Published : 13 Mar 2018 05:38 AM
Last Updated : 13 Mar 2018 05:38 AM

‘கோலியிடம் என்னைத் திருமணம் செய்து கொள்ளக் கேட்டேன், அவர் தன் பேட்டைப் பரிசாகக் கொடுத்தார்’

கடந்த நவம்பரில் மகளிர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20-யில் 56 பந்துகளில் சதம் எடுத்து டி20-யில் முதல் சதமெடுத்த இங்கிலாந்து வீராங்கனை என்று பெயரெடுத்த டேனி வியாட் தான் கோலி பரிசாகக் கொடுத்த பேட்டைப் பயன்படுத்துவதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

2017 நவம்பர் 21-ம் தேதி நடைபெற்ற மகளிர் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் எடுக்க தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 19 ஓவர்களில் 181/6 என்று வெற்றி பெற்றது. அதில் 56 பந்துகளில் 13 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 100 ரன்கள் எடுத்தார் இங்கிலாந்து மகளிர் அணியின் வீராங்கனை டேனி வியாட். இது சாதனையாக அமைந்தது.

இந்நிலையில் இந்த மாத இறுதியில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடுகின்றன.

இது குறித்து தற்போது அவர் கிரிக்கெட் இணையதளம் ஒன்றிற்கு கூறியபோது, டேனி வியாட், “நான் இப்போது விராட் கோலியின் பேட்டை பயன்படுத்துகிறேன்” என்றார்.

2014-ல் இங்கிலாந்து தொடருக்காக இந்திய அணி சென்ற போது டெர்பியில் வியாட்டும், கோலியும் சந்தித்துள்ளனர். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக உலகக்கோப்பை டி20-யில் விராட் கோலி அதிரடி 72 ரன்கள் எடுத்ததில் கவரப்பட்ட டேனி வியாட் அப்போது தன் ட்விட்டரில், “கோலி என்னைத் திருமணம் செய்து கொள்” என்று பதிவிட்டிருந்தார்.

இப்போது அதனை நினைவு கூர்ந்த டேனி வியாட், “ட்வீட் செய்த 10 நிமிடங்களுக்குப் பிறகு போனை எடுத்தால் ஆயிரக்கணக்கில் பேவரைட்கள், மறு ட்வீட்கள், இந்திய செய்திகளை இந்த ட்வீட் நிரப்பியிருந்தது. என் தந்தைக்கு மின்னஞ்சல்கள் வந்தன.

கோலி என்னைச் சந்தித்த போது, ‘ட்விட்டரில் இப்படியெல்லாம் செய்யக் கூடாது, அனைவரும் சீரியசாக எடுத்துக் கொள்வார்கள்’ என்றார் நான் சாரி என்றேன்.

நான் சதமெடுத்த பேட் உடைந்து விட்டது, இப்போது விராட் கொடுத்த பேட்டைப் பயன்படுத்துவேன்” என்றார்.

இந்த மாத இறுதியில் நடைபெறும் முத்தரப்பு டி20 தொடரில் இந்திய கேப்டன் விராட் கோலி மட்டை அவருக்காக ஆடுமா என்பதை இங்கிலாந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x