Published : 06 May 2019 09:18 AM
Last Updated : 06 May 2019 09:18 AM

ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய வரலாறு: ஷேய் ஹோப், கேம்பெல் திகைப்பூட்டும் சாதனை: அயர்லாந்தை நொறுக்கிய மே.இ.தீவுகள்

அயர்லாந்தில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் (வங்கதேசம், மே.இ.தீவுகள், அயர்லாந்து) நேற்று டப்லின் மைதானத்தில் மே.இ.தீவுகளின் தொடக்க வீரர்கல் கேம்பெல் (179), ஷேய் ஹோப் (170) ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைக்க மே.இ.தீவுகள் 196 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற அயர்லாந்து அணி அடித்து நொறுக்கப்பட்டது.

 

இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்காக 365 ரன்களைச் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட் வரலாறு படைத்தனர். தொடக்க விக்கெட்டுக்காக இதுவரை அதிகபட்சமாகச் சேர்த்த சந்தர்ப்பங்களில் இதுவே அதிகம், முதலிடமாகும்.  மொத்தமாக கிறிஸ் கெய்ல், மர்லன் சாமுவேல்ஸ் 372 ரன்கள் கூட்டணி அமைத்து உலகசாதனையை வைத்துள்ளனர், கெய்ல்-சாமுவேல்ஸ் கூட்டணி 2015 உலகக்கோப்பையில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக 2வது விக்கெட்டுக்காக இந்தச் சாதனையை செய்தனர். . அதே போல் 50 ஓவர்கள் ஆடியிருந்தால் தொடக்க வீரர்கள் 50 ஒவர்கள் வரை ஆடி ஆட்டமிழக்காமல் இருக்கும் சாதனையையும் நிகழ்த்தியிருப்பார்கள், ஆனால் 17 பந்துகள் இருக்கும் போது அதிரடி கூட்டணி பிரிந்தது.

 

கேம்பல்-ஹோப் ஜோடி இதற்கு முன்பாக ஃபகர் ஜமான், இமாம் உல் ஹக் 2018-ல் ஜிம்பாப்வேவுக்கு எதிராக புலவாயோவில் சேர்த்த 304 ரன்கள் தொடக்கக் கூட்டணி சாதனையை முறியடித்து புதிய உலகசாதனை படைத்துள்ளனர்.

 

மேலும் பிரெண்டன் மெக்கல்லம், ஜேம்ஸ் மார்ஷலுக்குப் பிறகு ஒருநாள் இன்னிங்ஸ் ஒன்றில் இரு தொடக்க வீரர்களும் 150க்கும் மேல் எடுக்கும் மைல்கல்லையும் கேம்பல், ஹோப் ஜோடி சாதித்தது.

 

அயர்லாந்து கேப்டன் போர்ட்டர்பீல்ட் செய்த மிகப்பெரிய தவறு, டாஸ் வென்று ‘வாங்க வாங்க’ என்று மே.இ.தீவுகளை முதலில் பேட் செய்ய அழைத்ததுதான். கடைசியில் தன் அணியையே களத்துக்கு அழைத்துச் செல்லும் போது (அடி) வாங்க... வாங்க என்று ஆகும் என்று அவர் நினைத்திருக்க மாட்டார்.

 

முதலில் பேட் செய்த மே.இ.தீவுகள் 50 ஓவர்களில் 381 ரன்களுக்கு வெறும் 3 விக்கெட்டுகளையே இழக்க அயர்லாந்து அணியோ 185 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வி அடைந்தது.

 

ஒரு கட்டத்தில் அயர்லாந்தும், மே.இ.தீவுகளும் உலகக்கோப்பைத் தகுதிச் சுற்றில் ஆடினர், இப்போது மே.இ.தீவுகள் ஹோல்டர் தலைமையில் எங்கோ உள்ளது, உலகக்கோப்பையையே வெல்லும் என்ற நிலையில் உள்ளது.

 

கேம்பலும், ஷேய் ஹோப்பும் மொத்தமாக 37 பவுண்டரிகள் 8 சிக்சர்களை விளாசினர்.  அயர்லாந்து அணியின் பந்து வீச்சு மைதானம் முழுதும் சிதற அடிக்கப் பட்டது, ஆனாலும் காட்டடி என்று கூற முடியாது, முறையான கிரிக்கெட் ஷாட்களே பெரும்பாலும் ஆடப்பட்டன. தொடக்கத்தில் சில பந்துகள் எட்ஜ்களைக் கடந்து சென்றன 11 ஓவர்களில் 42 ரன்கள்தான் வந்தது. ஆனால் மெக்கர்த்தி என்பவர் வீச வந்தார் அந்த ஓவரில் 18 ரன்கள் வந்தது, இதுதான் அடியின் பிள்ளையார் சுழி ஓவராக அமைந்தது.

 

முதல் 10 ஓவர்களில் 37 ரன்கள் ஆனால் அடுத்தடுத்த பத்து பத்து ஓவர்களில் 68, 80, 74 என்று வெளுத்துக் கட்டினர். ஆனால் கடைசியில் கொலைவெறி தாக்குதல் ஆடியதில் சுமார் 7.2 ஓவர்களில் 106 ரன்களை இருவரும் விளாசித்தள்ளினர். ஒரு காலை ஒதுக்கிக் கொண்டு தங்கள் இஷ்டத்துக்கு பவுலர்களை எங்கு அடிக்கட்டும் என்று கேட்டுக் கேட்டு அடித்தனர்.

 

கேம்பல் 15 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 137 பந்தில் 179 அடிக்க, ஷேய்  ஹோப் 152 பந்துகளில் 22 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 170 ரன்கள் சேர்த்தனர், இருவரும் சேர்ந்து 365 சாதனை தொடக்க விக்கெட் ரன்களாகச் சேர்த்தனர். அயர்லாந்தில் பால் ஸ்டர்லிங் 2 ஓவர்கள் வீசி 6 ரன்கள் கொடுத்ததுதான் ஆகச்சிறந்த சிக்கன வீச்சு. மற்ற வீச்சாளர்கள் அனைவரும் ஓவருக்கு 7 ரன்களுக்கு மேல் சென்றனர்.

 

அயர்லாந்து அணி இந்த அதிரடிக்குப் பிறகே ஒன்றும் செய்யமுடியாமல் 21/3 என்று சரிந்தது பிறகு கெவின் ஓ பிரையன் 68 ரன்களையும் கேரிவில்சன் 31 ரன்களையும் சேர்க்க இருவரும் சேர்ந்து 131 ரன்கள் கூட்டணி அமைக்க அயர்லாந்து 185 ரன்களை எட்டி படுதோல்வி அடைந்தது. மே.இ.தீவுகளுக்கு 3 புள்ளிகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x