Published : 24 Mar 2018 09:28 AM
Last Updated : 24 Mar 2018 09:28 AM

அதிவேக 100 விக்.: உலக சாதனைக்கு வெகு அருகில் ஆப்கான் ஸ்பின்னர் ரஷீத் கான்

ஆப்கானிஸ்தான் அணியின் லெக் ஸ்பின்னர் ரஷீத் கான் தன் 19வது வயதிலேயே உலகம் முழுதும் ஒருநாள் போட்டிகள், டி20 லீகுகளில் தனது புதிரான லெக்ஸ்பின்னில் கலக்கி வருகிறார்.

அயர்லாந்தை நேற்று வீழ்த்தி உலகக்கோப்பைக்குத் தகுதி பெற்றது ஆப்கானிஸ்தான் அணி. குறிப்பாக சூப்பர் சிக்ஸுக்கே தகுதி பெறுமா என்ற நிலையில் பிற அணிகளின் தோல்வியினால் சூப்பர் சிக்ஸுக்கு புள்ளிகள் இல்லாமலேயேதகுதி பெற்று மீண்டெழுந்து, அயர்லாந்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி 2019 இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பைக்குத் தகுதி பெற்றது.

இந்நிலையில் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் குறைந்த போட்டிகளில் 100 விக்கெட்டுகள் என்ற சாதனையை நிகழ்த்துவதற்கு மிக அருகில் இருக்கிறார் ரஷீத் கான்.

இவர் தற்போது 43 ஒருநாள் போட்டிகளில் 99 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

அதிவேக ஒருநாள் 100 விக்கெட்டுகள் சாதனையை இப்போது ஆஸ்திரேலியாவின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்  வசம் உள்ளது, ஸ்டார்க் 52 போட்டிகளில் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார்.

2. சக்லைன் முஷ்டாக்- 53 போட்டிகள்

3. ஷேன் பாண்ட்: 54 போட்டிகள்

4. பிரெட் லீ - 55 போட்டிகள்

5. ரஷீத் கான் 99 விக்கெட்டுகள்- 43 போட்டிகள்

வெள்ளியன்று அயர்லாந்துக்கு எதிராக 40 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ரஷீத் கான் 99 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

நாளை (ஞாயிறு) உலகக் கோப்பைத் தகுதிச் சுற்றின் மே.இ.தீவுகளுக்கு எதிரான இறுதிப் போட்டியில் ரஷீத் கான் அதிவேக 100 ஒருநாள் விக்கெட்டுகளுக்கான உலக சாதனையை நிகழ்த்துவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x