Published : 09 May 2019 03:48 PM
Last Updated : 09 May 2019 03:48 PM

பவுலர் யாராக இருந்தால் என்ன?.. அடிப்பது உடலோடு ஊறிப்போனது: ரிஷப் பந்த்

சிக்சர்கள் அடிப்பது  ‘எனக்கு கைவந்த கலை’,  ‘கண் பார்க்கும்  மட்டை சுழலும்’ என்றெல்லாம் பெரிய ஹிட்டர்கள் கூறுவதைக் கேட்டிருக்கிறோம், ஆனால் ரிஷப் பந்த் புதிதாக “தசை நினைவு” என்ற ஒன்றைக் கூறுகிறார். அதாவது உடலோடு ஊறிப்போனது என்று நாம் சில நடத்தைகளை விவரிப்போமே அதுபோல் கூறுகிறார் போலும் ரிஷப் பந்த்.

 

நேற்று டெல்லி அணியை ஒரே ஓவரில் ப்ளே ஆஃப் 2வது தகுதிச்சுற்றுக்கு இட்டுச் சென்ற ரிஷப் பந்த் 5 சிக்சர்களை நேற்று விளாசினார், மொத்தம் ஐபிஎல் கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சாளர்களை மட்டும் 15 சிக்சர்கள் அடித்துள்ளார் ரிஷப் பந்த்.

 

இந்நிலையில் நேற்று அவரிடம் கேரளா பவுலர் பாசில் தம்பி சிக்கினார், அவர் இடது கை வீரர்களின் பலவீனமான ஓவர் த விக்கெட்டில் வீசி பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே உடலின் குறுக்காக எடுத்திருக்க வேண்டும், ஆனால் இந்தக் காலத்து இளம் பவுலர்களின் குருட்டு பலவீனமான ரவுண்ட் த விக்கெட்டைத் தேர்வு செய்ய ரிஷப் பந்த் 2 சிக்சர்கள், 2 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் விளாசித்தள்ள டெல்லி கேபிடல்ஸ் பக்கம் வெற்றி சாய்ந்தது.

 

இதனையடுத்து ஆட்ட நாயகன் விருது பெற்ற ரிஷப் பந்த் கூறியதாவது:

 

டி20 கிரிக்கெட்டில் 20 பந்துகளில் 40 வேண்டுமென்றால் ஒரு பவுலரை தாக்கி ஆடத்தான் வேண்டும். யார் பவுலர் என்றெல்லாம் நான் பார்ப்பதில்லை. இது எங்களின் தசை நினைவில் இருப்பது, அதற்காகத்தான் அவ்வளவு பிராக்டீஸ் செய்கிறோம்.

 

எனக்கு அதுதான் சிறப்பாக அமைந்தது, நான் பந்தை கடுமையாக அடிக்க முயற்சி செய்ய மாட்டேன். பந்தைக் கவனித்து அதனை சரியான டைமிங்கில் ஆட வேண்டும். அதைத்தான் செய்கிறேன்.

 

இது போன்ற பிட்ச்களில் ஒரு முறை நிலைத்து நின்று விட்டால் ஆட்டத்தை வெற்றியாக முடித்து கொடுக்க வேண்டும், நான் நெருக்கமாக எடுத்துச் சென்றேன், ஆனால் அடுத்த முறை வெற்றிபெற்றுவிட்டுத்தான் உள்ளே வருவேன்.

 

இவ்வாறு கூறுகிறார் ரிஷப் பந்த்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x