

இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகளில் திக்கித் திணறிய புஜாரா, கவுண்ட்டி கிரிக்கெட்டில் ஆடினால் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று நம்பி டெர்பிஷயர் அணிக்கு விளையாடச் சென்றார்.
டெர்பிஷயர் அணிக்காக அவர் ஆடிய முதல் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டம் பற்றி இங்கிலாந்து ஊடகத்தில் வெளிவந்த செய்தியின் விவரம் வருமாறு:
கிளாமர்கன் அனிக்கு எதிராக நேற்று புஜாரா 7 ரன்களில் ஜிம் ஆலென்பி என்பவரது பந்தில் எல்.பி.ஆகி ஏமாற்றமளித்தார். கிளாமர்கன் அணிக்காக ஆலென்பி 200 முதல் தர கிரிக்கெட் விக்கெட்டுகளை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தம் 27 நிமிடங்களே நின்ற புஜாரா 26 பந்துகளில் 7 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
முதல் நாள் ஆட்டத்தில் கிளாமர்கன் பேட்டிங் செய்ய சுமார் 90 ஓவர்கள் ஃபீல்டிங் செய்தனர் டெர்பி அணியினர். நேற்று டெர்பி 45/2 என்ற நிலையில் புஜாரா களமிறங்கினார்.
ஒரு கவர் டிரைவ் பவுண்டரி அடித்தார். பிறகு 3 சிங்கிள் எடுத்தார். 7 ரன்கள் எடுத்த போது ஆலன்பி பந்தில் கிரீஸில் நின்றபடியே ஆடி எல்.பி. ஆனார்.
ஆனால் இது அவரது முதல் போட்டியே என்றும் போகப்போக அவர் சிறப்பாக ஆடிவிடுவார் என்றும் டெர்பி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் 1991 சீசனில் இந்தியவின் மொகமது அசாருதீன் இதே டெர்பி அணிக்காக 2016 ரன்களை 7 சதங்கள் அடித்ததையும் அது குறிப்பிட்டுள்ளது.
மேலும் சேவாக் ஒரு முறை லீசெஸ்டர் ஷயர் அணிக்கு ஆடும்போது ரிவர்ஸ் ஸ்விங் பந்தை ஆதிக்கம் செலுத்த அந்தப் பந்துகளில் ஓரிரண்டை மைதானத்தை விட்டு வெளியே அடித்தார், புஜாரா நிச்சயம் அது போன்ற வீரர் இல்லை, அவர் மெதுவே தனது உத்தியை வளர்த்தெடுத்துக் கொண்டு ஆடுபவர் ஆகவே அவர் மீது நம்பிக்கை இருக்கிறது என்கிறது டெர்பி நிர்வாகம்.