

உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் வேகப்பந்துவீச்சாளர் ஜூனைத் கான், வாயில் கறுப்புநிற டேப் ஒட்டி தனது எதிர்ப்பைத் தெரிவித்தார்.
இங்கிலாந்துக்கு பயணம்மேற்கொண்ட பாகிஸ்தான் அணி அந்நாட்டுடனான ஒருநாள் தொடரை 4-0 என்ற கணக்கில் இழந்தது. இந்த தொடரில் வேகப்பந்துவீச்சாளர் ஜூனைத் கான் மட்டுமின்றி, பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் அனைவருமே மிக மோசமாக பந்துவீசினார்கள்.
இதனால் பந்துவீச்சு பலவீனமாக இருப்பதை உணர்ந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தேர்வுக் குழுவினர் 15 வீரர்கள் கொண்ட அணியில் மாற்றம் செய்தார்கள்.
உலகக்கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்துவீச்சாளர் ஜூனைத் கான் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக மூத்த வேகப்பந்துவீச்சாளர் முகமது அமீர் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்த தேர்வுக்குழுத் தலைவர் இன்ஜமாம் உல் ஹக் கூறுகையில் " ஜூனைத் கானை நீக்கியது எனக்கு வருத்தமளிக்கிறது என்கிறபோதிலும் கடினமான முடிவை எடுக்க வேண்டியதருணம். இங்கிலாந்து ஆடுகளங்களில் ஜூனைத் கானின் வேகப்பந்துவீச்சு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. அதனால், அனுபவம்மிகுந்த முகமது அமீர், வஹாப் ரியாஸ் சேர்க்கப்பட்டுள்ளனர் " எனத் தெரிவித்தார்.
இந்த அறிவிப்புக்குப் பின், வேகப்பந்து வீச்சாளர் ஜூனைத் கான் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு புகைப்படம் வெளியிட்டு தனது மறைமுக எதிர்ப்பைப் பதிவு செய்தார். ஜூனைத்தான் தனது வாயில் கறுப்பு நிற டேப்பை ஒட்டிய புகைப்படத்தை அதில் பதிவி்ட்டார். அதன் கீழ் " நான் எதுவும் சொல்ல விரும்புவில்லை. உண்மை கசக்கும்" என்று தெரிவித்திருந்தார்.