Last Updated : 20 May, 2019 04:01 PM

 

Published : 20 May 2019 04:01 PM
Last Updated : 20 May 2019 04:01 PM

2015-உ.கோப்பையில் ஆஸி.யை மிரட்டிய வஹாப் ரியாஸ் உட்பட 2 வீரர்கள் பாகிஸ்தான் அணியில் சேர்ப்பு

உலகக் கோப்பைப் போட்டியில் பந்துவீச்சை பலப்படுத்தும் நோக்கில், புதிதாக 2 வீரர்களை சேர்த்து பட்டியலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

2015 உலகக்கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தனிப்பட்ட வீச்சாளராக இடது கை வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் மிரட்டினார். வாட்சனை ஷார்ட் பிட்ச் பவுலிங்கில் திணறடித்து தனிநபராக பாகிஸ்தான் வெற்றிக்காகப் போராடினார், ஆனால் வெற்றி பெற முடியவில்லை. அப்போது வஹாப் ரியாசின் அந்த ஒரு ஸ்பெல் மட்டும் சிறப்பாகப் பேசப்பட்டது, இந்நிலையில் அவர் பாகிஸ்தான் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதன்படி முன்னதாக அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட அணி வீரர்கள் பட்டியலில் இடம் பெறாமல் இருந்த வேகப்பந்துவீச்சாளர்கள் முகமது அமீர், வஹாப் ரியாஸ் ஆகியோர் இப்போதைய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சின்னம்மை நோயினால் உடல்நலன் இல்லாமல் இருந்த முகமது அமீர் உடல்நலன் தேறிவிட்டதால், அணி வீரர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

அதேபோல, முந்தைய பட்டியலில் இடம் பெற்றிருந்த ஆல்ரவுண்டர் பாஹிம் அஷ்ரப், இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஜுனைத் கான் ஆகியோர் நீக்கப்பட்டு, இந்த இரு வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும், இளம் பேட்ஸ்மேன் அபித் அலியை நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக மற்றொரு பேட்ஸ்மேன் ஆசிப் அலியை பாகிஸ்தான் வாரியம் சேர்த்துள்ளது. முதல்கட்ட அணி அறிவிப்பில் ஆசிப் அலி இல்லாத நிலையில் இப்போது சேர்க்கப்பட்டுள்ளார்.

வரும் 23-ம் தேதிவரை ஐசிசியின் அனுமதி பெறாமல் வீரர்களை அணிகள் மாற்றிக்கொள்ளலாம் என்பதால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இப்போது மாற்றி இருக்கிறது.

அணியின் கட்டமைப்பு

பக்கர் ஜமான், இமாம் உல் ஹக் ஆகிய இரு தொடக்க ஆட்டக்கார்கள், நடுவரிசையில் ஆசிப் அலி, முகமது ஹபிஸ், பாபர் ஆசம், சர்பிராஸ் அகமது, ஷோயப் மாலிக், அமிர் சோஹைல் ஆகியோர் உள்ளனர்.  சுழற்பந்துவீச்சில் இமாத் வாசிம், சதாப் கான் உள்ளனர். வேகப்பந்துவீச்சில் முகமது அமீர், வஹாப் ரியாஸ், ஷாகீன் அப்ரிடி முகமது ஹஸ்னன், ஹசன் அலி ஆகியோர் உள்ளனர்.

பந்துவீச்சு பலவீனம்

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக்குழுத் தலைவர் இன்சமாம் உல் ஹக் கூறுகையில், " இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் எங்கள் அணியின் பந்துவீச்சு திறமைக் குறைவாக இருந்தது. இதனால், உலகக் கோப்பைப் போட்டியில் வீரர்களை மாற்ற  வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இப்போது இரு அனுபவ வேகப்பந்துவீச்சாளர்கள் வந்துள்ளதன் மூலம், உலகக் கோப்பைத் தொடர் முழுவதும் மிகப்பெரிய பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சிறப்பாக விளையாட முடியும் எனத் தெரிந்துகொண்டோம்.

தற்போது வஹாப் கிளப் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார், அவரின் அனுபவத்தை பயன்படுத்திக்கொள்வோம். வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சிப்போட்டியில் வஹாப் விளையாடுவார்.

அபித் அலியை நீக்கியது கடினமான முடிவுதான் என்றாலும், தொடக்க ஆட்டக்காரர்களுக்கு இருவர் ஏற்கனவே இருக்கிறார்கள். ஆனால் ஆஷிப் அலியின் பேட்டிங்கோடு ஒப்பிடும்போது அபித் அலியின் அனுபவம் குறைந்தவர் " எனத் தெரிவத்தார்.

பாகிஸ்தான் அணி விவரம்:

சர்பிராஸ் அகமது(கேப்டன்), பக்கர் ஜமான், இமாம் உல் ஹக், பாபர் ஆசம், சோயிப் மாலிக், ஆஷிப் அலி, முகமது ஹபீஸ், ஹரிஸ் சோஹைல், ஷாதப் கான், இமாத் வாசிம், ஹசன் அலி, பாஹீம் அஷ்ரப், ஷாஹீன் ஷா அப்ரிடி, வஹாப் ரியாஸ், முகமது அமீர், முகமது ஹஸ்னைன்,

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x