Published : 11 Mar 2018 08:10 AM
Last Updated : 11 Mar 2018 08:10 AM

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் முன்னிலை பெற்றது தென் ஆப்பிரிக்கா: டீன் எல்கர், ஹசிம் ஆம்லா, டி வில்லியர்ஸ் அரை சதம்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி போராடி முன்னிலை பெற்றது. டீன் எல்கர், ஹசிம் ஆம்லா, டி வில்லியர்ஸ் ஆகியோர் அரை சதம் அடித்தனர்.

போர்ட்எலிசபெத் நகரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட்டில் டாஸ் வென்ற பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 71.3 ஓவர்களில் 243 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக டேவிட் வார்னர் 63, பான்கிராப்ட் 38, டிம் பெய்ன் 36, ஸ்டீவ் ஸ்மித் 25, ஷான் மார்ஷ் 24 ரன்கள் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ரபாடா 5, நிகிடி 3, பிலாண்டர் 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

முதல் விக்கெட்டுக்கு வார்னர் - பான்கிராப்ட் ஜோடி 98 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்த போதிலும் மற்ற வீரர்கள் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தவறினார்கள். இதையடுத்து பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 12 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்தது. மார்க்ரம் 11 ரன்களில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

டீன் எல்கர் 11, ரபாடா 17 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த ஜோடி நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடியது. ரபாடா 40 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 29 ரன் கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் போல்டானார். 2-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 45 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய ஹசிம் ஆம்லா, எல்கருடன் இணைந்து நிதானமாக விளையாடி பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார்.

இந்த ஜோடி ரிவர்ஸ் ஸ்விங் பந்துகளை கவனமாக எதிர்கொண்டது. ஆம்லா 122 பந்துகளில், 6 பவுண்டரிகளுடனும், எல்கர் 164 பந்துகளில், 6 பவுண்டரிகளுடனும் அரை சதம் கடந்தனர். தேநீர் இடைவேளைக்கு பிறகு இந்த ஜோடியை மிட்செல் ஸ்டார்க் பிரித்தார். அபராமாக வீசப்பட்ட ரிவர்ஸ் ஸ்விங்கில் ஆம்லா ஆஃப் ஸ்டெம்பை பறிகொடுத்தார். ஆம்லா 148 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் சேர்த்தார். எல்கருடன் இணைந்து 3-வது விக்கெட்டுக்கு ஆம்லா 88 ரன்கள் சேர்த்தார்.

சிறிது நேரத்தில் எல்கரும் ரிவர்ஸ் ஸ்விங் பந்து வீச்சுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 197 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்த நிலையில் ஜோஸ் ஹசல்வுட் பந்தில் டிம் பெய்னிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் டீன் எல்கர். அப்போது ஸ்கோர் 155 ஆக இருந்தது. இதையடுத்து களமிறங்கிய கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் 9, தியூனிஸ் டி பிரைன் 1 ரன் எடுத்த நிலையில் மிட்செல் மார்ஷின் ரிவர்ஸ் ஸ்விங் பந்து வீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தனர்.

இவர்களை தொடர்ந்து களமிறங்கிய குயிண்டன் டி காக் 9 ரன்களில் நாதன் லயன் பந்தில் போல்டானார். சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிந்த போதும் மறு முனையில் அதிரடியாக விளையாடிய டி வில்லியர்ஸ் 62 பந்துகளில், 10 பவுண்டரிகளுடன் அரை சதம் அடித்தார். 91-வது ஓவரில் தென் ஆப்பிரிக்க அணி 243 ரன்களை கடந்து முன்னிலை பெறத் தொடங்கியது.

நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 95 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்தது. டி வில்லியர்ஸ் 74 ரன்களுடனும், பிலாண்டர் 14 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் கம்மின்ஸ், மார்ஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர். 20 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி கைவசம் 3 விக்கெட்கள் இருக்க இன்று 3-வது நாள் ஆட்டத்தை விளையாடு கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x