கிண்டல் பற்றி எனக்கு கவலையில்லை: ஸ்டீவ் ஸ்மித் பேட்டி

கிண்டல் பற்றி எனக்கு கவலையில்லை: ஸ்டீவ் ஸ்மித் பேட்டி
Updated on
1 min read

ரசிகர்கள என்னை எப்படி கிண்டல் செய்தாலும் பரவாயில்லை எனக்கு என் அணி வீரர்களின் ஆதரவு இருக்கிறது, எனக்குரிய கடமையைச் செய்வேன் என்று ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஒரு ஆண்டு தடைக்குப்பின் மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித், வார்னர் திரும்பியுள்ளார்கள். இருவரும் தங்களின் அணிக்காக முதல்முறையாக நேற்று இங்கிலாந்துக்கு எதிராக பயிற்சிப் போட்டியில் களமிறங்கினார்கள்.

அப்போது இங்கிலாந்தின் பார்மி ஆர்மி என்ற ரசிகர்கள் குழு ஸ்மித், வார்னர் களமிறங்கியபோது, ஏமாற்றுக்காரா, என்று கூறி கிண்டல் செய்தனர். இதனால் இருவரும் சற்று பதற்றத்துடன் பேட்செய்தார்கள். இதில் வார்னர் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்மித் சதம் அடித்து 116 ரன்களில் வெளியேறினார்.

இந்த போட்டியில் ரசிகர்கள் கிண்டல் குறித்து ஸ்டீவ் ஸ்மித் நிருபர்களிடம் கூறுகையில், " நான் களத்தில் இறங்கியபோது, ரசிகர்கள் சிலர் தேவையில்லாத வார்த்தைகளை பேசினார்கள். அதை நானும் கேட்டேன். ஆனால், அதைப் பற்றி கவலைப்படவில்லை. நான் என் தலையை குனிந்து நடந்து சென்று என் வேலையைச் செய்தேன்.  எனக்கு என்னுடைய அணியினர் ஆதரவு இருக்கும் வரை ரசிகர்களின் கிண்டல் பேச்சு குறித்து எனக்கு கவலையில்லை.

நடுவரிசையில் களமிறங்கி என்னால் முடிந்த அளவு என் அணிக்காக விளையாடி பெருமை சேர்ப்பேன். ஆஸ்திரேலிய மக்களை மீண்டும் தலைநிமிரும்படி என்னால் முடிந்த  பங்களிப்பைச் செய்வேன்.

எனக்கு முதல்பயிற்சிப்போட்டியே நல்லவிதமாக அமைந்துவிட்டது. அதில் அணிக்காக சதம் அடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. உலகக்கோப்பைப் போட்டியின் போது, அணியில் நடுவரிசையில் அதிகநேரம் களத்தில் நின்றால்தான் ரன்களை குவிக்க முடியும் " எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in