

2019 உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் தேர்வு செய்யப்படாத வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் தனது ஏமாற்றத்தை கடுமையாக வெளிப்படுத்தியுள்ளார்.
2017-ல் உலகின் டாப்பில் இருந்த ஒருநாள் பவுலர் ஹேசில்வுட் 2015 உலகக்கோப்பையில் அணியில் இருந்தாலும் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார். ஆகவே இருமுறை தான் ஒதுக்கப்பட்டது, ‘கசப்பான ஏமாற்றம்’ என்று அவர் வேதனை தெரிவித்தார். முதலில் ஜை ரிச்சர்ட்ஸனை தேர்வு செய்த ஆஸ்திரேலியா அவர் காயமடைந்ததையடுத்து கேன் ரிச்சர்ட்சனை அணிக்கு அழைத்தது, ஆனால் அழைப்பை எதிர்பார்த்துக் காத்திருந்த ஜோஷ் ஹேசில்வுட்டுக்கு ஏமாற்றமே காத்திருந்தது.
ஏமாற்றத்துக்குக் காரணம், உடல் தகுதி பெற்று வலையில் ஆஸி. வீரர்களுக்கு அவர் வீசிய போது பிஞ்ச் முதல் டாப் ஆஸி வீரர்களை தன் பவுலிங்கினால் கடுமையாகச் சோதித்தார். ஆகவே உலகக்கோப்பையில் தான் சிறப்பாக வீசி பங்களிக்க முடியும் என்று நம்பிக்கையுடன் இருந்தார் ஹேசில்வுட்.
“நிச்சயமாக கசப்பான ஏமாற்றமே. உலகக்கோப்பை 4 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் வருகிறது. கடந்தமுறை உள்நாட்டில் அதன் சுவாரசியங்களை அனுபவித்தேன். இப்போது அணியில் இல்லை, உலகக்கோப்பை தொடங்கியவுடன் என்னை நிச்சயம் நான் இல்லாதது பாதிக்கும். இன்னொரு முறை டிவியில்தான் பார்க்க வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள உணர்வு எனக்கு மேலிடும்.
மிகவும் கடினமானது, காரணம் இது சாதாரண ஒருநாள் தொடர் அல்ல, உலகக்கோப்பை.. 4 மாதங்களாக கிரிக்கெட் ஆடவில்லை என்பதே எனக்கு எதிராகத் திரும்பியது. எனக்கு தேர்வுக்குழுவினரின் பிரச்சினையும் புரிகிறது.
யாராவது பவுலர் உலகக்கோப்பை தொடர் நடுவில் காயமடைந்தால் எனக்கான வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறேன்” என்றார் ஜோஷ் ஹேசில்வுட்