Published : 02 Mar 2018 05:25 PM
Last Updated : 02 Mar 2018 05:25 PM

மூத்த வீரர்களை திடுக்கிடச் செய்த ஹர்பஜன் சிங், முகமது யூசுப் கைகலப்பு: கங்குலி வெளியிட்ட தகவல்

இந்தியா, பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர்களையே திடுக்கிடச் செய்யும் அளவுக்கு, ஹர்பஜன் சிங், முகமது யூசுப்பும் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர் என்ற விஷயத்தை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி வெளியிட்டுள்ளார்.

இந்தியாவும், பாகிஸ்தான் மோதும் கிரிக்கெட் போட்டிகள் என்றால் இரு ரசிகர்கள் மனதிலும் உற்சாகம் தொற்றிக் கொண்டு பரபரப்பாகிவிடும். அது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, இருநாட்டு வீரர்களுக்கும்தான். அதிலும் உலகக்கோப்பை போட்டி என்றால், கேட்கவே வேண்டாம், இரு நாட்டு ரசிகர்களும், வீரர்களும் கடும் சீற்றத்தோடும், ஆவேசத்துடன் இருப்பார்கள்.

கடந்த 2003ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடந்தது. இந்தியாவும், பாகிஸ்தான் அணியும் 4-வது முறையாக உலகக்கோப்பையில் மோதன. இரு நாடுகளுக்கு இடையே ஏற்கனவே அரசியல் பதற்றம் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக இரு நாட்டு அணிகளும் கிரிக்கெட் விளையாடமல் இருந்து அப்போதுதான் மோதுவதற்கு ஆயத்தமாகின. இதனால், உலக கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையே இந்த போட்டியின் மீதுதான் இருந்தது.

இந்த போட்டியின் இடையே இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்குக்கும், பாகிஸ்தான் வீரர் யூசுப் யுகானா(முகமது யூசுப்) ஆகியோருக்கு இடையே நடந்த கைகலப்பு குறித்து கங்குலி தனது “ ஏ செஞ்சுரி இஸ் நாட் இனஃப்” என்ற சுயசரிதை நூலில் விவரித்துள்ளார்.

சவுரவ் கங்குலி கூறியதாவது:

பாகிஸ்தான் அணியுடன் நாங்கள்(இந்திய அணி) எப்போது விளையாடினாலும், அதில் ஏதாவது சர்ச்சை இருக்கும். அது பாகிஸ்தானில் விளையாடினாலும் , இந்தியாவில் விளையாடினாலும், அல்லது, நடுநிலையான நாடுகளாகன ஷார்ஜா, டொராண்டோ, ஆஸ்திரேலியா, இலங்கை , தென் ஆப்பிரிக்கா என எங்கு நடந்தாலும் ஏதாவது சர்ச்சை வரும்.

ஒவ்வொரு முறையும் பாகிஸ்தான் அணியுடன் விளையாடும் போது, ஏதாவது வித்தியாசமான நிகழ்வுகள் நடப்பதை பார்க்கலாம். ஆனால், நான் கேப்டனாக இருந்த 5 ஆண்டுகளில் 2003-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலகக் கோப்பையில், செஞ்சூரியனில் நடந்த ஆட்டத்தை மறக்க முடியாது. இன்னும் என்னுடைய நினைவில் இருந்து கொண்டே இருக்கிறது.

இந்திய வீரர் ஹர்பஜன் சிங்க்கும், பாகிஸ்தான் வீரர் யூசுப் யுகானாவுக்கும் இடையே நண்பகலில் சாப்பிடும் போது, டைனிங் ஹாலில் திடீரென கைகலப்பு ஏற்பட்டுவிட்டது. இருவருக்கும் இடையிலான சண்டைக்கு என்ன காரணம் என எனக்கு தெரியாது. ஆனால், இருவருக்கும் இடையிலான கைகலப்பு மட்டும் எல்லை மீறி சென்றுவிட்டது. இரு அணியில் உள்ள மூத்த வீரர்கள் தலையிட்டு, இருவரையும் பிரித்து தனியாக அழைத்துவந்தோம்.

இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் என்றாலே பதற்றம் அதிகமாகத்தான் இருக்கும். ஏற்கனவே விளையாடும் சூழலும், இரு நாடுகளுக்குஇடையிலான உறவும் மிகப் பதற்றமாக இருக்கும்போது, இருவரும் சண்டையிட்டது தெரிந்தால் பிரச்சினையாகிவிடும் என யாரிடமும் கூறவில்லை. இருநாட்டு வீரர்களின் ஓய்வு அறையும் பக்கத்தில் இருந்தும், பதற்றத்தை தணிக்க எந்தவிதத்திலும் உதவவில்லை. ஹர்பஜன் சிங் சிறந்த வீரர், அன்பாக பழகக்கூடியவர். ஆனால், திடீரென கோபப்படக்கூடியவர், கோபம்தான் அவருக்கு அடிக்கடி வந்துவிடும்.

இவ்வாறு கங்குலி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x