Published : 15 Mar 2018 07:59 AM
Last Updated : 15 Mar 2018 07:59 AM

ரோஹித் சர்மா, வாஷிங்டன் சுந்தர் சிறப்பு: வ.தேசத்தை வீழ்த்தி இறுதியில் இந்தியா

 

நிதாஹஸ் டி20 முத்தரப்புத் தொடரில் நேற்று கொழும்புவில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறியது.

ரோஹித் (89), ரெய்னா (47) அதிரடியில் இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய வங்கதேச அணியில் முஷ்பிகுர் ரஹிம் (72) கடைசி வரை போராடியும் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்களையே எடுக்க முடிந்தது. இதன் மூலம் இந்திய அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.

மிகவும் மந்தமான ஒரு பிட்சில் ரோஹித் சர்மாவை வங்கதேசப் பந்து வீச்சு ஃபார்முக்குக் கொண்டு வந்தது. அவர் 5 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 61 பந்துகளில் 89 ரன்களை புரட்டி எடுக்க ரெய்னா 30 பந்துகளில் அனாயாச அதிரடியில் 5 பவுண்டரிகள் 2 சிக்சருடன் 47 ரன்களை எடுத்து இருவரும் 2வது விக்கெட்டுக்காக 102 ரன்கள் கூட்டணி அமைத்தனர். முன்னதாக ஷிகர் தவன் 27 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 35 ரன்கள் சேர்த்து முதல் விக்கெட்டுக்காக 59 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்தனர். ரோஹித் சர்மாவுக்கும் ஷிகர் தவனுக்கும் கேட்சைப் பிடித்திருந்தால் ஒருவேளை வங்கதேசம் வெற்றிக்காகக் கூட முயற்சித்திருக்கலாம்.

வாஷிங்டன் சுந்தர் பவர் பிளே முடிவதற்குள்ளாகவே வங்கதேசத்தின் லிட்டன் தாஸ் (7), சவுமியா சர்க்கார் (1), தமிம் இக்பால் (27) ஆகியோரைக் காலி செய்தார். இதனால் 5.4 ஓவர்களில் 40 ரன்கள் என்ற நல்ல தொடக்கம் கண்டாலும் 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது வங்கதேசம்.

சாஹல் மீண்டும் ஒரு அருமையான ஸ்பெல்லை வீசி 4 ஓவர்களில் 21 ரன்களுக்கு மஹ்முதுல்லாவை வீழ்த்தினார். தாக்கூர், விஜய் சங்கர், மொகமது சிராஜ் ஆகியோரின் கட்டர்கள், ஸ்லோயர் பந்துகள், விரல் மூலம் வீசும் ஏமாற்று பந்துகள் வங்கதேச பேட்ஸ்மென்களுக்குக் டூ மச்.

இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெற ஞாயிறன்று நடைபெறும் போட்டியில் யார் இந்தியாவுடன் மோதுவது என்பது வங்கதேசம், இலங்கை அணிகளுக்கு இடையிலான கிட்டத்தட்ட அரையிறுதியாக மாறிவிட்ட அந்தப் போட்டியில் முடிவாகும்.

ரோஹித் இன்னிங்சை கட்டமைத்த விதம்:

முதலில் 23 பந்துகளில் 26 ரன்கள் என்று இருந்தார். 42வது பந்தில் தனது 13வது டி20 அரைசதத்தை எடுத்தார், அதன் பிறகு அடிதடி காட்டத் தொடங்கினார். 14 வது ஓவர் தொடங்கி 19வது ஓவர் வரை இந்திய அணி ஓவருக்கு 14 ரன்கள் என்ற விகிதத்தில் அடித்து நொறுக்கியது. இதில் ரோஹித் சர்மா 15 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார்.

குறிப்பாக வங்கதேசத்தின் அபு ஹைதரை ரோஹித் சர்மாவுக்கு ரொம்பவும் பிடித்துப் போய் விட்டது. ஷார்ட் பிட்ச் பந்தை வீச ஒரு சுத்து சுத்தினார் மிட் விக்கெட், மிட் ஆன் இடையே சிக்ஸ். அடுத்த பந்தை யார்க்கராக வீச ஏறக்குறைய பேட்டில் பட்டு பவுல்டு ஆகியிருப்பார். தப்பினார். அடுத்து ரெய்னா மிட்விக்கெட்டில் ஒரு சிக்ஸை விளாசினார். கடைசி பந்து புல்டாஸாக ரோஹித் சிக்ஸ் விளாசினார், 21 ரன்கள்.

முன்னதாக முஸ்தபிசுர் ரஹ்மான் பந்தை ஸ்லாக் ஸ்வீப் பாணியில் அடித்த சிக்ஸ் காலரியில் ரசிகரிடம் கேட்ச் ஆனது, ஆனால் இது ஒரு அற்புதமான சிக்ஸ் ஆக அமைந்தது. மெஹதி ஹசன் மிராஸ் பந்திலும் ஆரம்பத்தில் அடித்த ஸ்லாக் ஸ்வீப் சிக்ஸும் அனாயசமானது. ஆனாலும் ரோஹித் சர்மாவுக்கு ஆரம்பத்திலேயே கேட்சை விட்டனர். ஷிகர் தவனுக்கும் 23 ரன்களில் இருந்த போது கேட்சை விட்டனர். கடைசியில் ஷிகர் தவணின் மிடில் ஸ்டம்ப் ரூபல் ஹுசைன் பந்தில் காலியானது. ரோஹித் சர்மா 61 பந்துகளில் 89 ரன்களுக்கு கடைசி பந்தில் ரன் அவுட் ஆனார். இந்தியா 176/3, ரூபல் ஹுசைன் 27 ரன்களுக்கு 2 விக்கெட்.

ரெய்னாவுக்கு இன்னும் எத்தனை சிறுவர்கள்தான் ஷார்ட் பிட்ச் பந்து சோதனை கொடுப்பார்களோ தெரியவில்லை அவரும் அந்தப் பந்துகளுக்கு எதிராக தன் ஆட்டத்தை மேம்படுத்திக் கொள்வது போல் தெரியவில்லை.

வாஷிங்டன் சுந்தர் சிறப்பான பந்துவீச்சு

அன்று இலங்கைக்கு எதிராக ஆடிய நம்பிக்கைத் தொடக்கம் இந்தப் போட்டியில் வங்கதேசத்துக்குக் கிடைக்கவில்லை. 2வது ஓவரில் சுந்தர் பந்தில் லிட்டன் தாஸ் ஸ்டம்ப்டு ஆனார். பேட்ஸ்மென் இறங்கி வருவதைப் பார்த்து ஷார்ட்டாகவும் தள்ளியும் வீசினார் சுந்தர். சவுமியா சர்க்காருக்கு தன் மேலேயே அதீத நம்பிக்கை, வாஷிங்டன் சுந்தர் வீசிய நேர் பந்தை அசிங்கமாக சுத்தி பவுல்டு ஆனார்.

தமிம் இக்பால் 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 27 ரன்கள் எடுத்த நிலையில் ஆஃப் ஸ்டம்பில் நகர்ந்து பைல் லெக்கில் இழுக்க நினைத்தார் பந்து சிக்கவில்லை பவுல்டு ஆனார். வ.தேசம் 48/3, சுந்தர் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தார். சாஹலை புரிந்து கொள்ளாமல் மஹ்முதுல்லா சிக்ஸ் அடிக்க முயன்று தோற்றார். சபீர் ரஹ்மான் 23 பந்துகளில் 2 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 27 ரன்கள் எடுத்து முஷ்பிகுருடன் இணைந்து 5வது விக்கெட்டுக்காக 8 ஓவர்களில் 65 ரன்களைச் சேர்த்தாலும் 17வது ஓவரில் ஆட்டமிழக்க ஸ்கோர் 126/5 என்று வெற்றிக்குத் தேவைப்படும் விகிதம் எகிறியது. இந்திய வேகப்பந்து வீச்சாளார்களின் பல்வேறு விதமான லெந்த், பந்துகளுக்கு இருவருக்கும் டைமிங் கிடைக்கவில்லை, முஷ்பிகுர் ரஹிம், சிராஜின் ஒரே ஓவரில் 16 ரன்கள் எடுத்தாலும் டைமிங் அவருக்கும் பெரும்பாடாக அமைந்தது. இதனால் 14வது ஓவர் முதல் 16வது ஓவர் வரை ஒரு பவுண்டரி கூட வரவில்லை, பின் எப்படி ஜெயிக்க முடியும்? 55 பந்துகளில் முஷ்பிகுர் 72 ரன்கள் எடுத்தது அவருக்கு திருப்தி அளிக்கலாம் ஆனால் அணிக்கு?

சுந்தர் 22 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள், சிராஜ் இந்த டைமிங் கிடைக்காத பேட்டிங்கிலும் கூட 4 ஒவர்களில் 50 ரன்கள் கொடுத்தார். தாக்கூர், சஹால் தலா 1 விக்கெட். ஆட்ட நாயகன் விருது உண்மையில் வாஷிங்டன் சுந்தருக்குத்தான் கொடுக்க வேண்டும், ஆனால் ரோஹித் சர்மாவுக்குக் கொடுக்கப்பட்டது.

இது போன்ற ஒரு அர்த்தமற்ற தொடர், பிறகு ஐபிஎல், பிறகு ஆப்கானுடன் டெஸ்ட் ஆகியவை முடிந்து இங்கிலாந்துக்கு இந்திய அணி செல்லும் போது சப்பையாகி விடாமல் இருந்தால் சரி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x