டி ஸ்பெஷலிஸ்டாக கிரிக்கெட் வாழ்வைத் தொடங்கிய ஜஸ்பிரீத் பும்ரா இன்று டெஸ்ட் போட்டியிலும் கலக்கி வருகிறார். அவர் நிச்சயமாக உலகத் தரம் வாய்ந்த பந்துவீச்சாளர். இதில் சந்தேகமே இல்லை. புதிய பந்தாக இருந்தாலும் சரி, பழைய பந்தாக இருந்தாலும் சரி, பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைப்பவர் பும்ரா.

புவனேஸ்வர் குமார் தற்போது 140 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசி வருகிறார். மேலும் அவர் பந்துகளை இரு வழிகளிலும் ஸ்விங் செய்வதில் வல்லவராக இருக்கிறார். அதேபோல முகமது ஷமி, இஷாந்த் சர்மா ஆகியோர் தங்களது பந்துவீச்சு மூலம் பரிமளித்து வருபவர்கள்.

உள்ளூர் மைதானங்களை விட வெளியூர் மைதானங்களில் விளையாடி பழகுவது பந்துவீச்சாளர்களுக்கு சிறந்ததாக இருக்கும். தற்போதைய கேப்டன் விராட் கோலி தலைமையில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. அவரைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. அவரை எப்படிப் புகழ்ந்தாலும் தகும்.

கிரிக்கெட் என்பது குத்துச்சண்டை விளையாட்டைப் போன்றது. குத்துச்சண்டை ரிங்கில் அடிபடும் என்று பயந்தால், நீங்கள் எதையும் சாதிக்க முடியாது. அதுபோலத்தான் கிரிக்கெட்டும். வெற்றி பெறுவோம் என்ற எண்ணம் இருந்தால் போதும் என்று கூறியுள்ளார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x