Published : 10 May 2019 05:08 PM
Last Updated : 10 May 2019 05:08 PM

ஸ்டீவ் ஸ்மித் 91 நாட் அவுட்: நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி பயிற்சி ஆட்டத்தில் ஆஸி. வெற்றி

பிரிஸ்பனில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடருக்கு முந்தைய பயிற்சி ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் 91 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ நியூஸிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா.

 

50 ஓவர்களில் நியூஸிலாந்து 286 ரன்களை எடுக்க தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 44 ஓவர்களில் 248/5 என்று டக்வொர்த் லூயிஸ் முறையில் வென்றது. ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால் டக்வொர்த் கணக்கீட்டு முறையில் ஆஸ்திரேலியா வென்றது.

 

பந்தை வேண்டுமென்றே சேதப்படுத்தியக் குற்றச்சாட்டில் ஓராண்டு தடை அனுபவித்து விட்டு மீண்டும் அணிக்குத் திரும்பிய ஸ்டீவ் ஸ்மித் இரண்டாவது சிறந்த இன்னிங்சை ஆஸ்திரேலியாவுக்காக ஆடியுள்ளார்.

 

சர்வதேச போட்டியாகக் கருதப்படாவிட்டாலும் முதல் ஆட்டத்தில் 89 ரன்களையும் இன்று 91 ரன்களையும் அவர் எடுத்தது ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

டேவிட் வார்னர், ஐபிஎல் கிரிக்கெட்டில் கலக்கினார், ஆனால் இந்த பயிற்சி ஆட்டங்களில் டக், 39 பிறகு 2 என்று சொதப்பிவிட்டார். அதே போல் பார்மில் இருக்கும் இன்னொரு அச்சுறுத்தல் வீரர் கிளென் மேக்ஸ்வெல், அவர் அன்று சரவெடி 52 ரன்களை எடுத்த பிறகு இன்று 48 பந்துகளில் 70 ரன்களை விளாசித்தள்ளினார்.

 

ஆனால் நியூஸிலாந்தில் இதுவரை கேள்விப்படாத வில் யங் என்ற வீரர் டாப் கிளாஸ் ஆஸி. பவுலிங்குக்கு எதிராக மீண்டும் தொடர்ச்சியாக 2 வது சதத்தை எடுத்து அதிர்ச்சியளித்தார்.

 

இவர் கடந்த போட்டியில் 130 ரன்கள் எடுத்தார் பிறகு இன்று 111 ரன்களை எடுத்தார். குறிப்பாக சதத்தை மிட்விக்கெட்டில் புல்ஷாட்டில் சிக்ச் மூலம் கடந்து அதிசயிக்க வைத்தார் வில் யங், ஆனால் இவர் நியூஸிலாந்தின் உலகக்கோப்பை அணியில் இடம்பெறவில்லை. 

 

ஆஸ்திரேலியா தரப்பில் பாட் கமின்ஸ் 8 ஓவர்கள் வீசி 32 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.  இந்தத் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்று வெற்றி பெற்றுள்ளது.

 

உலகக்கோப்பைக்கு முன்பாக இங்கிலாந்தில், இலங்கை மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக 2 பயிற்சியாட்டங்களில் ஆடும் ஆஸ்திரேலியா உலகக்கோப்பை முதல் போட்டியில் ஜூன் 1ம் தேதி ஆப்கானிஸ்தானைச் சந்திக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x