Published : 12 May 2019 09:55 AM
Last Updated : 12 May 2019 09:55 AM

ஹைதராபாத்தில் இன்று ஐபிஎல் இறுதிப் போட்டி; 4-வது முறையாக மகுடம் சூடுவது யார்?- சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் பலப்பரீட்சை

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று இரவு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

25 பேர் கொண்ட அணியில் 30 வயதுக்கு மேற்பட்ட வீரர்கள் 11 பேர் இருப்பதாலும் தோனி, ஷேன் வாட்சன், சுரேஷ்ரெய்னா, இம்ரன் தகிர் உள்ளிட்டோர் ஒவ்வொரு ஆட்டம் முடிவடைந்ததும் தங்களது குழந்தைகளுடன் மைதானத்தில் நேரத்தை செலவழிப்பதாலும் ‘அப்பாக்களின் ஆர்மி’, ‘குழந்தைகளின் ஆர்மி’ எனரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ்அணி.

வயதான வீரர்களைக் கொண்ட அணிஎன கடந்த ஆண்டே கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில் அவற்றுக்கு கோப்பையை வென்று பதிலடி கொடுத்திருந்தது ‘அப்பாக்களின் ஆர்மி’.  இம்முறையும் அனைவரும் வியக்கும் வகையில் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தி வருகிறது. 37 வயதான தோனி இந்த சீசனில் பல்வேறு தருணங்களில் அதிரடியாக மட்டையை சுழற்றி அணிக்கு பலம் சேர்த்திருந்தார்.

இதேபோல் ஷேன் வாட்சன் (37), டு பிளெஸ்ஸிஸ் (34) ஆகியோர் சீராக ரன்கள் சேர்க்காவிட்டாலும் தகுதி சுற்று 2-ல் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக அரை சதம் அடித்து சிறந்த பங்களிப்புசெய்திருந்தனர். இந்த ஜோடியின் அபாரமான ஆட்டத்தால் 147 ரன்கள் இலக்கைதுரத்திய போது ஒரு ஓவர் மீதம் இருக்கையில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியை வசப்படுத்தியது.

டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தியதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளர்களின் பங்கும்அளப்பரியது. நடு ஓவர்களில் 35 வயதான டுவைன் பிராவோ சிறப்பாக பந்துவீசி 19 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த நிலையில் 2 விக்கெட்களை கைப்பற்றினார். அதேவேளையில் 39 வயதான இம்ரன் தகிர், 24 விக்கெட்கள் கைப்பற்றி இந்த சீசனில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் 2-வது இடம் வகிக்கிறார்.

முதலிடத்தில் உள்ள ரபாடாவை (25) எட்டிப்பிடிக்க இம்ரன் தகிருக்கு மேற்கொண்டு ஒரு விக்கெட் மட்டுமே தேவையாக உள்ளது. இன்றைய ஆட்டத்தில் அவர், அதனை எட்டக்கூடும். இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக மோதிய 3 ஆட்டங்களிலும் சென்னைசூப்பர் கிங்ஸ் அணி வெற்றியை வசப்படுத்தத் தவறியது. லீக் சுற்றில் வான்கடேமைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 37 ரன்கள் வித்தியாசத்திலும், சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 46 ரன்கள் வித்தியாசத்திலும் தோல்வி கண்டிருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

இதைத் தொடர்ந்து முதல்தகுதி சுற்று ஆட்டத்தில் சுழலுக்கு சாதகமான சேப்பாக்கம் ஆடுகளத்தில் சூர்யகுமார் யாதவ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்ந்திருந்தது. தற்போது இந்த சீசனில் 4-வது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது தோனியின் படை.

இறுதிப் போட்டிகளில் இரு அணிகளும் நேருக்கு நேராக சந்திப்பது இது 4-வது முறை. கடந்த 2013 மற்றும் 2015-ம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வென்று கோப்பையை சொந்தமாக்கியிருந்தது மும்பை இந்தியன்ஸ் அணி. முன்னதாக 2010-ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியை தோற்கடித்து பட்டம் வென்றிருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

இரு அணிகளுமே தலா 3 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. மும்பை இந்தியன்ஸ் அணியின் மற்றொரு பட்டமானதுரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக வந்ததாகும். அதேவேளையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எஞ்சிய இரு சாம்பியன் பட்டங்கள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு எதிராக கிடைக்கப்பெற்றவை.

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டுமே சாம்பியன் பட்டத்தை தக்க வைத்த பெருமையை பெற்றிருந்தது. கடந்த 2010-ம் ஆண்டு பட்டம்வென்ற நிலையில் அடுத்த சீசனிலும் கோப்பையை தக்கவைத்துக் கொண்டது. தற்போதும் சென்னை சூப்பர் கிங்ஸ்அணி நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன்தான் இறுதிப் போட்டியை சந்திக்கிறது.

லீக் சுற்றின் தொடக்கத்தில் அபாரமாக விளையாடி முதல் அணியாக பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதை உறுதி செய்திருந்த சென்னை சூப்பர்கிங்ஸ் அதன் பின்னர் சில ஆட்டங்களில் தேக்கம் அடைந்தது. இதில் இருஆட்டங்களில் முதுகு வலி காரணமாக தோனி களமிறங்காதது அணியின் செயல்திறனை வெகுவாக பாதித்திருந்தது.

ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி இந்த சீசனை மெதுவாக தொடங்கிய நிலையில் பிற்பகுதியில் எழுச்சி கண்டு 18 புள்ளிகளுடன் லீக் சுற்றில் முதலிடம் பிடித்து வியக்க வைத்தது. தொடக்க பேட்டிங்கில் 4 அரை சதங்களுடன் 500 ரன்கள் வேட்டையாடி உள்ள குயிண்டன் டி காக், பவர் பிளேவில் அதிரடியாக விளையாடுவது பலம் சேர்க்கிறது. தகுதி சுற்று 1-ல் அரை சதம் எடுத்து பார்முக்கு திரும்பியுள்ள ரோஹித் சர்மா மீண்டும் ஒரு முறை மட்டையை சுழற்ற ஆயத்தமாக உள்ளார்.

இவர்களுடன் 20 வயதான இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், கிருணல் பாண்டியா ஆகியோரும் பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர். இறுதி கட்ட ஓவர்களில்

வலுவான ஷாட்கள் மேற்கொள்ளக்கூடிய ஹர்திக் பாண்டியா, கெய்ரன் பொலார்டு ஆகியோர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளர்களுக்கு சவால் தரக்கூடும்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

மகேந்திர சிங் தோனி (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, ஷேன் வாட்சன், டு பிளெஸ்ஸிஸ், முரளி விஜய், சேம் பில்லிங்ஸ், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஷோரே, சைதன்யா பிஷ்னோய், ரிதுராஜ் கெய்க்வாட், டுவைன் பிராவோ, கரண் சர்மா, இம்ரன் தகிர், ஹர்பஜன் சிங், மிட்செல் சாண்ட்னர், ஷர்துல் தாக்குர், மோஹித் சர்மா, கே.எம்.ஆஷிப், ஸ்காட் குக்கேலீன், தீபக் ஷகார், என்.ஜெகதீசன்.

மும்பை இந்தியன்ஸ்

ரோஹித் சர்மா (கேப்டன்), குயிண்டன் டி காக், எவின் லீவிஸ், ஹர்திக் பாண்டியா, கிருணல் பாண்டியா, கெய்ரன் பொலார்டு, யுவராஜ் சிங், சூர்யகுமார் யாதவ், லஷித் மலிங்கா, மயங்க் மார்க்கண்டே, பென் கட்டிங், ஜஸ்பிரித் பும்ரா, ராகுல் ஷகார், பங்கஜ் ஜெய்ஸ்வால், இஷான் கிஷன், சித்தேஷ் லாட், மிட்செல் மெக்லீனஹன், பியூரன் ஹெண்ட்ரிக்ஸ், அனுகுல் ராய், ரஷிக் சலாம், அன்மோல்பிரீத், பரிந்தர் சரண், ஆதித்யா தாரே, ஜெயந்த் யாதவ்.

நேரம்: இரவு 7.30

இடம்: ஹைதராபாத்

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x