Published : 18 May 2019 03:12 PM
Last Updated : 18 May 2019 03:12 PM

மொசாடெக் ஹுசைன் 20 பந்துகளில் 50: மே.இ.தீவுகளை வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற்ற வங்கதேசம்

அயர்லாந்தில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரில் அயர்லாந்து, வங்கதேசம், மே.இ.தீவுகள் அணி பங்கேற்றன, இதில் இறுதிக்குத் தகுதி பெற்ற வங்கதேச, மே.இ.தீவுகள் நேற்று கோப்பைக்காக மோதின, இதில் டக் ஒர்த் லூயிஸ் முறையில் வங்கதேச அணி மே.இ.தீவுகளை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 7 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்று, முதன் முதலாக முத்தரப்பு தொடர் ஒன்றில் இறுதிப்போட்டியில் வென்று வரலாறு படைத்தது வங்கதேசம்.

 

முதலில் பேட் செய்த மே.இ.தீவுகள் 24 ஓவர்களில் 152/1 என்று இருந்த போது மழை காரணமாக அந்த இன்னிங்ஸ் முடிக்கப்பட்டது. ஷேய் ஹோப் 64 பந்துகளில் 6 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 74 ரன்கள் எடுக்க சுனில் ஆம்ப்ரிஸ் 78 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 69 ரன்களை எடுத்தார்.

 

வங்கதேசத்துக்கு டக்வொர்த் லூயிஸ் முறைப்படி திருத்தப்பட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் 24 ஓவர்களில் 210 எடுத்தால் வெற்றி என்று மாற்றப்பட்டது. இதனை 7 பந்துகள் மீதம் வைத்து 213/5 என்று வெற்றி பெற்றது.

 

இலக்கை விரட்டும் போது சவுமியா சர்க்கார் தொடரில் தன் 3வது அரைசதத்தை எடுத்தார், இவர் 41 பந்துகளில் 9 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 66 ரன்கள் எடுக்க இலக்கை நோக்கி வங்கதேசம் அதிவேக தொடக்கம் கண்டது.

 

ஆனால் ஷனான் கேப்ரியல் (2/30) ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி மே.இ.தீவுகள் வாய்ப்பை அதிகரித்தார். இன்னொரு பவுலர் ரெய்மன் ரெய்ஃபர் 23 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், இவர் சவுமியா சர்க்காரையும், முஷ்பிகுர் ரஹீமையும் (22 பந்துகளில் 36)  வீழ்த்த வங்கதேசம் 143/5 என்று தடுமாறியது.

 

கடைசி 8 ஓவர்களில் 68 ரன்கள் தேவை என்ற நிலையில் மொசாடெக் ஹுசைன் இறங்கி மே.இ.தீவுகள் பந்து வீச்சை நாலாப்பக்கமும் சிதறடித்து 24 பந்துகளில் 52 ரன்கள் விளாசினார், இதில் 2 பவுண்டரிக்ள் 5 சிக்சர்கள் அடங்கும்.  இந்த 5 சிக்சர்களில் 3 சிக்சர்களை 22வது ஓவரில் மொசாடெக் அடிக்க இலக்கு எளிதானது. ஃபாபியன் ஆலன் வீசிய இந்த ஓவரில் 3 சிக்சர்கள் 1 பவுண்டரியை விளாசித்தள்ளினார் மொசாடெக். மஹமுதுல்லா ஒரு அபாரமான கவர் ட்ரைவ் மூலம் பவுண்டரி விளாசி வெற்றி ரன்களைக் குவித்தார்.

 

 

மொசாடெக் ஹுசைன் 20 பந்துகளில் அரைசதம் கண்டது மூலம் வங்கதேச புதிய அதிவேக ஒருநாள் அரைசத சாதனையை நிகழ்த்தினார்.

 

இந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் வங்கதேசம் தோற்கவேயில்லை, ஒரேயொரு போட்டி வாஷ் அவுட் ஆனது.

 

வெஸ்ட் இண்டீஸ் பீல்டிங், பவுலிங் மோசமாக அமைந்தது. பவுலர்கள் அதிக வைடுகளை கொடுத்தனர்.

 

ஆட்டநாயகனாக மொசாட்கெ ஹுசைனும், தொடர் நாயகனாக ஷேய் ஹோப்பும் தேர்வு செய்யப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x