

பவுலிங் செய்யாமல் த்ரோ செய்யும் பந்து வீச்சாளர்கள் மீது ஐசிசி-யின் நடவடிக்கைகள் இறுகுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் சுனில் நரைன் மீது தற்போது நடுவர்கள் த்ரோ புகார் எழுப்பியுள்ளனர்.
நேற்று ஐதராபாதில் நடைபெற்ற டால்பின்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பவுலர் சுனில் நரைன் பந்து வீச்சு மீது கள நடுவர்களான அனில் சவுதாரி மற்றும் சேட்டிஹோடி சம்சுதின் மற்றும் 3வது நடுவர் குமார் தர்மசேனா ஆகியோர் புகார் எழுப்பினர்.
சுனில் நரைன் வீசும் வேகப்பந்து த்ரோ போல் தெரிகிறது என்று இவர்களது புகார் ஆகும்.
சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் சட்டவிரோத பந்துவீச்சுக் கொள்கையின் படி முதலில் பிசிசிஐ சட்டவிரோத பந்து வீச்சு மதிப்பீட்டுக் குழுவின் பார்வைக்குக் கொண்டு செல்லப்படும். எச்சரிக்கைப் பட்டியலில் சுனில் நரைன் பெயர் சேர்க்கப்படும், அவர் தொடர்ந்து விளையாடலாம், பந்து வீசலாம்.
ஆனால் மீண்டும் ஒருமுறை இவர் மீது புகார் எழுப்பப்பட்டால் சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் அவர் பந்து வீசத் தடை விதிக்கப்படும் அவர் பேட்ஸ்மென் என்ற நிலையில் விளையாடலாம்.
நடப்பு சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டிகளில் நரைன் 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றி முதலிடம் வகிக்கிறார்.
கடந்த 3 ஐபில் தொடர்களில் 2 முறை கொல்கத்தா சாம்பியன் பட்டம் வெல்ல சுனில் நரைன் பங்களிப்பு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.