

காதலியைச் சுட்டுக் கொன்ற வழக்கில் தென் ஆப்பிரிக்க மாற்றுத் திறனாளி ஒலிம்பிக் வீரர் ஆஸ்கார் பிஸ்டோரியஸ் சிறை தண்டனை பெற வாய்ப்பிருக்கிறது. இது பற்றிய தீர்ப்பு வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது.
முன்கூட்டியே திட்டமிட்டு பிஸ்டோரியஸ் தனது காதலியைக் கொல்லவில்லை என்றும் அதற்கான ஆதாரம் இல்லை என்றும் நேற்று தனது தீர்ப்பில் கூறிய நீதிபதி, தெரியாமல் நடந்த கொலைக்கான தண்டனை பற்றி தனது தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளார்.
இந்த அடிப்படையில் தண்டனை வழங்குவது நீதிபதியின் அதிகாரத்தில் உள்ளது. 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனையை அவர் அளிக்க முடியும்.
பிஸ்டோரியஸ் மீது மேலும் 2 வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. அதாவது பொது இடத்தில் துப்பாக்கி சூடு நடத்தியது மற்றும் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்தது ஆகிய 2 வழக்குகளும் பிஸ்டோரியஸ் மீது தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்குகளிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார்.
இன்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியதாவது: மனநிலை ஸ்திரமாக உள்ள ஒரு நபர் தனது வீட்டின் கழிவறையில் அன்னியர் ஒருவர் இருக்கிறார் என்று சந்தேகமடையும் போது, உள்ளேயிருப்பது யாராக இருந்தாலும், துப்பாக்கியால் சுட்டிருக்க மாட்டார். மாறாக அத்தகைய சூழ்நிலையைத் தவிர்க்கவே விரும்பியிருப்பார். ஆனால் இந்த விஷயத்தில் குற்றம்சாட்டப்பட்டவர் சோடை போயுள்ளார்” என்று கூறினார்.
கொலை வழக்கிலிருந்து பிஸ்டோரியஸ் விடுவிக்கப்பட்டதையடுத்து இன்று நீதிமன்றம் வந்திருந்த கொலை செய்யப்பட்ட ரீவா ஸ்டீன்கேம்பின் நண்பர்கள் பெருமூச்செறிந்தனர், சிலர் அழுது விட்டனர். ஸ்டீன்கேம்பின் தந்தை வெறுப்பில் தலையைக் கோதிக் கொண்டு உட்கார்ந்திருந்தார். ஸ்டீன்கேம்பின் தாயார் அழுகையை அடக்க உதட்டைக் கடித்துக் கொண்டிருந்ததாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.