421 ரன்கள் குவித்து 91 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸி.யை வீழ்த்தி  உ.கோப்பை அணிகளுக்கு மே.இ.தீவுகள் எச்சரிக்கை

421 ரன்கள் குவித்து 91 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸி.யை வீழ்த்தி  உ.கோப்பை அணிகளுக்கு மே.இ.தீவுகள் எச்சரிக்கை
Updated on
2 min read

பிரிஸ்டலில் நேற்று நடைபெற்ற உலகக்கோப்பைக்கு முந்தைய பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 91 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மே.இ.தீவுகள் அணி மற்ற அணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதுவும் 421 ரன்கள் விளாசிய மே.இ.தீவுகள் அதில் 41 பவுண்டரிகள் 18 சிக்சர்கள் என்று பவுண்டரி சிக்சர்களில் 300 ரன்களைக் குவித்திருப்பது பெரிய அச்சுறுத்தலே. அதே போல் இலக்கை விரட்டும் போது 10 ஓவர்களில் 33/3 என்று இருந்த நியூஸிலாந்து, கேப்டன் வில்லியம்சன் (85), விக்கெட் கீப்பர் பிளன்டெல் (106) ஆகியோரது அதிரடியிலும் பின்களவரிசை வீரர்களின் அதிரடிப் பங்களிப்புடனும் 47.2 ஒவர்களில் 330 ரன்கள் வரை வந்து  ஆல் அவுட் ஆகியுள்ளது.

அதாவது இந்த உலகக்கோப்பையில் 325-330 ரன்கள் கூட பாதுகாப்பானதல்ல என்பதை இது உணர்த்துகிறது, ஏனெனில் 10 ஓவர்களில் 33/3 பிறகு 330 என்றால் எந்த ஒரு இலக்கும் பாதுகாப்பானதல்ல என்பதை இந்தப் போட்டி உணர்த்துகிறது.

ஷெய் ஹோப் தன் சமீபத்திய பார்மை நேற்றும் நிரூபித்து 86 பந்துகளில் சதம் அடித்தார். இதில் 9 பவுண்டரி 4 சிக்சர்கள் அடங்கும்.  ஆந்த்ரே ரஸல் அச்சுறுத்தும் பவர் ஹிட்டர் என்ற அடையாளத்தை தக்கவைத்து 25 பந்துகளில் 54 ரன்களை விளாசினார்.  மே31ம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டிக்கான எச்சரிக்கை மணியை மே.இ.தீவுகள் ஒலித்துள்ளது.

நியூஸிலாந்தின் அதிவேக பவுலர் மேட் ஹென்றியை கிறிஸ் கெய்ல் 4 பந்துகளில் 2 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் விளாசி அதிரடி அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். ஆனால் 36 ரன்களை பெரிய ஸ்கோராக மாற்றாத கெய்ல், போல்ட் பந்தில் வெளியேறினார்.

ஷேய் ஹோப், எவின் லூயிஸ் இணைந்து 84 ரன்களை விரைவு கதியில் சேர்த்து பெரிய இலக்குக்கு அடிகோலினர். ஹோல்டர் (47), ரஸல் இணைந்து 39 பந்துகளில் 82 ரன்களை பின்னி எடுத்தனர்.  மே.இ.தீவுகள் 421 ரன்கள் விளாசித்தள்ளியது. போல்ட் மட்டுமே இந்த அதிரடியிலும் நின்றார் 50 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இது போன்ற இலக்குகளையெல்லாம் விரட்டுவது மிகமிகக் கடினம். 28 ரன்கள் எடுத்த போதே மார்டின் கப்தில், ஹென்றி நிகோல்ஸை இழந்தது நியூஸிலாந்து.

கேன் வில்லியம்சன் (85), டாம் பிளெண்டல் (106) இணைந்து மிகப்பிரமாதமான 120 ரன்கள் கூட்டணி அமைத்தனர். மற்றவர்கள் பெரிய இலக்கை விரட்டும் முயற்சியில் சிறு சிறு அதிரடி இன்னிங்ஸ்களை ஆடி வெளியேறினர்.

உதாரணமாக நீஷம் 20, கொலின் டிகிராண்ட் ஹோம் 23, சாண்ட்னர் 19, இஷ் சோதி 16 பந்துகளில் 3 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 39 என்று சிறுசிறு அதிரடி இன்னிங்ஸ்களை ஆடினர். ஆனால் கடைசி 10 ஓவர்களில் 160 ரன்கள் என்பது எந்த ஒரு டி10 போட்டியிலும் கூட அடிக்க முடியாதது, நியூஸிலாந்து 47.2 ஓவர்களில் 330 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. காட்ரெல், கிமார் ரோச், ஜேசன் ஹோல்டர் சிக்கனமாக வீசினர், ஒஷேன் தாமஸ் 6 ஓவர் 66 ரன்கள் விளாசப்பட்டார். பிராத்வெய்ட் 3 விக்கெட்டுகளையும் ஃபாபியன் ஆலன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பாகிஸ்தானுக்கு மே.இ.தீவுகள் பெரிய எச்சரிக்கை விடுத்துள்ளதோடு, மற்ற அணிகளையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது மே.இ.தீவுகள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in