

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்சை எதிர்கொள்கிறது.
இந்நிலையில், சாம்பியன்ஸ் லீக் குறித்தும் தனது அணுகுமுறை குறித்தும் பேசிய கவுதம் கம்பீர் கூறும்போது, “அமைதியாக இருந்து தோற்பதை விட, ஆக்ரோஷமாக இருந்து வெற்றி பெறுவதுதான் எனக்குப் பிடித்தமானது” என்று கூறியுள்ளார்.
"எப்போதுமே களத்தில் இறங்கும் முன்னர் நாம் வெற்றி பெறுவோம் என்றுதான் இறங்குவேன், இம்முறையும் அதுதான் எனது அணுகுமுறையாக இருக்கும். எடுத்த எடுப்பில் சாம்பியன் பட்டம் பற்றி யோசிக்கக் கூடாது, ஆனாலும் ஆழ்மனதில் அதுதான் இருக்குமென்றாலும் படிப்படியாகவே அதனைப் பற்றி யோசிப்போம்.
அதனால்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக முதல் போட்டியில் எனது கவனம் குவிந்துள்ளது.
என்னை மிகத் தீவிரமானவன் என்று பலரும் கருதுவது ஏனெனில் எனது அணுகுமுறை அவ்வாறுதான் இருந்து வந்துள்ளது, இப்போது அந்த அணுகுமுறையை மாற்றி கொள்வது கடினம்.
சமீபத்தில் ஒரு நாள் சேவாக், நெஹ்ரா மற்றும் சிலருடன் பேட்மிண்டன் விளையாடினேன், அதில் கூட வெற்றிக்காகத்தான் நான் ஆடினேன். ஆட்டத்தை மகிழ்ச்சியுடன் ஆடுவது அது இதெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை, வெற்றி பெறுவதுதான் எப்போதும் இலக்கு. நான் எப்போதுமே அப்படித்தான். ஏதாவது செய்து வெற்றி பெற வேண்டும் அதுதான் எனது விருப்பம், அமைதியாக இருந்து விட்டு தோற்பது எனக்குப் பிடிக்காது.
நான் சவாலாகத் திகழவே விளையாடுகிறேன், அங்கு நண்பர்களைச் சம்பாதிக்கவோ நல்ல முறையில் நடந்து கொள்வதோ என்னுடைய விஷயம் அல்ல. இப்படி இருக்கத்தான் எனக்குப் பிடித்திருக்கிறது.
இந்த முறை ஐபிஎல் அணிகளுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்” - இவ்வாறு கூறினார்.
செப்டம்பர் 17ஆம் தேதி ஒரு புறம் ‘கேப்டன் கூல்’ தோனி, மறுபுறம் ‘அமைதியாக இருந்து தோற்க’ பிடிக்காத கவுதம் கம்பீர், சாம்பியன்ஸ் லீக் களைக் கட்டத் தொடங்கி விட்டது என்றே கூறலாம்.