Published : 07 May 2019 07:09 PM
Last Updated : 07 May 2019 07:09 PM

மணிக்கு 150 கிமீ வேகம் வீசும் பவுலர் விலகல்: தெ.ஆ.வுக்கு பின்னடைவு; புறக்கணிக்கப்பட்ட இன்னொரு வீரருக்குஅடித்தது திடீர் லக்கி பிரைஸ்

தென் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய வேகப்பந்து வீச்சாளராகக் கருதப்படும் மணிக்கு 150 கிமீ வேகத்தில் வீசக்கூடியவருமான ஆன்ரிச் நார்ட்யே கட்டை விரல் எலும்பு முறிவினால் உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகினார்.

 

முன்னதாக உலகக்கோப்பை தென் ஆப்பிரிக்க அணிக்குத் தேர்வு செய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்ட கிறிஸ் மோரிஸ் இவரது இடத்துக்கு அழைக்கப்பட்டதால் ஆல்ரவுண்டருக்கு அடித்தது திடீர் லக்கி பிரைஸ்.

 

உலகக்கோப்பை அணியில் தேர்வான ஆன்ரிச் நார்ட்யே வலைப்பயிற்சியில் காயமடைந்ததில் வலது கை கட்டைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இவர் இனி முழு உடற்தகுதி பெற 6-8 வாரங்கள் தேவைப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

இதனையடுத்து ஓராண்டாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஆடாத ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  மோரிஸ் தற்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக ஆடிவருகிறார்.

 

நடப்பு ஐபிஎல் தொடரில் 9 ஆட்டங்களில் மோரிஸ் 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

 

உண்மையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு நார்ட்யேவினால் ஏற்பட்ட பின்னடைவை கிறிஸ் மோரிஸ் பூர்த்தி செய்வாரா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயம் என்றாலும் இங்கிலாந்து பிட்ச் உள்ளிட்ட சூழ்நிலைக்கு இவரது இறுதி ஓவர் பவுலிங்கும், கடைசியில் ஆட்டத்தை தன் பேட்டிங்கினால் வெற்றிகரமாக முடித்துக் கொடுக்கும் திறமையும் கிறிஸ் மோரிஸுக்கு உள்ளது.

 

ஏற்கெனவே காயமடைந்த ரபாடா, டேல் ஸ்டெய்ன் ஆகியோரது உடற்தகுதியை தென் ஆப்பிரிக்க மருத்துவக் குழு எச்சரிக்கையுடன் கண்காணித்து வரும் நிலையில் நார்ட்யே வெளியேற்றம் அந்த அணிக்கு இன்னொரு பிரச்சினையாகவே இருக்கும் என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x