பயிற்சியில் மட்டுமே தீவிர கவனம்: கோபிசந்த்

பயிற்சியில் மட்டுமே தீவிர கவனம்: கோபிசந்த்
Updated on
1 min read

சாய்னா பயிற்சியாளரை மாற்றியது தொடர்பாக எவ்வித பதிலும் அளிக்காமல் தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறார் தேசிய பாட்மிண்டன் பயிற்சியாளர் கோபிசந்த்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளவர்களுக்கு பயிற்சியளிப்பதில் மட்டுமே தீவிர கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா நெவால், கோபிசந்தின் பயிற்சியின் கீழ் 20-க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றவர் ஆவார்.

சமீபத்தில் நடைபெற்ற உலக பாட்மிண்டன் போட்டியில் காலிறுதியோடு வெளியேறிய சாய்னா, திடீரென கோபிசந்தை மாற்றிவிட்டு, முன்னாள் தேசிய தலைமைப் பயிற்சியாளரான விமல்குமாரிடம் பயிற்சி பெற்று வருகிறார். இந்த நிலையில் கோபிசந்த் மேலும் கூறியதாவது:

இது சிந்துவுக்கான தருணம். கடந்த வாரம் நடைபெற்ற உலக பாட்மிண்டனில் அவர் அற்புதமாக ஆடினார். அதனால் மற்ற விஷயங்களை விட்டுவிட்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் சிந்துவை வெற்றி பெறவைப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறேன்.

ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இன்னும் 2 வாரங்கள் மட்டுமே உள்ளன. எனவே அனைத்து பாட்மிண்டன் வீரர்களையும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் சிறப்பாக விளையாட வைப்பதற்கு தயார்படுத்த வேண்டியுள்ளது என்றார்.

சமீபத்தில் முடிந்த உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் குறித்து பேசிய அவர், “போட்டி சவாலாக இருந்தது. மற்ற நாட்டினர் நம்மைவிட கொஞ்சம் சிறப்பாக ஆடினர். இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம். அப்படி செயல்பட்டிருந்தால் நிறைய பதக்கங்களை வென்றிருக்கலாம்.

எனினும் ஒரு பதக்கம் கிடைத்ததில் மகிழ்ச்சியே” என்றார். ஆசிய விளையாட்டுப் போட்டி குறித்துப் பேசிய அவர், “கடும் சவால்கள் இருக்கும். எனினும் இந்தியா சிறப்பாக ஆடி பதக்கம் வெல்லும் என நம்புகிறேன்” என்றார்.-பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in